Friday, February 13, 2015

இயக்குநர்களின் இதயம் தொட்ட காதல்





மூன்றாம் பிறை: காதலைத் தாலாட்டிய படம்

காதலைக் கொண்டாடிய எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. காதலைத் தாலாட்டிய படம் மூன்றாம் பிறை. விபத்தில் தன்னைப் பற்றிய நினைவுகள் அற்றுப்போகும் நாயகி விஜி (ஸ்ரீதேவி). பார்வையிலே குமரியாக, பழக்கத்திலே குழந்தையாக ஆகிப்போகிறாள். அவளை கண்ணின் இமைபோல் காக்கும் நாயகன் சீனு (கமல்ஹாசன்). இருவருக்கும் இடையேயான அன்பைச் சொல்லும் கதை.

மலைக்கிராமத்தின் அழகையும் பலதரப்பட்ட மனிதர்களின் மன ஆழத்தையும் இயக்குநராகவும் ஒளிப்பதிவாளராகவும் பாலுமகேந்திரா தனது முழுமையான ஆளுமையின் மூலம் பதிவுசெய்த படம் இது.

பூங்காற்று புதிரானது, பொன்மேனி உருகுதே, கண்ணே கலைமானே போன்ற பாடல்களுக்கான இசையிலும், பின்னணி இசையிலும், சில இடங்களில் இசையைக் கொண்டு கலைக்காத நிசப்தங்களாலும் படம் முழுவதும் வானளாவ உயர்ந்து நிற்பார் இளையராஜா.

பூங்காற்று புதிரானது எனும் பாலுமகேந்திராவுக்கே உரிய மாண்டேஜ் பாடலில் கமலுக்கும் தேவிக்கும் இடையில் ஓடிக்கொண்டிருக்கும் நாய்க்குட்டி (சுப்பிரமணி) அன்பின் குறியீடு!

`க’ என்னும் எழுத்தில் தன்னுடைய முதல் பாடலை எழுதத் தொடங்கிய (கலங்காதிரு மனமே கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே) கண்ணதாசன், அதே ‘க’வில் தொடங்கும் கண்ணே கலைமானே என்னும் இறுதிப் பாடலை இந்தப் படத்துக்காக எழுதினார்.

வணிக ரீதியாகப் பேசப்படாத ராஜபார்வை படத்துக்குப் பின் சகலகலாவல்லவன் படத்தின் வணிக ரீதியான வெற்றிக்குப் பின், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்று கமலுக்கு முதல் தேசிய விருது கிடைப்பதற்கும் காரணமாக அமைந்த படம் இது. காதலை வெளிப்படுத்திய படங்கள் முழு நிலவாய்த் திரை வானில் ஜொலித்தாலும் காதலைத் தன் கர்ப்பத்தில் வைத்திருந்த மூன்றாம்பிறை தன் கொள்ளை அழகால் மனதில் நிற்கிறது.

- யுகன்
புன்னகை மன்னன்: காதலில் எழுந்தால்...


வாழ்வின் விளிம்பில் நிற்கும் காதலர்கள் (கமல் - ரேகா) காட்டருவி பாயும் மலை உச்சியிலிருந்து தற்கொலை செய்துகொள்ளக் குதிக்கிறார்கள். காதலன் ஒரு மரக்கிளையில் சிக்கிக் கதற அவன் கண் முன்னே காதலி அதலபாதாளப் பாறையில் விழுந்து உயிரிழக்கிறாள். பார்வையாளரை இருக்கை நுனிக்குக் கொண்டு வரும் இந்தக் காட்சியில்தான் படம் தொடங்குகிறது. பொதுவாக ஒரு மணி நேரம் விவரித்துச் சொல்லப்படும் ஒரு முழு நீளக் கதையை இளையராஜாவின் இசையோடும், ரகுநாத ரெட்டியின் அசாத்தியமான ஒளிப்பதிவோடும் வெறும் பத்து நிமிடங்களில் சொல்லிவிடுவார் இயக்குநர் பாலசந்தர். இது `புன்னகை மன்னன்’, மீண்டும் `மரோசரித்ரா’ அல்ல என்பதையும் உணர்த்திவிடுவார்.

காதலியின் இழப்பிலிருந்து மீண்டு வர முயலும் நடன ஆசிரியரான சேது (கமல் ஹாசன்) சிங்களப் பெண்ணான மாலினியை (ரேவதி) சந்தித்ததும் படம் முற்றிலுமாக வேறு கோணத்தில் பயணிக்கத் தொடங்கும். ஆரம்பத்தில் மாலினியைக் கண்டாலே எரிந்து விழும் சேது, ஒரு கட்டத்தில் தான் மாலினியிடம் காதல் வயப்பட்டதால்தான் தன்னை முரட்டுத்தனமாக வெளிக்காட்டிக்கொண்டதாக ஒப்புக் கொள்ளும் காட்சி, அதனைத் தொடர்ந்து காதலாகிக் கசிந்துருகி சேதுவும் மாலினியும் ஆடும் நடனம் காதலின் உச்சக்கட்டம். பின்னணியில் காதல் நிரம்பி வழியும் அந்த இசைக் கோவைதான் இன்றும்கூட பல தமிழர்களின் காதல் சங்கீதம் எனலாம்.

காதலின் இழப்பு தரும் வலியைக் கடந்தும் வாழ்க்கை வழி விடுமானால் மற்றொரு காதல் அந்த வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிவிடும் என்ற நெகிழ்வான உணர்வை அற்புதமாகச் சொன்ன திரைப்படம் புன்னகை மன்னன்.

- ம. சுசித்ரா
கடலோரக் கவிதைகள்: ஆழியில் பூத்த வலம்புரி


திரையில் அசல் தமிழ்க் கதாபாத்திரங்களை உலவவிடும் படைப்பூக்கம் மிக்க இயக்குநர் பாரதிராஜா தனித்துவமான காதல் படங்களைத் தமிழ்த் திரைக்கு அளித்தவர். வில்லனாகத் தோன்றிவந்த சத்யராஜின் நடிப்பின் சிறு பகுதியை முதல் மரியாதையில் கண்ட பாரதிராஜா அவருக்கென எடுத்த படம் கடலோரக் கவிதைகள். கல்லுக்குள் ஈரம், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை வரிசையில் 1986-ல் வெளிவந்த இந்தப் படம் பாரதிராஜாவின் காதல் படங்களில் முக்கியமானது.

வழிதப்பிய ஆடாய் முட்டம் என்னும் கடலோரக் கிராமத்தில் திரிந்துகொண்டிருப்பவர் முரடனான சின்னப்ப தாஸ். நல்ல மேய்ப்பராக அந்தக் கிராமத்துக்கு வந்துசேர்வார் ஆசிரியையான ஜெனிஃபர். இவர்களிடையே அரும்பும் வலம்புரி சங்கு போன்ற காதலின் பயணமே இந்தப் படம். துள்ளிவரும் அலைகளின் ஓசையும், கடலோரத் தேவாலய மணியோசையும், அலையும் கரையுமாக இரு மனங்கள் பேசிக் கொள்ளும் காதலும் இணைந்த இசையை இளையராஜா செவியில் இட்டு நிரப்புவார்.

இப்படத்தின் ஈரமணல் கடற்கரை நிலமும், காதல் மனங்களின் உணர்வை வெளிப்படும் நுட்பமான காட்சிமொழியும், உணர்வை உந்தித் தள்ளும் கதைக்குப் பொருத்தமான இசையும் ஒரு கடலோரக் காதலைப் பார்வையாளனின் மனத்தில் நிரந்தரமாக இருத்திவிடும். மீனவக் கிராமமாக இருந்தும் மீனவ பாஷை இல்லை படத்தில். ஆனால் எல்லாவற்றையும் மறக்கடிக்கும் காதல் இதையும் மறக்கடித்துவிட்டது.
– ரோஹின்
அலைபாயுதே: விழிப்பூட்டிய காதல்


கல்லூரிக் காலத்தில் பதிவுத் திருமணம் செய்துகொண்டு, இரு வீட்டாருக்கும் தெரியாமல் இயல்பு வாழ்க்கையை அணுகி, ஒரு கட்டத்தில் உண்மையைப் போட்டு உடைப்பது என்பது நம் சமூகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தேறிய காதல் கதைகள். அந்தக் கதையை வெள்ளித் திரையில் விரித்து, 'அலைபாயுதே பாணியில் திருமணம்' என்ற தலைப்பிலான ஆயிரக்கணக்கான செய்திகளுக்கு வித்திட்டார் இயக்குநர் மணிரத்னம். காதலர்களுக்கு மட்டுமல்ல; பெற்றோர்களுக்கும் 'விழிப்புணர்’வைத் தந்தது இப்படம்.

பொருளாதார ரீதியிலான நடுத்தர, மேல்தட்டு வர்க்க மக்களின் பார்வையில் 'காதல்' உணர்வை யதார்த்தமாகக் காட்டியது 'அலைபாயுதே'. இப்படத்தில் மாதவன் - ஷாலினி ஜோடியை இளம் காதலர்கள் பலரும் தங்களுடன் ஒப்பிட்டுக்கொண்டனர். அதற்கு இணையாக, அரவிந்த் சாமி - குஷ்பு கதாபாத்திரங்களுடன் மூத்த ஜோடிகள் தங்களைப் பொருத்திப் பார்த்துக்கொள்ளத் தவறவில்லை.

திருமணத்துக்குப் பின் சற்றும் குறைந்திடாத அன்பால் வாழ்கிறது காதல் என்ற பெருந்தகவலைக் குறிப்பால் சொல்லிச் சென்ற கதையின் மையமும், அதை சுவாரஸ்யப்படுத்திய திரைக்கதையும், ‘அலைபாயுதே' படத்துக்கு மட்டுமல்ல; மனம் அலைபாயும் இளம் காதலர்களின் வாழ்க்கை வெற்றிக்கும் அடித்தளம் அமைத்தன.

- இசக்கி
காதல்: மனிதம் சொன்ன ‘காதல்'


தமிழ் சினிமாவையும் காதலையும் பிரித்துப் பார்க்க முடியாது. இந்த நிலையில் 'காதல்' என்றே தலைப்பிட்டு வந்த படத்தில், பேசப்பட்ட காதல் எது? ஏழை நாயகன், பணக்கார நாயகி காதலிக்கும் பழைய கதைதான். பப்பி லவ் அல்லது விடலைப் பருவக் காதல் எனப்படும் காதலே படத்தின் அடிப்படை. இப்படிப் பலவும் ஏற்கெனவே நமக்குப் பழக்கப்பட்டவைதான். ஆனால், எடுத்துக்கொண்ட விஷயத்தை யதார்த்தத்தின் அருகிலிருந்து விலக்காமல், அதற்குரிய நிஜமான பிரச்சினைகளுடன் கதையை நகர்த்தியிருந்தார் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.

அப்பா, சித்தப்பாவைத் தவிர ஆண் வாசனையற்ற ஒரு விடலைப் பெண்ணுக்கும் அவர்களுடைய தெருவில் இருக்கும் இளவயது மெக்கானிக் பையனுக்கும் இடையில் காதல். வசதி வாய்ப்பைப் போலவே, இருவருடைய சாதிகளிலும் ஏற்றத்தாழ்வு உண்டு. ஆனாலும், இருவரும் சென்னைக்கு ஓடிப் போகிறார்கள். நண்பன் உதவியுடன் கல்யாணம் செய்துகொண்டு, தனியாக வாழவும் ஆரம்பித்துவிடுகிறார்கள். பெரும்பாலான படங்கள் இந்தப் புள்ளியுடன் முடிந்துவிடும்.

தமிழ் சினிமாவின் அடிப்படைக் கச்சாப்பொருளான காதல், எப்போதுமே போராட்டத்துக்குப் பிறகு காதலர்கள் ஒன்றுசேர்வது அல்லது வேறு வழியில்லாமல் காதலர்கள் பிரிக்கப்படுவது-இறந்து போவது என்பதோடு முடிந்துவிடும். அதற்குப் பிந்தைய கதை இருக்காது. மதுரையின் கடுமையான சாதிய ஏற்றத்தாழ்வுகளின் பின்னணியில் தோல்வியடைந்த ஒரு காதலுக்குப் பிந்தைய காலம் 'காதலி'ல் சொல்லப்பட்டது. நாயகி காதலனை கரம் பிடிக்கவில்லை. நாயகி வீட்டாரின் தாக்குதலில் நாயகனும் மனநிலை பிறழ்ந்து போகிறான். கிளைமாக்ஸில் நாயகியின் கணவன், நாயகியையும், மனநிலை பிறழ்ந்து போன அவளுடைய முன்னாள் காதலனையும் புரிந்துகொள்கிறான். தன்னுடைய குழந்தையுடன், மற்றொரு குழந்தையைப் போல நாயகனை அழைத்துச் செல்கிறான். இயல்பான மனிதப் பண்பைத் தொலைக்காத அந்த சாதாரண மனிதன், படத்தை வேறொரு தளத்துக்கு உயர்த்திவிடுகிறான்.

- ஆதி
பூ: பெண் மனதின் வாசம்


பெண்ணை மையக் கதாபாத்திரமாக்கத் தொடர்ந்து தயங்கிவரும் தமிழ் சினிமாவில் ‘மாரி’ என்ற எளிய கிராமத்துப் பெண்ணின் வெள்ளை உள்ளத்தையும், அதில் அவள் அடைகாத்துவரும் காதலையும் பிதற்றல் ஏதுமின்றிப் பேசிய திரைப்படம் ‘ பூ’. உணர்வுகளின் சின்னமான இரட்டைப் பனை மரங்கள், தோசைக்கு அளிக்கும் முத்தம், கைபேசி எண்ணை மறந்துவிட்டுத் தவிப்பது, கடிதம் எழுத வார்த்தைகள் தேடி முடியாமல் திணறுவது, காதலனுக்காகக் கள்ளிப்பழம் தேடி நள்ளிரவில் அலைவது, பின் அதைக் கொடுக்க முடியாமல் ஏமாற்றமடைவது என வெகுளித்தனம் நிரம்பிய மாரியாக நடித்திருந்தார் பார்வதி.

“திருமணமானால் என்ன? அன்பை மறந்துவிட வேண்டுமா?” என்று மாரி கேட்பதும், அதன்படியே அன்பு தொடர்வதும் இக்கதையின் முற்போக்கான அம்சமாகப் பார்க்கப்பட்டது.

மாரியின் காதல் தமிழ் சினிமாவின் அரைவேக்காட்டுக் காதலில், இருந்து மாறுபட்டு இருந்தது.

திருமணத்துக்குப் பின் தன் காதலன் சந்தோஷமாக இல்லை யென்பதை அறிந்து வெடித்து அழுகிறாள் மாரி. மாரியின் அழுகை தொடர, படம் முடிகிறது. ஆணின் காதலை மட்டுமே அதிகம் போற்றிவந்த தமிழ் சினிமாவில் பெண்ணின் காதலைக் கவுரப்படுத்திய படம்.

- சாரதா

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024