திண்டுக்கல்: பாம்புகளை நேசித்து கல்லூரி மாணவர், பாம்பு கடித்து பலியான சோகம் திண்டுக்கல்லில் நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் எந்த பகுதியில் பாம்பை பார்த்தாலும்...ரஜினியைப் போல ‘பா...பாம்...பாம்பு’ என அலறுவதற்கு பதில் நவீன்குமார் என்றுதான் அலறுவார்கள். எங்கு பாம்பு இருந்தாலும் அதை லாவகமாக பிடித்து, வனப்பகுதியில் கொண்டு விட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தவர் நவீன்குமார்.
திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரியில் பி.ஏ வரலாறு முதலாமாண்டு படிக்கும் இவர், தனது 10 வயதில் இருந்து பாம்புகளை பிடித்து வருபவர். 6ஆம் வகுப்பு படிக்கும்போது, பள்ளிக்குள் வந்த பாம்பை பிடித்ததுதான் இவரின் முதல் அனுபவம். அன்று முதல் குடியிருப்பு பகுதிகளில் பாம்பு புகுந்தால் இவரைத்தான் அலைபேசியில் அழைப்பார்கள்.
வனத்துறையும் பாம்பு பிடிக்க இவரை பயன்படுத்தி வந்தது. பாம்புகளை அதிகம் நேசிக்கும் நவீன்குமார், சில இடங்களில் அவசரப்பட்டு பொதுமக்கள் அடித்து காயப்படுத்தும் பாம்புகளை கொண்டு காயத்திற்கு மருந்துப் போட்டு, அது குணமான பின்புதான் காடுகளில் விடுவார். பாம்புகளுக்கு எலியை உணவாகக் கொடுப்பதுடன், பாம்புகளை வைத்து பலமணி நேரம் விளையாடி சாதனை படைத்திருக்கிறார்.
பாம்புகள் மீது அதிக அன்பு வைத்திருந்த நவீன், அடிபட்ட பாம்புகளுக்கு மருந்து தடவிக்கொண்டே, ‘பயப்படாதே...குணமாகிடும்...’ என ஆறுதல் சொல்வாராம். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பாக காமாட்சிபுரம் பகுதியில் புகுந்த ராஜநாகத்தை அப்பகுதி மக்கள் அடித்து விட்டனர். அதிக காயங்களுடன் இருந்த அந்த ராஜநாகத்தை அங்கிருந்து எடுத்து வந்து தனது வீட்டில் வைத்து மருந்துப் போட்டு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்திருக்கிறார்.
இந்நிலையில், பையில் இருந்த பாம்புக்கு சிகிச்சை அளிப்பதற்காக பையை திறந்தபோது, அதிக கோபத்துடன் இருந்த ராஜநாகம், அவரின் மேல் உதட்டில் கடித்தது. உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனில்லாமல் இறந்தார்.
கடிப்பதற்கு முதல்நாள், 'இனிமேல் பயப்படாதே... உன்னை யாரும் அடிக்கமாட்டாங்க’ என ராஜநாகத்திடம் பேசியபடியே மருந்து தடவியதை சொல்லிச் சொல்லி சோகத்தில் துடிக்கிறார்கள் அவரது உறவினர்கள்.
-ஆர்.குமரேசன்
No comments:
Post a Comment