Friday, February 13, 2015

இருளும் ஒளியும்!

Dinamani

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் 2013-14 நிதியாண்டின் இழப்பு ரூ.13,985 கோடி என்பது மிகப்பெரும் மின் அதிர்வைத் தந்தாலும், இது கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு ஆட்சிகளிலும் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நட்டம் என்பதுதான் உண்மை.

"எங்கள் ஆட்சிக் காலத்தில் இவ்வளவு நட்டம் இல்லை' என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி சொன்னாலும், கடந்த நான்கு ஆண்டுகளில் நட்டம் அதிகமாக இருக்கிறது என்று அ.தி.மு.க.வை மட்டும் மறைமுகமாக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குறிப்பிட்டாலும், மின் வாரியத்தில் அதிகரித்து வரும் நட்டத்தை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாற்ற முடியவில்லை என்பதுதான் நிஜம். வரவு எட்டணா, செலவு பத்தணா என்றால் ஆண்டுதோறும் இந்த நட்டம் கூடத்தான் செய்யும். இதில் அ.தி.மு.க.வை மட்டும் குறை சொல்வது, அரசியல் சாடலுக்கு மட்டுமே உதவலாம்.

மின் வாரியத்திற்கு மின் கட்டணத்தின் மூலம் (2013-14 நிதியாண்டில்) கிடைக்கும் நேரடி வருவாய் ரூ.29,536 கோடி மட்டுமே. இது நீங்கலாக, இலவச மின்சார மானியத் தொகை மற்றும் மின் கட்டணத்தை உயர்த்தாமல் சலுகை அளிப்பதற்கான ஏற்பளிப்புத் தொகையாக ரூ.4,985 கோடியை தமிழக அரசு வழங்குகிறது. ஆனால், இந்த மானியத் தொகையில் ரூ.4,622 கோடி தொழிலாளர்களின் ஊதியமாகப் போய்விடுகிறது.

மின்சாரத்தை வெளிமாநிலங்களிலிருந்தும், அரசு மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் தனியாரிடமிருந்தும் வாங்குவதற்காக ரூ.30,529 கோடி, மாநிலத்தில் அரசு மின் நிலையங்களில் மின் உற்பத்தி மற்றும் பராமரிப்புச் செலவுகள் ரூ.7,613 கோடி, ஏற்கெனவே வாங்கிய கடன்களுக்கான வட்டி ரூ.7,933 கோடி ஆகியவற்றை மின் வாரியம் தனக்கு கிடைக்கும் நேரடி மின் கட்டண வருவாய் ரூ.29,536 கோடியைக் கொண்டு ஈடு செய்வது எப்படி சாத்தியம்?

2003-04 நிதியாண்டில் தமிழகத்தின் மின்சாரத் தேவை 39,240 மில்லியன் யூனிட்டு. மின்சாரம் வாங்கிய செலவு ரூ.6,664 கோடி. மின் கட்டணம் மூலம் கிடைத்த வருவாய் போக, கூடுதல் பற்றாக்குறை அல்லது நட்டம் ரூ.1,110 கோடி. 2013-14 நிதியாண்டில் தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை 91,642 மில்லியன் யூனிட்டு. தேவை சுமார் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு அரசு தனியார் மின் உற்பத்தி நிலையங்களிடம் கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதால்தான் நட்டம் என்று எதிர்க்கட்சிகள் சொல்கின்றன. தற்போதைய தேவையாகிய 91,942 மில்லியன் யூனிட் மின்சாரத்தில் 37% (அதாவது 34,253 மில்லியன் யூனிட்) தமிழகத்திலும், 33% (அதாவது 30,534 மில்லியன் யூனிட்) மத்திய தொகுப்பிலிருந்தும் பெறப்படுகின்றன. தனியாரிடம் வாங்கப்படும் மின்சாரத்தின் அளவு 3,050 மில்லியன் யூனிட் மட்டுமே. இதுவும்கூட, பல நீண்டகால ஒப்பந்தங்களின் அடிப்படையில் முந்தைய அரசுகளால் போடப்பட்டவை. அப்படியே தமிழக அரசு "திட்டமிட்டு' கூடுதல் விலைக்கு வாங்கியிருந்தாலும்கூட எதிர்க்கட்சிகள் சொல்வதுபோல இத்தனை ஆயிரம் கோடி நட்டத்துக்குக் காரணம் அதுவல்ல.

கடந்த பத்து ஆண்டுகளில் மின் உற்பத்திச் செலவுக்கு இணையாக மின் கட்டணத்தை உயர்த்த முயன்றபோதெல்லாம் கடும் எதிர்ப்பு எழுந்தது. இப்போதும்கூட, மின் கட்டண உயர்வு தொடர்பான மக்கள் ஆலோசனைக் கூட்டங்களில், மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்பதுதான் கோரிக்கையாக இருக்கிறது. மக்களின் கோபத்தை எதிர்கொள்ளப் பயந்து, ஆளும் கட்சி, மின் கட்டணத்தின் கூடுதல் தொகையை தானே மின் வாரியத்துக்கு வழங்கி நிலைமையைச் சமாளிக்கிறது.

3,000 மில்லியன் யூனிட்டுகளை தனியாரிடமிருந்து வாங்குவதைக் குறைத்து கொண்டால், மாநில உற்பத்தி, மத்திய தொகுப்பைக் கொண்டு மின்சாரம் வழங்க முடியும். அவ்வாறு செய்தால் மின் தடையைத் தவிர்க்க முடியாது. அவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மின் தடை என்றாலும், எதிர்க்கட்சிகள் "இருண்ட தமிழகம்' என்று விமர்சிக்கத் தொடங்கிவிடும். "தமிழக மக்கள் இரண்டு மணி நேர மின் தடையைப் பொறுத்துக்கொள்வார்கள்; அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டியதில்லை' என்று தமிழக அரசிடம் சொல்லும் பொறுப்புணர்வு எந்தக் கட்சிக்கும் கிடையாது.

தடையில்லா மின்சாரம் வேண்டும்; மின் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, போனஸ் வழங்க வேண்டும்; ஆனால், மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது. விவசாயத்துக்கும் குடிசைகளுக்கும் இலவச மின்சாரம் வேண்டும்; ஆனால் மீட்டர் பொருத்தக் கூடாது. இவைதான் தமிழக அரசின் நிலைப்பாடு என்றால், எந்தக் கட்சி ஆட்சியாக இருந்தாலும் மின் வாரியத்தின் நட்டம் குறையாது.

தொழில் துறைக்கு தனியாக மின் கம்பி, வீட்டு இணைப்புகளுக்கு தனியாக மின் கம்பி என்று அமைக்கப்படாமல், வீடுகளுக்கு பகலில் இரண்டு மணி நேரம் மின் தடை ஒரு பொருட்டல்ல என்கிற மக்கள் மனநிலை உருவாகாமல், விவசாயத்துக்கு இலவச மின்சாரப் பயன்பாட்டை மீட்டர் பொருத்தி அளவிடவும், நிலக்கரி விலை உயர்வுக்கு ஏற்ப மாறுபடும் மின் உற்பத்திச் செலவுகளுக்கு ஏற்ப மின் கட்டணத்தைச் செலுத்தும் நடைமுறை உருவாகாமல், மின்சார வழித்தட இழப்பு 18% ஆக இருப்பதை ஒற்றை இலக்கமாக குறைக்காமல், மின் வாரியம், மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்படும் விபத்து, நட்டங்களுக்கு அதிகாரிகளையும் மின் வாரிய ஊழியர்களையும் பொறுப்பேற்கச் செய்யாமல் மின் வாரியத்தின் நட்டத்தை போக்குதல் என்பது சாத்தியமல்ல.

பிரச்னைகளை எதிர்கொள்ளும் மனத் துணிவும் மக்கள் மன்றத்தில் அதைப் புரிய வைக்கும் சாதுர்யமும் இருந்தால் மட்டுமே மின் வாரிய நட்டத்தை குறைக்கவோ நீக்கவோ முடியும்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024