Saturday, February 14, 2015

மக்கள் பெருமை; மண்ணின் பெருமை!

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் தேர்ந்தெடுப்பது அமெரிக்காவையே. காரணம், இன்றைய உலகின் மிகச் சிறந்த கல்வி நிலையங்கள் அங்குதான் உள்ளன.

மேலும், கல்வியில் சிறந்த வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்விக்கான உதவித்தொகையை தாராளமாக வழங்கும் நடைமுறை உள்ள நாடும் அமெரிக்காவே!

அமெரிக்க கல்வி நிலையங்களில் 1,02,673 இந்திய மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இது கடந்த ஆண்டைவிட 6 % அதிகம். மும்பை நகர அமெரிக்க கான்சல் டாம் வஜ்தா கூறுகிறார்:

"இந்திய மாணவர்கள் எங்கள் நாட்டின் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதை நாங்கள் வரவேற்கிறோம். காரணம், பல நாட்டு மாணவர்கள் ஒன்றிணைந்து பல விஷயங்களைப் பற்றி விவாதித்து, கல்வி கற்கும் நடைமுறையில் அவர்களது அறிவு வளர்ச்சியும், புதிய கோணங்களில் எல்லா விஷயங்களையும் புரிந்து கொண்டு, தரமான கண்டுபிடிப்புகளுக்கு வழி செய்யும் தன்மையும் உருவாகிறது'.

அமெரிக்காவில் 1985-ஆம் ஆண்டு உயர்கல்வி கற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஓக்லஹோமா மாநிலத்தின் ஓ.எஸ்.யு. பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிப்பிற்காக நான் அனுமதிக்கப்பட்டேன்.

எனது கல்லூரி நாள்களிலேயே அமெரிக்காவிலிருந்து வெளிவரும் "டைம்' வாரப் பத்திரிகையை நான் தவறாது படிப்பேன். சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரக நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்து பல புத்தகங்களையும், பத்திரிகைகளையும் படிப்பதோடு, அங்கே உள்ள அலுவலர்கள் வழங்கும் ஆலோசனைகளையும் பயன்படுத்திக் கொள்வதுண்டு.

நான் ஓக்லஹோமாவில் சேர்ந்து, பின்னர் டெக்ஸாஸ் மாநிலத்தின் யு.டி.ஏ. பல்கலைக்கழகத்திற்கு சென்று படித்தபோது என்னை சந்தித்த பல அமெரிக்கப் பேராசிரியர்களும் நான் இந்திய மாணவன் எனத் தெரிந்த பிறகு, மெட்ராஸ் பல்கலைக்கழகமா எனக் கேட்பார்கள். அதாவது, இந்தியாவில் மிகச் சிறந்த பல்கலைக்கழகம் மெட்ராஸ் பல்கலைக்கழகம் என்ற அறிதல் எல்லாரிடமும் பரவி இருந்தது.

ஓக்லஹோமா மாநில பல்கலைக்கழகம் ஸ்டில் வாட்டல் என்ற சிறு நகரில் இருந்தது. அங்கே எம்.பி.ஏ. பட்டப்படிப்பில் நான் சேர்ந்தபோது எனக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கவில்லை.

முதல் காலாண்டுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றால் அடுத்த ஆண்டு படிப்பிற்கான உதவித்தொகை கிடைத்துவிடும் எனத் தெரிந்துகொண்டேன். எனக்கு அந்தக் காலாண்டுத் தேர்வில் மிக அதிகமான மதிப்பெண்கள் கிடைத்தன.

ஆனால், அந்தப் பல்கலைக்கழகத்தில் கூடுதலாக கல்வி உதவித்தொகை வழங்க நிதி இல்லை. எனவே, பக்கத்து மாநிலமான டெக்ஸாஸில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்திற்கு சென்று படித்தால் நிதியுதவி நிச்சயம் எனக் கூறினார்கள்.

ஒரு பல்கலைக்கழகத்திலிருந்து மற்றொரு பல்கலைக்கழகத்திற்கு செல்வது அங்கே சர்வ சாதாரணம். நான் டெக்ஸாஸ் மாநில ஆர்லிங்டன் பல்கலைக்கழகத்திற்கு சென்று எம்.பி.ஏ. படிப்பதற்காக மனுச் செய்துவிட்டு அந்த துறையின் தலைமைப் பேராசிரியரை சந்தித்தேன்.

எனக்கு மதிப்பெண் அதிகம் இருந்தமையால் அட்மிஷனும் கல்வி உதவித்தொகையும், பேராசிரியர் ஒருவரின் உதவியாளர் பணியும் வழங்கப்பட்டது. ஒரு வாரத்தில் அந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, நான் என் படிப்பைத் தொடர்ந்தேன்.

எங்கள் துறையில் நான்கு பேர் அரசின் உதவித்தொகையைப் பெற்று வந்தோம். நான் மட்டும் இந்தியன். மற்ற மூன்று பேரும் அமெரிக்கர்கள். நிதி நெருக்கடி காரணமாக, நான்கு பேருக்கான உதவித்தொகை ஒருவருக்கானதாகக் குறைக்கப்பட்டது. அது எனக்கு ஒதுக்கப்பட்டது.

மீதமுள்ள மூன்று பேருக்கும் உதவித்தொகை ரத்து செய்யப்பட்டது. இது எனக்கு சங்கடமான மனநிலையை உருவாக்கியது.

அவர்களுக்கு உதவித்தொகை ரத்து செய்யப்பட்டது எனக்கு கவலை அளிப்பதாக அவர்களிடம் நான் கூறினேன். அதற்கு அவர்கள், "இதில் கவலைப்பட ஒன்றுமே இல்லை. நம் நான்கு பேரில் நீ அதிக மதிப்பெண் பெற்றதால் உதவித்தொகை பெறும் தகுதி உனக்கு மட்டும்தான் உண்டு என்பது எங்களுக்கு தெரியும்' என கூறியது எனக்கு இன்ப அதிர்ச்சி!

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மக்களின் குணாதிசயங்கள்தான் அடிப்படை என்று சமூகவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அமெரிக்காவில் மிகப்பெரிய தனவந்தர்கள், வியாபாரிகள், சாதாரண வேலை செய்பவர்கள் என சமூகத்தின் எல்லா மட்டத்திலிருப்பவர்களும் நேர்மையாக நடந்து கொள்வதை நான் பார்த்தேன்.

அதிக வசதியில்லாத மாணவன் நான் என்பதால், எனது கல்வி உதவித்தொகைக்கு ஏற்ப வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு உருவாகியது.

எனது இரண்டு குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்தபோதுதான் எனக்கு தெரிய வந்தது, அந்நாட்டில் மாத வருமானம் 1,000 டாலருக்கு கீழே இருந்தால் குழந்தைகளுக்கு பள்ளிக்கூட கட்டணம் கிடையாது என்பது.

மேலும் அவர்களுக்கு பள்ளி புத்தகங்கள் மற்றும் சீருடைகள் இலவசம்; காலை உணவும், மதிய உணவும் பள்ளியிலேயே. அரசு இதைப் பற்றி எந்த விளம்பரமும் செய்து கொள்வதில்லை.

நானும் எனது மனைவியும் வாடகைக்கு வீடு தேடியபோது, ஒரு வீட்டிற்கு சென்று எல்லா இடங்களையும் பார்த்த பின்னர் அந்த வீட்டின் சொந்தக்காரர் வாடகை மாதம் 250 டாலர் எனக் கூறியதைக் கேட்ட பின், மறுநாள் வந்து முடிவை சொல்வதாகக் கூறினோம்.

அந்த தெருவிலேயே இருந்த மற்றொரு வீட்டில் உள்ள மணியை அழுத்தி அதன் சொந்தக்காரரிடம் வீட்டை காண்பிக்கச் சொன்னோம். அந்த வீட்டின் மாத வாடகை 200 டாலர் எனக் கூறினார்.

அவரிடம் "சார், உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள வீடும் வாடகைக்கு வருகிறது. அந்த வீடு இதைவிட கொஞ்சம் சிறியது. ஆனால், வாடகை இதைவிட 50 டாலர் அதிகம் கேட்கிறார்கள்' எனக் கூறினேன் நான்.

அதற்கு, அவர், "எனக்கு அதுபற்றித் தெரியாது. ஆனால், நிச்சயம் எங்கள் வீட்டை விட ஏதேனும் ஒரு வகையில் அது சிறந்ததாகத்தான் இருக்கும் என நம்புகிறேன். அதனால்தான், அவர்கள் அதிக வாடகை கேட்கிறார்கள் என நினைக்கிறேன்' என்றார்.

அவரது பெருந்தன்மை என்னை ஆச்சரியப்பட வைத்தது. அப்படியே நமது ஊர் நிலைமையை கற்பனையில் ஓடவிட்டேன். பக்கத்து வீட்டுக்காரர்களுடன் நல்லெண்ணம், நட்புறவு எதுவுமே இங்கே கிடையாது என்பதே உண்மை.

அமெரிக்காவின் எல்லா மாநிலங்களிலும் மக்கள் மிக உயர்ந்த குணாதிசயங்களுடன வாழ்ந்து வருவது அவர்களுடைய கட்டுக்கோப்பான சமூக வாழ்க்கை அமைப்பை எனக்கு உணர்த்தியது.

படித்தவர்கள், பணக்காரர்கள், நடுத்தர வர்க்கத்தினர் என்று எல்லாத் தட்டு மக்களும் நல்ல குணாதிசயங்களுடன் அங்கே உருவாகியிருப்பது அதிசயமான ஓர் அம்சம்.

அங்கே இருக்கும்போது வசதியில்லாத ஒரு மாணவனாக கடினமான கல்வி அமைப்பில் எனது கல்லூரி, பாடங்களைப் படிக்க வேண்டிய சூழ்நிலையில் நான் இருந்தேன்.

எனது நண்பர் ஒருவர் இராக் நாட்டைச் சேர்ந்தவர். அங்கே ஷா மன்னரை எதிர்த்து உருவான போராட்டங்களால் பாதிக்கப்பட்டு அந்நாட்டிலிருந்து குடிபெயர்ந்து அமெரிக்காவிற்கு வந்து குடியேறி கார் மெக்கானிக் அவர். அவரது உதவியுடன் 800 டாலர் பணத்தில் ஒரு பழைய ஃபோர்ட் காப்ரி எனும் காரை விலைக்கு வாங்கி நான் உபயோகித்து வந்தேன்.

எனது அமெரிக்க நண்பர்கள், "800 டாலரில் ஒரு காரா? அப்படிப்பட்ட காரில் ஏறி நாங்கள் அடுத்த தெருவிற்குகூட போகமாட்டோம்' என கேலி செய்வார்கள்.

ஒரு நாள் அந்த காரை நான் ஓட்டிச் சென்றபோது எஞ்சின் பகுதியில் பயங்கர சப்தம் ஏற்பட்டதால் காரை நிறுத்திவிட்டு அருகில் இருந்த ஒரு பெட்ரோல் நிலையத்திற்கு சென்று அங்கிருந்த ஊழியரிடம் வாகன பணிமனைக்கு செல்ல வேண்டும் என்றும் கூறினேன். அவர் வந்து என் காரை ஸ்டார்ட் செய்து பார்த்தார்.

பின்னர் காரின் கீழே ஒரு பெரிய கருவியை இயங்க வைத்து காரை மேலே தூக்கினார். காரின் கீழே இருந்து கொண்டு அடிப் பாகத்தை ஆய்வு செய்து பின் நீண்ட கம்பியில் முறுக்கும் கருவியை நுழைத்து பல நட்டுகளை முடுக்கிவிட்டார்.

அது முடிந்த பின், என்னிடம் காரை ஓட்டிப் பாருங்கள் எனக் கூறினார். அந்த காரை நான் ஓட்டியபோது கார் சரியானது எனக்குத் தெரிந்தது.

அவரிடம் சென்று நான் "எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்' எனக் கேட்டபோது, "ஒன்றுமில்லை எனக் கூறி உங்கள் காரில் சில நட்டுகள் கழண்டிருந்தன அதை முறுக்கிவிட்டேன் அவ்வளவுதான், நீங்கள் பத்திரமாக பயணம் செய்யலாம்' என மகிழ்ச்சியுடன் கூறினார். அந்த நிகழ்வு என்னை மகிழ்ச்சி கலந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியது!

ஆக, அந்தச் சமூகத்தின் எல்லாப் பகுதி மக்களும் நேர்மையுடன் வாழ்வதையும், இங்கே அப்படி இல்லை என்பதையும் கணக்கிலெடுத்து நமது சமூக முன்னேற்றத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை விவாதிப்பது இன்றைய அவசரத் தேவையாகிறது.

ஆனால், நம் அரசியல் தலைவர்கள் அதைச் செய்யாமல் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி என்ற எண்ணத்திலேயே வலம் வருவது மிகவும் வருத்தமளிக்கும் அம்சம்.



கட்டுரையாளர்: ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு).

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024