சென்னையில், தொடர் மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கோயம்பேடு மார்க்கெட் சகதிக் காடாக மாறியது.
வடகிழக்கு பருவமழை
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் 2 நாட்களாக இரவு, பகலாக விட்டு,விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.
தொடர் மழை காரணமாக கோயம்பேடு 100 அடி சாலை, தியாகராயநகர் வடக்கு உஸ்மான் சாலை, அண்ணா சாலை, அண்ணாநகர் சிந்தாமணி சாலை, தரமணி சர்வீஸ் சாலை, மாதவரம் நெடுஞ்சாலை, புழல் பைபாஸ் சாலை, கே.கே.நகர் ராஜாமன்னார் சாலை, வேளச்சேரி பிரதான சாலை உள்பட நகரின் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது.
சேதமடைந்த சாலைகள்
இந்த சாலைகளில் வாகனங்கள் வெள்ளத்தில் மிதந்து சென்றன. சில வாகனங்கள் மழைநீரில் சிக்கி பழுதடைந்தன. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள். மெரினா கடற்கரை மணற்பரப்பில் மழைநீர் குளம் போல் தேங்கி இருக்கிறது. இதில், சிறுவர்கள் குளித்து மகிழ்ந்தனர்.
சென்னை அம்பத்தூர், புளியந்தோப்பு, வேளச்சேரி, மூலக்கடை, எருக்கஞ்சேரி, புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்பட நகரின் பெரும்பாலான இடங்களில் சாலைகள் கரடு, முரடாகவும், குண்டும், குழியுமாகவும் மாறியது. இந்த குழிகளில் மழைநீரும் தேங்கி போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்
கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் மழைநீர் ஆங்காங்கே குளம்போல் தேங்கி, சகதிக் காடாக மாறி உள்ளது. இதனால் கோயம்பேடு மார்க்கெட் வாடிக்கையாளர்கள் இன்றி வெறிச்சோடியது. பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் யாரும் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் சுமார் 200 படகுகள் பட்டினப்பாக்கம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
எழும்பூர் நீதிமன்ற வளாகத்தை சுற்றிலும் மழைநீர் தேங்கி உள்ளது. விருகம்பாக்கம் காவிரி நகர், அண்ணாமலை காலனி, லோகையா தெரு, வேளச்சேரி ராம் நகர், தாசில்தார் அலுவலகம் உள்பட நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் குடியிருப்புவாசிகளின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் பழமையான ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது.
ஏரிகளின் நீர்மட்டம்
சென்னை நகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துவருகிறது.
கடந்த 10–ந்தேதி, 274 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு இருந்த பூண்டி ஏரியில், கடந்த 2 நாட்களில் 60 மில்லியன் கன அடி தண்ணீர் அதிகரித்தது. சோழவரம் ஏரியில் 58 மில்லியன் கன அடி தண்ணீரும், புழல் ஏரியில் 90 மில்லியன் கன அடி தண்ணீர் அதிகரித்து, 1,116 மில்லியன் கன அடி தண்ணீரும் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 52 மில்லியன் கன அடி தண்ணீர் அதிகரித்து, 1,214 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.
வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது
புழல் அடுத்த லட்சுமிபுரம் ஆசிரியர்கள் காலனி, வெங்கடேஸ்வரா நகர், சாரதி நகர், ஆதிலட்சுமி நகர், முகாம்பிகை நகர், பிரகாஷ் நகர், பொன்னியம்மன்மேடு ஆகிய பகுதிகளில் 100–க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. தேங்கி இருக்கும் மழைநீரை ஜே.சி.பி. மூலம் வெட்டி வெளியேற்றினார்கள்.
திருவொற்றியூர், எண்ணூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பல இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. கார்கில்நகர், ராஜாஜிநகர் பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பலர் வீடுகளை பூட்டிவிட்டு உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். எர்ணாவூர் பகுதிகளிலும் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
3 மரங்கள் விழுந்தது
விருகம்பாக்கம் பாலாஜி நகரில் மரம் ஒன்று முறிந்து மின்சார வயர்கள் மீது விழுந்தது. இதனால் மின்சார வயர்கள் அறுந்து சில மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. விருகம்பாக்கம், அபுசாலி சாலையில் 2 மரங்கள் முறிந்து விழுந்தன. தீயணைப்பு வீரர்கள் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.
பரங்கிமலை, பழவந்தாங்கல், தில்லைகங்கா நகர் ஆகிய சுரங்கப்பாதைகளில் தேங்கி இருந்த மழைநீர் உடனுக்குடன் மோட்டார் மூலம் அகற்றப்பட்டது. நங்கநல்லூரில் 4 மரங்கள் விழுந்தன. கத்திப்பாரா மேம்பாலத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment