Saturday, November 15, 2014

தமிழர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

நேற்று காலை 9.50 மணிக்கு ‘தந்தி’ டி.வி. நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. இலங்கை மந்திரி செந்தில் தொண்ட மானுடன், ‘தந்தி’ டி.வி. செய்தியாளர் நடத்திய உரையாடல் ஒளிபரப்பப்பட்டது. அதில், இலங்கை மந்திரி போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 தமிழக மீனவர்களை விடுதலை செய்வது பற்றி, இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசினார். மீனவர்களை விடுவிக்கக்கோரி ராஜபக்சேயுடன், அமைச்சர் ஆறுமுக தொண்டமானும் பேசினார். 

அதற்கு மதிப்பளித்து ராஜபக்சே, மீனவர்களை விடுவிக்க உத்தரவிட்டிருப்பதாகவும், இந்திய அரசு தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு மனு வாபஸ் பெறப்பட்ட பிறகு, மீனவர்களை விடுவிக்கும் அதிகாரபூர்வ நடவடிக்கைகள் தொடங்கும் என்றும் ஆறுமுக தொண்டமானிடம், ராஜபக்சே கூறியுள்ளார். இதையடுத்து 2 அல்லது 3 நாட்களில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, இந்தியா திரும்பி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று செந்தில் தொண்டமான் பேசியதும், கொஞ்ச நேரத்தில் இந்த செய்தி சுனாமி வேகத்தில் தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் வேகமாக பரவியது. மீனவர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாடே ஆனந்த கூத்தாடியது.

2011–ம் ஆண்டு நவம்பர் மாதம் 28–ந் தேதி ராமேசுவரத்தில் இருந்து தங்கச்சி மடத்தைச் சேர்ந்த எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகியோர் வங்காள விரிகுடா கடலில் மீன் பிடிக்கச்சென்றனர். அப்போது அவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்தனர். முதலில் இலங்கை கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்துவிட்டதாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டினர். பிறகு என்ன நிர்ப்பந்தமோ அல்லது என்ன தூண்டுதலோ தெரியவில்லை. அவர்கள் 5 பேரும் ஹெராயின் என்ற போதைப்பொருள் வைத்திருந்ததாக கடுமையான சட்டங்களின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு, இலங்கை அதிபர் ராஜபக்சே வருவதற்கு முன்பு, சிறையில் இருந்த அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்ய நல்லெண்ணத்தின் அடிப்படையில் உத்தரவிட்டபோது, அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், அந்த நேரத்தில் இந்த 5 மீனவர்களும் விடுதலை செய்யப்படாததால், இது முழுமையான மகிழ்ச்சியாக இருக்கவில்லை. இந்த
5 மீனவர்களையும் விடுதலை செய்யவேண்டும் என்று கோரிக்கை வலுப்பெற்றிருந்த நிலையில், கடந்த மாதம் 30–ந்தேதி அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப் பட்டுள்ளதாக வந்த தீர்ப்பு, இடிவிழுந்ததுபோல இருந்தது. தமிழ்நாடு முழுவதும் கொதித்து எழுந்தது. ஒட்டுமொத்த கண்டன குரல் மட்டுமல்லாமல், அவர்களை விடுதலை செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என எல்லோரும் கோரிக்கைவிடுத்தனர்.

1976–ம் ஆண்டுக்கு பிறகு, இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட யாருக்கும் அந்த தண்டனை நிறைவேற்றப்படவில்லை. எனவே, இந்த 5 மீனவர்களும் நிச்சயமாக தூக்குமேடைக்குச் செல்லமாட்டார்கள் என்று எத்தனையோ உறுதிமொழிகள் சொல்லப்பட்டாலும், அது யாருக்கும் மனநிறைவு அளிக்கவில்லை. உடனடியாக இந்த தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்ய தமிழக அரசு, இந்திய தூதரகத்துக்கு ரூ.20 லட்சம் அனுப்பியது. இலங்கை உச்சநீதிமன்றத்திலும் அப்பீல் செய்யப்பட்டது.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி பேசி, இலங்கை ஜனாதிபதி என்ற முறையில் ராஜபக்சே தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்ய வைப்பதுதான் சிறந்தவழி என்று எல்லோரும் பிரதமருக்கு முறையீடு விடுத்தனர். பிரதமர் நரேந்திர மோடியும் வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்கு முன்பு ராஜபக்சேயிடம் டெலிபோனில் பேசி, 5 மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்துசெய்ய வேண்டும் என்று கூறினார்.

நரேந்திர மோடியின் கோரிக்கைக்கு மதிப்பளித்து, தூக்கு தண்டனையை ரத்துசெய்வதாக அறிவித்துள்ளார். ஆக, பிரதமரின் ராஜ்ய உறவுதான் வெற்றி பெற்று இருக்கிறது. இதே நல்லெண்ணத்தையும், ராஜ்ய உறவையும் உரியமுறையில் பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மீனவர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரு நிரந்தர தீர்வுகாண வேண்டும். அந்த தீர்வு, இனியும் மீனவர்கள் கைது என்ற நிலை இல்லாத அளவில் இருக்க வேண்டும், அதை நரேந்திர மோடிதான் செய்யவேண்டும் என்று தமிழ்நாடு எதிர்பார்க்கிறது.

Source: daily thanthi

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024