Friday, February 13, 2015

காதலர் தினம் நாளை கொண்டாட்டம்: கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள ரோஜாப்பூக்கள் 20 பூ அடங்கிய ஒரு கட்டு ரூ.160–க்கு விற்பனை



காதலர் தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனைக்காக ரோஜாப்பூக்கள் குவிக்கப்பட்டுள்ளன. 20 பூ அடங்கிய ஒரு கட்டு ரூ.160–க்கு விற்பனை செய்யப்படுகிறது.

காதலர் தினம்

உலகம் முழுவதும் காதலர் தினம் நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் இத்தாலியை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் வாலண்டைன் அந்த நாட்டு ஆட்சியாளர்கள் எதிர்ப்பையும் மீறி காதலர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்.

இதனால் அந்த நாட்டு ஆட்சியாளர்கள் அவரை சிறையில் அடைத்தனர். பின்னர் காதலர்கள் மத்தியில் பாதிரியார் வாலண்டைனுக்கு செல்வாக்கு அதிகரித்தது. அவருடைய நினைவு நாளான பிப்ரவரி 14–ந்தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது.

காதலர்கள் தினத்தில் காதலர்கள் தங்களுடைய அன்பை பரிமாறிக்கொள்வதற்காக பல்வேறு விதமான பரிசுப்பொருட்களை வாங்கி கொடுப்பார்கள். அதில் முக்கிய பங்கு வகிப்பது ரோஜாப்பூ.

20 பூ ரூ.160–க்கு விற்பனை

அந்த வகையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனைக்காக ரோஜாப்பூக்கள் கடந்த 2 நாட்களாக குவிக்கப்பட்டுள்ளன. சாதாரண நாட்களை விட காதலர் தினத்தையொட்டி ரோஜாப்பூக்கள் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

பெரும்பாலான ரோஜாக்கள் ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களில் இருந்து விற்பனைக்காக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன.

இந்த ரோஜாக்களில் சாதாரண ரோஜாப்பூ, தாஜ்மஹால் ரோஜாப்பூ என 2 விதமான வகைகள் இருக்கின்றன. இதில் 20 சாதாரண ரோஜாக்கள் அடங்கிய ஒரு கட்டு ரூ.160–க்கும், 20 தாஜ்மஹால் ரோஜாக்கள் அடங்கிய ஒரு கட்டு ரூ.180–க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

பூச்செண்டு கடைகளில்...

கடந்த ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் தான் இதுவரை விற்பனை செய்யப்படுவதாகவும், காதலர் தினத்தன்று விலை சற்று உயர்ந்து காணப்படலாம் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

கோயம்பேடு மார்க்கெட்டில் மட்டும் அல்லாது, சென்னை நகரில் ஆங்காங்கே உள்ள பூச்செண்டு விற்பனை கடைகளிலும் பல்வேறு வண்ணங்களில் உயர்ரக ரோஜாப்பூக்கள் வைக்கப்பட்டுள்ளன. விற்பனை கடைகளில் உள்ள தொழிலாளர்களின் கைவண்ணங்களில் வித்தியாசமாக ரோஜாப்பூக்கள் அலங்காரம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024