பிரிக்க முடியாதது எது? தமிழ் சினிமாவும் காதலும் என்று அழகாகப் பதில் சொல்லிவிட முடியும். சினிமாதான் காதலைக் கற்றுக்கொடுக்கும் பாடசாலையாக தமிழருக்கு இருக்கிறது. சினிமா வழியாகவே தமிழ் காதல் முதிர்ச்சியையும், நவீனத்தையும் அடைந்திருக்கிறது. தமிழர்களின் வாழ்வில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் பாதிப்பையும் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்திய 14 காதல் காவியங்களைப் பற்றிய நினைவுக் குறிப்புகள் இங்கே பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. இங்கே இடம்பெறாமல் போனாலும் காதலின் உன்னதத்தை பொய்மையின்றி உயர்த்திப் பிடித்த படங்களின் பட்டியலில் சிறப்பு கவனம்பெறும் இடத்தில்.. நிறம் மாறாத பூக்கள், ஒரு தலை ராகம், அலைகள் ஓய்வதில்லை, பன்னீர் புஷ்பங்கள், கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கல்லுக்குள் ஈரம், பூவே உனக்காக, வருஷம் 16, காதல் தேசம், லவ் டுடே, இதயம், சேது, அழகி, ஆட்டோகிராஃப் ஆகிய படங்களைத் தயக்கமின்றி நினைவு கூரலாம்
அன்பே வா - காதலின் விளையாட்டு
ஏழைப் பங்காளனாகத் தன் திரை பிம்பத்தை வடிவமைத்துக் கொண்ட எம்.ஜி.ஆர். அந்தப் படிமத்தைக் கழற்றிவைத்துவிட்டு நடித்த முழுநீளக் காதல் கதை ‘அன்பே வா’.
தன் அடையாளத்தை மறைத்துக் காதலிப்பது, காதலிப்பதை வெளிப்படையாகச் சொல்லாமல் சீண்டிச் சீண்டியே காதலை வளர்ப்பது, புண்பட்ட காதலியிடம் ஆத்மார்த்தமாக மன்னிப்பு கேட்டுக் காதலை யாசிப்பது என்று சாமானியக் காதலனாக வெளிப்பட்டு, தன் அனாயாசமான நடிப்பால் ஆச்சரியப்படுத்தியிருப்பார். காதலி புண்பட்டது தெரிந்ததும் மன்னிப்புக் கோரும் காட்சியில் தன் வீர நாயகப் பிம்பத்தை முற்றிலுமாக மறக்கடித்திருப்பார்.
அலட்டிக்கொள்ளாத எம்.ஜி.ஆர். ஒருபுறம் என்றால் துடிப்பும் துள்ளலு மாய்ச் சரோஜாதேவி மறுபுறம். காதலையும் கோபத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தச் சரோஜாதேவி எதுவுமே மெனக்கெட வேண்டாம். அவர் கண்களே போதும். ‘லவ் பேர்ட்ஸ்’ என்னும் பாடலில் அவரது இமைகள் படபடக்கும் அழகே தனி.
சாகஸ நாயகனாகத் திரையில் உருவெடுத்த எம்.ஜி.ஆரை வைத்து முழுக்க முழுக்கக் காதல் படத்தை எடுக்கும் துணிச்சலுக்காக இயக்குநர் ஏ.சி. திருலோகச்சந்தரைப் பாராட்ட வேண்டும். கதை என்று எதுவுமே இல்லாமல் காட்சிகளை மட்டுமே வைத்துப் படத்தை நகர்த்திச் சென்ற விதம் திரைக்கதையின் செறிவுக்கு ஓர் உதாரணம்.
எம்.எஸ். விஸ்வநாதனின் இசையில் வாலி எழுதிய பாடல்கள் அனைத்தும் அருமையாக அமைந்து, இந்தப் படத்தின் வசீகரத்தைக் கூட்டுகின்றன. காதலை வைத்து விளையாடக் கூடாது என்னும் தீவிரமான விஷயத்தைக் கலகலப்பான திரைக்கதை, பொருத்தமான நடிப்பு, அருமையான பாடல்கள் ஆகியவற்றின் மூலம் சொன்ன இந்தப் படம் அறுபதுகளின் காதல் படங்களில் தனித்து நிற்கும் படங்களில் ஒன்று.
- அமுதன்
வசந்த மாளிகை - பாறையில் பூப்பூக்க வைத்த காதல்
நடிகர் திலகத்தின் ரசிகர்கள் சிவாஜியின் எல்லா படங்களையும் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு கொண்டாடுபவர்கள். ஆனால் சிவாஜியின் ரசிகர்கள் அல்லாதவர்களையும் ‘வசந்த மாளிகை’ ஈர்த்தது உண்மை.
அழகாபுரி ஜமீன் வம்சத்தின் செல்லப் பிள்ளை சிவாஜி. எப்போதும் கோப்பைக்குள்ளேயே குடியிருப்பவர். கோல மயில்களின் தோகை சூழ வலம் வரும் நாயகனின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை. அழகாபுரி ஜமீனுக்கு வேலைக்கு வருகிறார் வாணி. தனிமையும், ஒழுங்கின்மையும் படர்ந்து… கரையற்ற வாய்க்காலாக ஓடிக்கொண்டிருக்கும் நாயகனின் வாழ்க்கையை, ‘கலைமகள் கைப் பொருளே… உனை கவனிக்க ஆளில்லையா…’ என்று கலங்கிப் பாட்டுப் பாடி திருத்த முனைகிறார் நாயகியான வாணி.
பெண் என்றால் ‘மெத்தை தத்தை’ என்று அது வரையில் சொல்லிக்கொண்டிருந்த பாறை மனம் கொண்ட நாயகனின் அக அகராதியில்… காதல் அர்த்தத்தைப் பொறித்துவிட்டுப் போகிறது.
‘மயக்கம் என்ன… கலக்கம் என்ன?’ என்று டூயட் பாடுகிறான் நாயகன். ஒருவரை ஒருவர் வென்றெடுக்க அன்பில் ஆயுதம் தயாரிக்கிறார்கள். தன் காதலை கவுரவிக்க… தன் காதலிக்காக நாயகன் ஒரு பண மாளிகை கட்டுகிறான். வாசனையின் திருவிழாவாக எழுகிறது அந்த வசந்த மாளிகை! இப்படியாக விரியும் கதையில் காதலை மறுத்து நாயகனை பிரிய வேண்டிய நிர்பந்தம் நாயகிக்குக் உண்டாகிறது. மீண்டும் குடிக்க ஆரம்பிக்கிறான்.
‘யாருக்காக… இது யாருக்காக…’ என்று ரத்தம் கக்க… தன் உயிரின் ஆழத்திலிருந்து வார்த்தைகளை எடுத்து கோத்து பாடுகிறான் நாயகன். கடைசியில் நாயகி வந்து நாயகனை காப்பாற்றுகிறாள். சாவின் விளிம்புக்கு சென்றவனை காதல் மீட்டெடுக்கும் இசை உன்னதம் இந்தக் காவியம்.
- மானா
ராஜபார்வை - ஈரம் காயாத காதல்
தனது நூறாவது படமான ‘ராஜபார்வை’யை ஆத்மார்த்தமான காதல் படமாக உருவாக்கினார் கமல். கண் தெரியாத வயலின் இசைக் கலைஞரான கமலைத் தவறாகப் புரிந்துகொண்டு, பின்னர் அதற்காக வருத்தப்பட்டு, காதலில் விழும் பாத்திரத்தில் மாதவி மிகச் சிறப்பாக நடித்திருந்தார். தனது உடல் குறையை ஒரு சுமையாகக் கருதாமல் தேர்ந்த இசைக் கலைஞனாக உருவெடுக்கும் பாத்திரத்தில் கமல் நடிப்பு மிக இயல்பாக இருந்தது. இயல்பான திருப்பங்களும், அசலான உணர்வுகள் கொண்ட பாத்திரங்களும் நிறைந்த இந்தப் படம், காதலின் புனிதத்தை எளிமையாக நிறுவிய படைப்பு என்றே சொல்லலாம்.
காதலர்கள், தங்கள் குடும்பத்தினரிடமிருந்து எழும் எதிர்ப்பை சினிமாத்தனத்துடன் வெல்வதாகக் காட்டாமல், விதியின் சூழ்ச்சிக்குள் மாட்டிக்கொண்டு தவிப்பதை வெகு இயல்பாகச் சித்தரித்த படம் இது. நண்பர்களுடன் மது அருந்திவிட்டு, மாதவி வீட்டுக்கு முன் கமல் தகராறு செய்யும் காட்சி, இயல்பான சூழல் தன் போக்கில் விபரீதமாக உருக்கொள்வதைச் சிறப்பாகச் சித்தரிக்கும். இறுதிக் காட்சியில் இறுக்கமான சமூகக் கட்டுப்பாடு கொண்ட சூழலை உடைத்தெறியும் பலத்தை மென்மையான காதல் பெறும் அதிசயம் பதிவாகியிருக்கும். தனது இசையால், தமிழகத்தில் காதலை வளர்த்த இளையராஜா இழைத்து இழைத்து இசைத்த பாடல்கள் நிறைந்த படம். இத்தனை ஆண்டுகள் கழித்தும் ஈரம் காயாத காதல் மனம் உயிர்ப்புடன் இருக்கும் படைப்பு.
- சந்திரமோகன்
புதுக்கவிதை - காதலின் வலி
கடிவாளம் போடாத ஆக்ஷன் குதிரையாக முன்னே போய்க்கொண் டிருந்த ரஜினியைச் சட்டென்று ஒரு இடத்தில் நிறுத்தி அவருக்கு ‘தேவதாஸ்’ அரிதாரத்தைப் பூச வைத்தது புதுக்கவிதை. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் தலைப்புக்கு நியாயம் சேர்த்த திரைப்படம்.
பணக்கார வீட்டுப் பெண் ஜோதியுடனான பைக் ரேஸர் ரஜினியின் அறிமுகம் மோதலில் தொடங்கும். ரஜினியை இன்னொரு கதாபாத்திரம் திட்டுவதைக்கூட ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்த காலம் உண்டு. ஆனால், புதுக்கவிதை படத்தில் ‘கருப்பன்.. கருப்பன்..’ என்று நாயகி திட்டும் காட்சிகள் பல இடங்களில் வரும். ஹீரோயிசத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, உண்மையில் ஒரு பெண்ணும் பையனும் காதலித்தால், வீட்டில் எப்படி எதிர்ப்பு கிளம்பும் என்ற அடிப்படையை உள்வாங்கி இதில் ரஜினி நடித்திருப்பார். காதலியைப் பிரியும் தருணத்திலும், பிரிந்த பின் ஏங்கித் தவிக்கும் தருணத்திலும் ரஜினியின் ஹீரோயிசம் பற்றிய எண்ணமே எழாது.
காதலை மறக்க முடியாமல் அதன் அடையாளமாகத் தாடியுடன் வரும் காட்சியும், சோகத்தையும், இயலாமையை யும் மறைக்க முடியாமல் தவிக்கும் காட்சிகளும் படத்தின் பின்பாதியை ஆக்கிரமித்திருக்கும். மீண்டும் காதலியைச் சந்திக்கும் நிமிடத்திலும், சில நிமிடங்கள் இருவரும் பேசிய பிறகு, “நான் போகட்டுமா” என்று ஜோதி கேட்பார். அதற்கு ரஜினி, “அதான்போய்ட்டியே” என்று ஒரே வார்த்தையில் காதலின் ஏமாற்றத்தையும் வேதனையையும் இயல்பாக வெளிப்படுத்தியிருப்பார். எப்போதுமே ரஜினி படத்தில் காதல் என்பது சினிமாத்தனத்தின் ஒரு சிறுபகுதிதான். ஆனால், யதார்த்தத்துக்கு நெருக்கமாக வந்துவிடும் ஒரு மென்மையான காதலையும் அது தந்துபோகும் வலியையும் மையமாக வைத்து ரஜினி நடித்த முதலும் கடைசியுமான காதல் படம் புதுக்கவிதை மட்டுமே.
மிது
காதல் கோட்டை - த்ரில் காதல்
இந்தத் திரைப்படத்தை இப்போது பார்க்கும் புதிய தலைமுறை ரசிகர்களுக்குக் கடிதங்கள் மீது காதல் பிறக்கக்கூடும். காரணம் கடிதங்கள் என்பவை கடிதங்களே அல்ல... அவற்றை எழுதும் மனிதர்களின் சாயல் என்பதை மிகையும் யதார்த்தமும் கலந்து சொன்ன படம் காதல் கோட்டை.
பயணத்தில் தவறவிட்ட நாயகியின் கல்வி சான்றிதழ்களைக் கண்டெடுக்கும் நாயகன் அவளுக்கு அவற்றை அனுப்பி வைக்கிறான். இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா என்ற ஆச்சரிய நெகிழ்வுடன் நன்றிக் கடிதம் எழுதுகிறாள் நாயகி. அது நட்பாகிப் பின் கடிதங்கள் வழியே அதைக் காதலாய் வளர்த்தெடுக்கிறார்கள். இந்த முகமறியா காதலில் ‘நீ இங்கு நலமே.... நான் அங்கு நலமா?!’ என்று பார்த்துக் கொள்ளாமலேயே உள்ளம் பரிமாறிக் கொண்டவர்கள் ஒருநாள் சந்தித்தால்...!
ஒரு திரைப்படம் சட்டென்று நமக்கு ஏன் பிடித்துப் போகிறது? அந்தக் கதையின் முக்கிய நிகழ்வுகளுக்கு நெருக்கமாக நம் வாழ்க்கையிலும் சில சம்பவங்கள் நடந்திருக்கலாம். அல்லது அதுபோல் நமக்கு நடக்காமல் போய்விட்டதே என்ற ஏக்கமும் காரணமாக இருக்கலாம். காதல் கோட்டையில் அஜித், தேவயானி ஏற்று நடித்த கதாபாத்திரங்களைத் தங்களுடன் பார்வையாளர்கள் அடையாளப்படுத்திக் கொண்ட உளவியல் இதுதான். இப்படியெல்லாம் நடக்குமா என்ற சந்தேகம் ஏதுமில்லாமல், அடுத்து நிகழப்போவதை யூகிக்கும் விதமான திரைக்கதை என்றாலும் அதன் கட்டுக்கோப்பிற்காகத் தேசிய விருதை வென்றது. ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாத காட்சிகளும், நடிப்பும், சஸ்பென்ஸ் எனும் அம்சத்தை ஒரு காதல் கதையில் காதலுக்கு இணையான உயிர்நாடியாகப் பின்னமுடியும் என்ற நெறியாள்கையும் காதல் கோட்டையின் அஸ்திவாரம்.
- ரசிகா
மரியான் - மீட்கும் சக்தி
மரணத்தின் விளிம்புவரை சென்றுவிட்டால்கூட மீட்டுத் தரும் சக்தி காதலுக்கு உண்டு என உணர்த்திய படம் மரியான். காதல் ராசாவாகத் தன்னை முழுமையாக வெளிப்படுத்திய கடலோடி தனுஷை, அவனது காதலி பனிமலரால் மட்டுமல்ல தமிழ் ரசிகர்களாலும் மறக்க முடியாது.
நீரோடி கடல் கிராமத்தில் கடல் சுறாவை வேட்டையாடும் மரியானை பனிமலர் காதலிக்கிறாள். கடும் உழைப்பைத் தர மனமில்லாமல் முறுக்கிக்கொண்டு திரியும் தனுஷ், “பொம்பளை வாசம் பட்டவன்தான் சாதிக்க முடியும்” என்று கேள்விப்பட்ட பிறகு, காதலில் விழுகிறார். ஆனால் காதல் துன்பமும் தருமல்லவா? காதலியின் கடனை அடைக்க அல்லது காதலுக்காக வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் மரியான் அங்கே சூடான் தீவிரவாதிகளிடம் சிக்கிக்கொள்கிறான். தப்பித்தானா? ஊர் திரும்பினானா பனிமலர் என்னவானாள் என்பதை முழுக்கக் முழுக்க காதல் என்பதை ஊக்க மருந்தாகச் சித்தரித்த உணர்ச்சிக் காவியம்.
மிக நுணுக்கமான உணர்ச்சிகளைக்கூடச் சாதாரணமாகச் செய்வது தனுஷின் திறமை. பசியும் பட்டினியுமாகத் தீவிரவாதி களிடம் அடைபட்டுக் கிடக்கிற தனுஷ், கிடைத்த ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் தனது நிறுவன அதிகாரிக்குப் போன் செய்து, நடந்ததைச் சொல்லாமல் காதலிக்குத் தொலைபேசி கதறும் காட்சியில் யாரும் கண் கலங்காமல் இருக்க முடியாது.
அலைகள் ஓய்வதில்லை, கடலோரக் கவிதைகளைக் கொண்டாடும் தலைமுறையின் அடுத்தடுத்த வாரிசுகள் காதலின் மகோன்னதத்ததைப் பேச மனதில் இருத்திக்கொண்டிருக்கும் படம் மரியான்.
- நாகா
விண்ணைத் தாண்டி வருவாயா - உருகி உருகி
நிறைவேறாத காதல் ஜோடிகளுக்கு இந்தியர்கள் நினைவில் இறவாத நினைவுண்டு. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் வரும் கார்த்திக்- ஜெஸ்ஸி கதாபாத்திரங்களுக்கும் ரசிகர்கள் அந்த இடத்தைக் கொடுத்தனர்.
`விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைக்கதை, சமகாலத்தில் நடந்தாலும் நாயகனும் நாயகியும் கட்டுப்பெட்டியானவர்கள். எண்பதுகளில் வந்த `ஒரு தலை ராகம்’ படத்தில் வரும் நாயக-நாயகியின் பவித்திரத்தைப் பராமரிப்பவர்கள். இந்தப் படத்தில் கைபேசி மிகக் குறைவாகவே பயன்படுத்தப்பட்டது. சந்திப்பதற்கான ஏக்கம் மற்றும் காத்திருப்பை இருவருமே பிரமாதமாக வெளிப்படுத்தியிருப்பார்கள்.
ஒரு ஆணின் முதல் நட்பு மற்றும் முதல் தொடுகையின் அனுபவத்தை த்ரிஷா அற்புதமாகத் தெரியப்படுத்தியிருப்பார். ரயில் பயணத்தில் காதலன் தன் பாதத்தைத் தொடும் போது இரவொளியின் நீல வெளிச்சத்தில், த்ரிஷாவின் முகத்தில் வெளிப்படும் சிறு கிறுகிறுப்பு தமிழ் சினிமாவின் முக்கியமான தருணங்களில் ஒன்று. குடும்பத்துக்கும் காதலுக்கும் இடையே அல்லல்படுபவராக, கொஞ்சம் நாயகனைவிட முதிர்ந்த தோற்றம் கொண்டவராக, படம் முழுக்க சேலை கட்டி த்ரிஷா அசத்திய திரைப்படம் இது.
முதல் காதலின் தாப ஊசிமுனையில் தியானித்து வழங்கப்பட்ட பாடல்கள் ஏ.ஆர். ரஹ்மானுடையவை. ‘மீண்டும் மீண்டும் உருகி உருகி உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்.. என்ன செய்வேன்’ என்று கதறியிருப்பார். மொத்தக் கதையையும் இந்தப் பாட்டின் வழியாகச் சொல்லியிருப்பார். தமிழில் சமீபத்தில் வந்த மிகச் சிறந்த, நெருடல் இல்லாத முதிர்ச்சியான காதல் படங்களில் ஒன்று `விண்ணைத் தாண்டி வருவாயா’.
- வினுபவித்ரா
காதலுக்கு மரியாதை - குடும்பத்துக்கு மரியாதை
தொண்ணூறுகளில் காதலைக் கண்ணியமாக வெளிப்படுத்தி வெற்றி கண்ட திரைப்படம் ‘காதலுக்கு மரியாதை’. இயக்குநர் பாசில் இயக்கத்தில் வெளிவந்த இந்தத் திரைப்படம் பெற்றோருக்குக் காதல் மீதிருந்த பயத்தைப் போக்கி மரியாதையை உருவாக்கியது என்று சொல்லலாம்.
கதாநாயகன் ஜீவா (விஜய்), கதாநாயகி மினி (ஷாலினி) இருவரின் காதலும் அந்தக் காலகட்டத்தில் காதலர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜீவா, மினியின் காதல் ‘விழியில் விழி மோதி’ முதல் பார்வையில் பிறப்பதாய் இருந்தாலும், இயக்குநர் பாசில் சினிமாத்தனம் இல்லாமல் இயல்பாகப் பதிவுசெய்திருப்பார். காதலுக்காக நண்பர்கள் செய்யும் உதவி, தாய்க்கும் மகனுக்குமான உறவு, அண்ணன் - தங்கை பாசம் எனப் பல உறவுப் பரிமாணங்களையும் இந்தப் படம் ஆழமாகச் சித்தரித்தது.
சில படங்களின் முடிவு மனதைவிட்டு அகலாமல் எப்போதும் பசுமையானதாகவே இருக்கும். அப்படியொரு கிளைமாக்ஸாக ‘காதலுக்கு மரியாதை’ படத்தின் முடிவைச் சொல்லலாம். இன்றளவும் அந்தக் கிளைமாக்ஸை அனைவராலும் ரசிக்கவும், ஏற்றுக்கொள்ளவும் முடியும். இந்தப் படத்தில் இளையராஜா தன் இசையால் காதல் தாலாட்டுகளை உருவாக்கியிருந்தார். ‘என்னைத் தாலாட்ட வருவாளா’ பாடல் காதலர்களின் காதல் ராகமாகப் பல ஆண்டுகளுக்கு நீடித்தது.
பெற்றோரைத் தவிக்கவிட்டுவிட்டுக் காதலில் வெற்றியடைவது நல்ல விஷயமல்ல என்று காதலர்களையும், பிள்ளைகளின் காதல் நேர்மையாக இருக்கும்போது அதை ஏற்றுக்கொள்ள வேண்டியது பெற்றோர்களின் கடமை என இரு தரப்பையும் இந்தப் படம் யோசிக்க வைத்தது.
- கௌரி