Friday, February 13, 2015

குழந்தையுடன் 'லிப்ட்' கேட்டார் பெண்;காரை நிறுத்தியவருக்கு 'எல்லாம் போச்!'

வேலுார்:இரவு நேரத்தில், கைக்குழந்தையுடன் பெண், 'லிப்ட்' கேட்டதால், பரிதாபப்பட்டு காரை நிறுத்தியவரை, ஆறு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கி, பணம் மற்றும் மொபைல்போன்களை பறித்து ஓட்டம் பிடித்தது; இவர்களுடன் சேர்ந்து, பெண்ணும் ஓட்டம் பிடித்தார்.

வேலுார் மாவட்டம், வாணியம்பாடி அருகே ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்தவர், வினோத்குமார், 27; பூ வியாபாரி. இவர், நேற்று முன்தினம் வேலுாரில் இருந்து அணைக்கட்டு வழியாக ஆலங்காயத்துக்கு, காரில் புறப்பட்டார். இரவு, 9:45 மணிக்கு, ஆசனாம்பட்டு அடுத்த குறவன்கொட்டாய் அருகே உள்ள மலைப்பகுதியில், கைக்குழந்தையுடன் நின்றிருந்த பெண், 'லிப்ட்' தருமாறு சைகை காட்டினார்.

பரிதாபப்பட்டு காரை நிறுத்திய வினோத்குமார், கீழே இறங்கியது தான் தாமதம்; உடனே, ஆறு பேர் கொண்ட கும்பல் அவரை சூழ்ந்து, பணம், பொருட்களை கேட்டு மிரட்டியது.

வினோத்குமார் மறுத்ததால், சரமாரியாக அடித்து உதைத்தது.பின், அவரிடம் இருந்த மொபைல்போன்கள் மற்றும் 15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்து, சிறிது துாரத்தில் நிறுத்தியிருந்த வேனில் தப்பியது; 'லிப்ட்' கேட்ட பெண், குழந்தையை துாக்கிக் கொண்டு கும்பலுடன் சேர்ந்து ஓட்டம் பிடித்தார். வினோத்குமார் சத்தம் போட்டும், மலைப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால், அவருக்கு உதவி செய்ய யாரும் வரவில்லை. படுகாயத்துடன் மீண்டும் வேலுார் திரும்பி, வேப்பங்குப்பம் போலீசில் நள்ளிரவில் புகார் கொடுத்தார்.

போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024