Friday, February 13, 2015

அந்த நாள் ஞாபகம்: காதலைக் கொண்டாடிய அம்பிகாபதி

‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ கல்யாண்குமார், முத்துராமன், தேவிகா

தமிழ் சினிமா பேசத் தொடங்கிய 1931-க்குப் பின்னர் அதன் ஒரே கருப்பொருளாக இருந்தது புராணம்… புராணம்… புராணம் மட்டுமே. 1934-ல் நிவாஸ் சினிடோன் படக் கம்பெனி ‘ நிவாச கல்யாணம்’ என்ற புராணப் படத்தைத் தயாரித்தது. இதுதான் மதராஸில் தயாரான முதல் பேசும்படம். இதன்பிறகு தமிழ் சினிமா மதராஸில் மட்டுமல்ல சேலத்திலும் கோவையிலும் சொந்தக்காலில் நிற்கத் தொடங்கியது. புராணம் மெல்ல மெல்ல அதற்குப் புளிக்க ஆரம்பித்தது. அதற்கு அறிகுறியாக 1935-ல் வெளியான ‘ மேனகா’ திரைப்படம் வெளியானது. இதுவே தமிழ் சினிமாவின் முதல் சமூகப் படம்.

முதல் முழுநீளக் காதல்

மேனகா வெளியான பிறகு சமூகப் படங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. ஆனால் ராஜா சாண்டோ போன்ற முன்னோடிகளைத் தொடர்ந்து தமிழ் சினிமாவுக்குப் புது ரத்தம் பாய்ச்ச ஒரு அந்நியர் வந்தார். அவர் நாம் கொண்டாட வேண்டிய புண்ணியர் எல்லீஸ் ஆர். டங்கன் என்றால் அது மிகையல்ல. அவரது வருகைக்குப்பிறகு புராண, வரலாற்று படங்களில் ஒலித்து வந்த உரையாடல் தன் மொழியின் சட்டையை உரித்துப்போட்டது. ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் புதிய பாய்ச்சலை நிகழ்த்திக் காட்டின. அவரது இயக்கத்தில் 1937-ம் ஆண்டு வெளியான ‘அம்பிகாபதி’ தமிழ் சினிமாவின் முதல் முழுநீளக் காதல் திரைப்படமாக மிளிர்ந்தது. துயரக் காவியமாக அது அமைந்தபோதும் அதில் காதல் கொண்டாடப்பட்டது. பல சாதனைகள் முதல் முறையாக நிகழ்த்தப்பட்டன. அவற்றைக் காணும் முன் அதன் கதையைக் கேளுங்கள்.

கவிஞனும் இளவரசியும்

அது பத்தாம் நூற்றாண்டின் சோழப் பேரரசு. கலிங்கம்வரை கட்டியாண்ட மூன்றாம் குலோத்துங்க சோழன் காலம். அவனது அரசவையில் ரத்தினமாக மின்னியவர் கவிச்சக்கரவர்த்தி கம்பர். அவரது வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்போது அவரது மகன் அம்பிகாபதி

(எம்.கே. தியாகராஜ பாகவதர்) பாட மாட்டானா!? தந்தையைப்போல் கவிதைத் தமிழில் சிறந்து விளங்கிய அந்த இளங்காளை போர்க்களத்தில் வாள் சுழற்றுவதிலும் சுத்த வீரன். கலிங்கப்போரில் தன் உயிரைக் காத்த காரணத்துக்காக அவனுக்கு வைர வாளைப் பரிசளிக்கிறார் மாமன்னன் குலோத்துங்கன். அதைக் கொண்டு தனது சகா ருத்ரசேனனோடு (பாலைய்யா) விளையாட்டுக்காக வாளைச் சுழற்றுகிறான் அம்பிகாபதி. அப்போது அவனது வீரத்தையும் அழகையும் ஒருங்கே காணும் இளவரசி அமராவதி(எம்.ஆர். சந்தான லட்சுமி) அந்தக் கணமே அவன் மீது காதல் கொள்கிறாள். வாள் வீச்சின் முடிவில் சிதறிய முத்துமாலைபோலச் சிரித்த இளவரசியைக் கண்டு அம்பிகாபதியும் காதலில் விழுகிறான். அவளைக் காண ஏங்கும்போது இளவரசியின் தோழி செய்தியுடன் வருகிறாள். அமராவதியைக் காண அந்தப்புரத்துக்கு வரும்படி அழைக்கிறாள். அம்பிகாபதியை சந்தித்துத் திரும்பிய தோழிக்கு உடம்பைப் பிடித்துவிட்டு ஒரு இளவரசி பணிவிடை செய்யும் காட்சி அதற்கு முன் இல்லை. காவலை மீறி அந்தப்புரத்துக்குள் நுழைந்ததும் முல்லைக்கொடி காற்றில் சிலுசிலுக்கும் உப்பரிகையில் இளவரசியைக் காண்கிறான் அம்பிகாபதி. அவன் தன்னைக் காண வந்துவிட்ட இன்ப அவஸ்தையோடு..

“ நீங்கள் காவலாளிகள் கண்களில் பட்டால் அபாயம் நேருமே?” என்று படபடக்கிறாள் அமராவதி.

“அவர்கள் கண்களைவிட உன் கண்களில்தான் அதிக அபாயம் இருக்கிறது!” இது அம்பிகாபதி. ஷேக்ஸ்பியரின் ரோமியோவும் – ஜுலியட்டும் சந்தித்துக் கொண்ட காட்சியை அப்படியே இங்கே பொருத்திவிட்டார் இயக்குநர் டங்கன். காதல் கனிரசம் சிந்திய அந்தக் காட்சியை ரசிகசிகாமணிகள் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டே இருந்ததில் ஓராண்டு காலம் திரையரங்குகளில் ஓடிய சாதனை படைத்த முதல் தமிழ்த் திரைப்படமாக அம்பிகாபதி சாதனை வெற்றியைச் சந்தித்தது.

புதிய காட்சி மொழி

அம்பிகாபதியின் கனவில் அமராவதி தோன்றுகிறாள். “அமராவதி... அமராவதி...” என்று உருகிக்கொண்டே தூக்கத்திலிருந்து எழுகிறான் அம்பிகாபதி, இதைக் கண்டு பதறும் கம்பர், “ கனவுக்கும் நினைவுக்கும் உனக்கு வித்தியாசம் தெரியாமல் போய்விட்டதா? உன் கனவு கனவாகவே இருக்கட்டும். நினைவில் இருந்தால் அதை இப்போதே கொன்றுவிடு”

என்று எச்சரிக்கை செய்கிறார்.. “ அதற்கு என்னை நானே கொன்று கொள்வதே சரி” என்கிறான் அம்பிகாபதி.

“முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவதில் ஏதாவது அர்த்தம் உண்டோ? சக்கரவர்த்தி குலோத்துங்கனின் மகள்

எங்கே!? கவி பாடிப் பிச்சையெடுக்கும் கம்பனின் மகன் எங்கே!? அடேங்கப்பா! மகாமேருவுக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமல்லவா இருக்கிறது?” பெரிய இடத்தில் நமக்கு ஏனடா பொல்லாப்பு? அவளை மறந்துவிடடா கண்ணே!” எனக் கம்பர் மகனிடம் கெஞ்ச..” மறந்துவிடுவதா? காதலில் அவள் மாதவி, கற்பிலோ கண்ணகி. சூரியச் சந்திரர் அறிய அவளைக் காந்தர்வ திருமணம் செய்தாகிவிட்டது அப்பா” என்று அம்பிகாபதி சொல்ல, அந்தக் காட்சியில் தந்தையும் மகனும் மாறி மாறிப் பாடும் “ என்ன செய்தாய் என்னருமை மைந்த?”

என்ற புலம்பல் பாடல் அத்தனை வலியைக் கொண்டது. பின்னால் நிகழப்போகும் துன்பியல் முடிவுக்கு அதுவே முரணாக அச்சுறுத்த

அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சம் நம்மை அழுத்தும் விதமாகக் காட்சிகளைப் படத்தொகுப்பு செய்திருப்பார் டங்கன்.

சாதனைகள் பல

காதலனும் காதலியும் சந்தித்துப் பேசும் காட்சிகளில் அதற்கு முன் தமிழ் சினிமா பார்த்திராத குளோஸ்- அப் காட்சிகளை முதல் முறையாகப் பயன்படுத்தினார் இயக்குநர். வானில் நிலவு ரம்மியமாக எரிந்துகொண்டிருக்க முதல் முறையாக அம்பிகாபதியும் அமராவதியும் ஏரிக்கரையில் சந்தித்துக் காதலைக் கொண்டாடும் பாடல் முழுவதையும் க்ளோஸ் அப்பில் கொண்டாடியிருப்பார். அவர்கள் கன்னத்துடன் கன்னம் வைத்துக் காதலில் மருகும் காட்சியும் அதுவே முதல் முறை. இத்துடன் நின்றுவிடவில்லை எல்லீஸ் ஆர் . டங்கன். படத்துக்கு டிரைலர் என்ற ஒன்றை எடிட் செய்து, ’ விரைவில் உங்கள் அபிமான டாக்கீஸ்களில் வருகிறது’ என்று முதன் முதலில் விளம்பரம் செய்தார். அதேபோல் சமஸ்கிருத வார்த்தைகளே

இல்லாமல் படத்துக்கு வசனம் எழுதிய கதை வசனக்கர்த்தா இளங்கோவனுக்கும், இசையமைப்பாளர், பாடலாசிரியர் பாபநாசம் சிவனுக்கும் முதல் முறையாகப் படத்தின் டைட்டிலில் பெயர் போடச் செய்தார். அதுவரை இல்லாத நடைமுறை அது.

இந்தப் படத்தின் மெகா வெற்றி பாகவதரை தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆக்கியது. காதல் கதைகளை மையப்படுத்திய கருப்பு வெள்ளை திரைப்படங்கள் படையெடுக்க பாதை அமைத்துக் கொடுத்தது அம்பிகாபதி. இதன்பிறகு தேவதாஸ், நெஞ்சம் மறப்பதில்லை, நெஞ்சில் ஓர் ஆலயம், கல்யாணப் பரிசு, தேன் நிலவு என்று சினிமா வண்ணம்பூசிக் கொள்ளும் வரை காதலை கவுரவம் செய்த படங்களைப் பிரிதொரு சந்தர்ப்பத்தில் கொண்டாடுவோம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024