Friday, November 14, 2014

கருத்தடையிலும் மனத்தடை!



சத்தீஸ்கர் மாநிலத்தில், ஒரு கிராமத்தில் அரசு நடத்திய கருத்தடை அறுவைச் சிகிச்சை முகாமில் 15 பெண்கள் இறந்திருக்கும் சம்பவம் வேதனைக்குரியது. இத்தகைய சம்பவங்கள் நாடு முழுவதிலும் பெண்கள் மனதில் அச்சத்தை விதைக்கும். கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்துகொள்வதில் தயக்கத்தை ஏற்படுத்துவதோடு குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையும் உருவாகும்.

இந்தியாவில் அரசு அறுவைச் சிகிச்சை முகாம்கள், கண்புரை அறுவைச் சிகிச்சை என்றாலும் கருத்தடை என்றாலும், எவ்வளவு அலட்சியமாக நடத்தப்படுகின்றன என்பதற்கு இது மற்றுமொரு சான்று. இரு ஆண்டுகளுக்கு முன்பு, கருத்தடை செய்யப்பட்ட பெண்கள் மயக்கம் தெளியாத நிலையில், திறந்தவெளியில் கிடத்தப்பட்ட விடியோ காட்சிகள் வெளியாகி, பெரும் கண்டனங்கள் எழுந்தன. இப்போது அதே விதத்திலான அலட்சியம்தான் இந்த உயிரிழப்புக்கும் காரணம்.

சிகிச்சை அளித்த மருத்துவர் ஆர்.கே. குப்தா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், ஆர்.கே. குப்தா 50,000-க்கும் மேற்பட்ட கருத்தடை சிகிச்சைகளைச் செய்திருப்பவர். தவறாக அறுவைச் சிகிச்சை அளித்தார் என்று சொல்லிவிட முடியாது.

இந்தப் பெண்களுக்கு அளிக்கப்பட்ட மருந்து மாத்திரைகள்தான் இறப்புக்குக் காரணமாக இருக்க முடியும் என்று இத்துறை வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

மருத்துவர் தவறான சிகிச்சை அளித்திருந்தால், தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட பெண் மட்டுமே மரணமடைவார். மருத்துவமனையின் சுகாதாரக் குறைவால் நோய்த்தொற்று ஏற்பட்டு

மரணமடைந்ததாகக் கருதினாலும், இத்தகைய உடனடி மரணங்கள் நோய்த்தொற்றில் ஏற்படுவது மிகமிக அரிது. வாந்தி, தலைச்சுற்றல் ஆகிய விளைவுகளைப் பார்க்கும்போது, இந்த மரணங்கள் காலாவதியான அல்லது தரமற்ற மருந்துகளால் ஏற்பட்டிருக்க வேண்டும்.

அது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மயக்க மருந்தா அல்லது சிகிச்சைக்குப் பிறகு எடுத்துக்கொண்ட மாத்திரைகளா என்பது கண்டறியப்பட வேண்டும். இச்சம்பவம் நடந்த மறு நாளே வேறொரு கருத்தடை முகாமிலும் ஒரு பெண் இதே பின்விளைவுகளுடன் இறந்திருக்கிறார்.

மருந்துகளின் காலாவதி தேதியையும் அவை தரமான நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட மருந்துகள்தானா என்பதையும் உறுதிப்படுத்தாமல் எப்படி இந்த நோயாளிகளுக்கு அவற்றை அளிக்க மருத்துவர்கள் சம்மதித்தனர்? சத்தீஸ்கர் மாநிலத்தில் போலி மருந்துகள்

விற்பனை மிக அதிகம் என்று தெரிவிக்கப்பட்டாலும், அரசு கொள்முதல் செய்யும் மருந்துகளில் போலியைவிட, தரம் குறைவான மாத்திரை மருந்துகளுக்கே வாய்ப்பு அதிகம். தற்போது ஆறு மருந்துகளின் விற்பனையை சத்தீஸ்கர் மாநில அரசு தடை செய்துள்ளது. அவை தரப்பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அரசு மருத்துவமனைகளில் இத்தகைய மரணங்கள் நேரிடும்போது மட்டுமே மருந்துகளின் தரம் குறித்துப் பேசப்படுகிறது. அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படும் மருந்து மாத்திரைகள் தரமானவைதானா என்பதை அந்தந்த மாவட்ட மருத்துவமனைகள், தாங்களே சோதனை செய்து உறுதிப்படுத்தும் நடைமுறை உருவாக்கப்பட வேண்டும். தரம் குறைந்த மாத்திரைகளை விநியோகிக்கும் நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்து, அந்த நிறுவனத்தின் உரிமையாளர், தரம் சரிபார்ப்பு அலுவலர் ஆகியோர் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

பெண்களுக்கு கருத்தடை செய்யும் போது சினைக்குழாயைத் துண்டிக்கும் (டியூபெக்டமி) சிகிச்சைக்குப் பதிலாக, எளிமையானதாகக் கருதப்படும், பெண் உறுப்பு வழியாக கருப்பைக்குள் சினைத் தடுப்புக் கருவியைப் பொருத்தி, சினைமுட்டைகளைத் தடுக்கும் முறைகள் அமலுக்கு வந்துவிட்டன. ஆனால், அவை இன்னும் அரசு முகாம்களில் பயன்பாட்டுக்கு வரவில்லை.

ஆண்களுக்கான கருத்தடை (வாசெக்டமி) மிகவும் எளிதானது. விதைப் பகுதியை மட்டும் மரத்துப்போகச் செய்து, குறைந்த நேரத்தில் கருத்தடை சிகிச்சையைச் செய்துவிடமுடியும். இயல்பான தாம்பத்தியத்துக்கு இச்சிகிச்சை எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தாதபோதும், கருத்தடை (டியுபெக்டமி) செய்து கொள்ளும்படி பெண்களையே ஆண்கள் நிர்பந்திக்கிறார்கள். இந்த ஆணாதிக்க மனநிலையும் இத்தகைய மரணங்களுக்கு ஒரு காரணம்.

பயனாளிகளை அடையாளம் காண்பதற்கு ஊரகப் பகுதியில் முகாம்கள் நடத்துவதும், அறுவைச் சிகிச்சையை மாவட்டத் தலைமை மருத்துவமனையில் போதுமான மருத்துவர்களுடன் நடத்துவதும், மருந்துகளைச் சரிபார்க்கும் பொறுப்பை அதே மருத்துவர்களை ஏற்கச் செய்வதும்தான் இத்தகைய துயரச் சம்பவங்களைத் தவிர்க்க உதவும்.

Source: Dinamani

1 comment:

NEWS TODAY 21.12.2024