சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோ முதலாளியும் டைரக்டருமான டி.ஆர்.சுந்தரம் நேரந்தவறாமையைக் கடைப்பிடிப்பதில் பிடிவாதம் கூடிய தொழில்பக்தி கொண்டவர். ஸ்டூடியோவுக்குள் அவரது கார் நுழையும்போது, சரியாகக் காலை 9.30 மணி என்று அர்த்தம். எதற்காகவும் யாருக்காகவும் காத்திருக்கமாட்டார். நடக்கவேண்டிய வேலைகள் குறிப்பிட்ட நேரத்தில் முடிந்தே ஆகவேண்டும்.
எம்.ஜி.ஆர் நடித்த ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படம் உருவாகிக்கொண்டிருந்த நேரம் அது. தென்னிந்தியாவிலேயே முதல்முறையாகக் கேவா கலரில் எடுக்கப்பட்ட இந்தப்படத்துக்கு டபிள்யூ.ஆர். சுப்பாராவ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். நான்கு இடங்களில் போடப்பட்ட அலிபாபா குகையை வடிவமைத்தவர் ஏ.ஜே.டோமினிக். இயக்கியவர் டி.ஆர்.சுந்தரம்.
வில்லன் வீரப்பாவும் அவரது ஆட்களும் வரும் குதிரைச்சவாரி காட்சிகள் இந்தப்படத்தில் பிரம்மாண்ட மாக இருக்கும். அதற்காக மைசூர் ரிசர்வ் போலீஸ் அதிகாரிகளுடன் பேசி, குதிரைகளை வரவழைத்துப் படப்பிடிப்பை நடத்தினார் டி.ஆர்.எஸ். சில நாட்களில் அதிகாரிகள் குதிரைகளைப் படப்பிடிப்புக்கு அனுப்புவதில் காலதாமதம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்துவிட்டு, இருபது குதிரைகளைச் சொந்தமாக வாங்கிப் படப்பிடிப்பு நடத்திவந்தார்.
அலிபாபாவாக நடிக்கும் எம்.ஜி.ஆர் “அல்லாவின்மீது ஆணையாக…’’என்று வசனத்தைத் தொடங்கவேண்டும். அது அவர் தி.மு.கவில் இருந்த காலகட்டம். அதனால், அல்லா என்று சொல்வதற்குத் தயங்கினார். ‘’இதற்குப்பதிலாக ‘அம்மாமீது ஆணையாக’ போட்டுப் பேசுகிறேனே’’ என்று வசனகர்த்தா ஏ.எல்.நாராயணனிடம் கேட்டார். ‘’அதெல்லாம் முடியாது. முதலாளியிடம் பேசிக்கொள்ளுங்கள்’’ என்று சொல்லிவிட்டார் அவர்.
கேமரா ஓடிக் கொண்டிருக்கிறது. “அம்மாவின்மீது ஆணையாக இந்த அலிபாபா’’ என்று எம்.ஜி.ஆர். முடிப்பதற்குள் அவசரமாக “கட் கட்’’ என்று கோபமாகக் கத்தினார் படத்தின் டைரக்டரான டி.ஆர். சுந்தரம். “என்ன ராமச்சந்திரன்! பேசவேண்டியதை விட்டு விட்டு, சொந்தமாக எதையோ சொல்கிறாய்?’’ என்று கேட்டதும், “அம்மா என்று போட்டால் நன்றாக இருக்குமே முதலாளி ’’ என்பது எம்.ஜி.ஆரின் பதிலாக இருந்தது. “அதெல்லாம் முடியாதப்பா! நம்ம அலிபாபாவுக்கு, அல்லாதான் வேண்டும். இந்த இடத்தில் நீ சொல்கிறபடி அம்மா என்று சேர்ப்பதெல்லாம் சரிப்பட்டு வராது’’ என்று டி.ஆர்.சுந்தரம் பிடிவாதமாகச் சொல்லிவிட்டார். மறுபடியும் கேமரா ஓடுகிறது. “அல்லாவின்மீது ஆணையாக இந்த அலிபாபா..’’ என்று தொடங்கி முழு வசனத்தையும் எம்.ஜி.ஆர் பேசிமுடிக்க, டே ‘ஓ.கே’ ஆகிறது.
படத்தின் பெரும்பகுதி காட்சிகள் முடிந்துவிட்ட நிலையில், சிலநாட்கள் கழித்து, மீதிக்காட்சிகளுக்கான படப்பிடிப்பை நடத்த டி.ஆர்.சுந்தரம் திட்டமிட்டார். சண்டைக்காட்சிக்கு எம்.ஜி.ஆர் வரவேண்டும். பாடல் காட்சிக்கு எம்.ஜி.ஆரும் பானுமதியும் தேவை. படப்பிடிப்பு நாளன்று எம்.ஜி.ஆர் வரவில்லை. ‘இன்று படப்பிடிப்பு இருக்காது’ என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். நடிகர் கரடிமுத்துவை அழைத்துவரும்படி
டி.ஆர்.சுந்தரம் உத்தரவிட, அவர் வந்துநின்றார். சண்டைக் காட்சியிலும், பானுமதியுடன் டூயட் காட்சியிலும் கரடிமுத்து நடிக்க, முழுப் படப்பிடிப்பும் முடிந்தது.
சிலநாட்கள் கழித்து ஸ்டுடியோவுக்கு வந்த எம்.ஜி.ஆர், ‘’எப்போ முதலாளி ஷூட்டிங்?’’ என்று கேட்க, ‘’அதெல்லாம் முடிஞ்சு போச்சு ராமச்சந்திரா! வா! படத்தைப் பார்க்கலாம்’’ என்று அழைத்துச்சென்று காட்டியிருக்கிறார். எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாக இருந்தது. டூ நடிகர் நடித்ததைப்போலவே தெரியவில்லை. எதிரியோடு எம்ஜி.ஆர் மோதுவதாகவும், பானுமதியுடன் பாடுவதாகவும் காட்சிகள் இருந்தன. எம்.ஜி.ஆர். எதுவும் பேசாமல் வெளியேறிவிட்டார்
காலண்டர்கள் மாறின. டி.ஆர்.சுந்தரத்தின் மகன் ராமசுந்தரத்துக்கு ‘கலைமாமணி’ விருது வழங்கி கவுரப்படுத்தினார் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்.
No comments:
Post a Comment