எண்ணற்ற கோயில்களைத் தன்னகத்தே கொண்ட குமரி மாவட்டத்தின் சிறப்புமிக்க வழிபாடுகளில் ஒன்றாகக் கருதப்படுவது, மாசி மாதம் நடைபெறும் சிவாலய ஓட்டம் என்னும் வழிபாடாகும். சிவராத்திரியின் முதல் நாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவி உடை அணிந்து, பத்மனாதபுரத்தைச் சுற்றியுள்ள பன்னிரு சைவத் திருத்தலங்களையும் 24 மணி நேரத்தில் ஓடி வலம் வருகின்றனர்.
இவ்வாறு திருமலை என்னும் திருத்தலத்தில் தொடங்கிய ஓட்டத்தை பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மூவரும் ஒரே மூர்த்தியாக நின்று அருள் வழங்கும் சுசீந்திரத்தில் வந்து முடிக்கின்றனர். அவர்கள் ஓடிச் சென்று வணங்கும் பன்னிரு சைவத்தலங்கள் பின்வருமாறு:
திருமலை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாக்கம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங் கோடு, திருப்பன்றிக்கோடு, திருநட்டாமை.
சிவாலய ஓட்டத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே மாலை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர். மேலும் இவ்வோட்டத்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். கையில் ஓலை விசிறியுடனும் ஒரு சிறிய பண முடிச்சுடனும் ஓடுகின்றனர்.
சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் ஒருவரையொருவர் ஐயப்பா என்று அழைப்பதைப் போல், இவர்கள் தங்களுக்குள் கோவிந்தா என்றே அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.
பக்தர்கள் புனிதப் பயணம் செல்லும் போது, கையில் விசிறி ஏந்திச் செல்வது சமண மதத்திலுள்ள ஒரு வழக்கம். மேலும் திருநந்திக்கரையில் உள்ள குடவரைக் கோயில், திற்பரப்பில் உள்ள குகைக் கோயில், பன்னிப்பாக்கம் அருகில் உள்ள பாதச் சுவடு திருமலையில் கல்லிலே பொறிக்கப்பட்டுள்ள கண்கள் ஆகியவை இவ்வோட்டம் சமண சமயத்திலிருந்து வந்ததை உறுதி செய்வதாய் உள்ளது.
சிவாலய ஓட்டத்தில் விரதம் இருப்போர் சிவபெருமானை தரிசிப்பதும் அவர்களை நேரில் காண்பதும் ஆகிய இரு தரிசனங்களும் பேரின்பம் தருவன.
No comments:
Post a Comment