நாற்பது வயதைக் கடந்த ஆண், பெண் இரு பாலருக்கும் ஏற்படுகிற நோய்களுள் 'மூலநோய்' (Piles) முக்கியமானது. இந்த நோய் வந்தவர்களில் பெரும்பாலோர் வெளியில் சொல்ல வெட்கப்பட்டு முறையான சிகிச்சையை எடுக்கத் தவறுவதால், பின்னாளில் கடுமையான மலச்சிக்கல், ஆசனவாயில் வலி, ரத்தப்போக்கு, ரத்தசோகை எனப் பல துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள்.
எது மூலநோய்?
சாதாரணமாக, நம் உடலில் உள்ள சிரை ரத்தக் குழாய்களில் (Veins) குறிப்பிட்ட இடைவெளிகளில் தடுப்பு வால்வுகள் உள்ளன. இவை ரத்தத்தை இதயத்துக்குச் செலுத்துகின்றன; ரத்தம் தேவையில்லாமல் சிரைக் குழாய்களில் தேங்கி நிற்பதைத் தவிர்க்கின்றன. ஆனால், நம் உடல் அமைப்பின்படி ஆசனவாயிலிருந்து குடலுக்குச் செல்லும் சிரைக் குழாய்களில் மட்டும் இந்தத் தடுப்பு வால்வுகள் இயற்கையிலேயே அமையவில்லை.
இதனால் அந்த ரத்தக்குழாய்களில் அழுத்தம் சிறிது அதிகமானால்கூட ரத்தம் தேங்கி, சிறிய பலூன் போல வீங்கிவிடுகிறது. இப்படி ஆசன வாயில் உள்ள இரண்டு சிரை ரத்தக்குழாய்கள் ஏதோ ஒரு காரணத்தால் வீங்கிப் புடைத்து, தடித்து ஒரு கட்டி போலத் திரண்டு விடுவதை ‘மூலநோய்’ என்கிறோம்.
காரணங்கள்
மலச்சிக்கல் மூலநோய்க்கு முக்கியக் காரணம். மலச்சிக்கலின்போது மலத்தை வெளியேற்றுவதற்கு முக்கவேண்டி இருப்பதால், அப்போது ஆசனவாயில் அழுத்தம் அதிகரித்து மூலநோயைத் தோற்றுவிக்கும்.
ஆண்களுக்கு ஏற்படுகிற சிறுநீர்த்தாரை அடைப்பு, புராஸ்டேட் வீக்கம் போன்றவற்றாலும் இம்மாதிரி அழுத்தம் அதிகமாகி மூலநோய் உண்டாகிறது.
வயிற்றில் உருவாகும் கட்டிகள், மலக்குடலில் உருவாகும் புற்றுநோய்க் கழலைகள் மற்றும் கொழுத்த உடல் போன்றவையும் மூலநோயை ஏற்படுத்தும்.
கர்ப்பிணியின் வயிற்றில் குழந்தை வளர வளர அடிவயிற்றில் இருக்கும் உறுப்புகள் கீழ்நோக்கித் தள்ளப்படுவதால், அவை ஆசனவாய் சிரைக்குழாய்களை அழுத்தி வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக சில பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் மட்டும் தற்காலிகமாக மூலநோய் வருகிறது.
சிலருக்குப் பரம்பரை காரணமாக ஆசனவாயில் உள்ள சிரைக்குழாய்கள் மிக மெல்லியதாக இருக்கும். இதனாலும் மூலநோய் வரலாம். நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து குறைந்த உணவு வகைகளைச் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு, மாமிச உணவு வகைகளையும் விரைவு உணவு வகைகளையும் அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு, மூலநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
புகைபிடிப்பதும் மது அருந்துவதும் போதைப்பொருள்களை உபயோகிப்பதும் ரத்தக்குழாய்களைப் பாதிப்பதால், இப்பழக்கம் உள்ளவர்களுக்கு மூலநோய் எளிதில் வந்துவிடும்.
மூலநோய் வகைகள்
மூலநோய் இரு இடங்களில் ஏற்படுகிறது. 1. ஆசனவாயின் வெளிப்புறத்தில் தோன்றுவது 'வெளிமூலம்' . 2. ஆசனவாயின் உள்ளே சளிப்படலத்தில் உருண்டையாக புதைந்திருப்பது 'உள்மூலம்'.
சாதாரணமாக, நாற்பது வயதைக் கடந்தவர்களுக்கு இந்த நோய் வருவதற்கு அதிக வாய்ப்பிருப்பதால், அந்த வயது உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
ஆனால், நடைமுறையில் பலருக்கு மூலநோய் இருப்பது தெரிந்தால்கூட ஆரம்பத்தில் வலியோ, சிரமமோ இருக்காது என்பதால் அதைக் கவனிக்கத் தவறி விடுகின்றனர். பின்னாளில் வீக்கம் பெரிதாகி பல தொல்லைகள் தரும்போது வேதனைப்படுகின்றனர்.
அறிகுறிகள்
ஆசனவாயில் சிறிய வீக்கம் தோன்றும், வலி இருக்காது. அடுத்த நிலையில் மலம் கழிக்கும்போது லேசாக ரத்தம் கசியும். அல்லது மலத்தோடு வரிவரியாக ரத்தம் வெளிப்படும். சில வாரங்களில், அந்த நபருக்கு மலம் கழித்த பின்னர் சொட்டுச் சொட்டாக ரத்தம் வெளிவரும். சிலருக்கு வீக்கம் பெரிதாகி நிலைத்துவிடும். அப்போது அடிக்கடி ஆசனவாயில் வலியை ஏற்படுத்தும்.
அந்த வீக்கத்தில் புண் உண்டாகி, அரிப்பு, வலி தொல்லை தரும். அதனால் மலம் கழிப்பதில் சிரமம் உண்டாகும், மலச்சிக்கல் ஏற்படும். 'முள்ளின் மீது உட்கார்ந்திருப்பதைப் போன்ற அவதி' என்று சொல்வது, இதற்கு மிகவும் பொருந்தும். ஆசன வாயில் வெடிப்பு (Anal fissure) புண், சுருக்கம் இருந்தாலும் இந்த மாதிரியான வலி, தொல்லையைத் தரும்.
மூலநோய் அறிகுறிகளை நான்கு நிலைகளாக மருத்துவர்கள் பிரித்திருக்கிறார்கள். காரணம், இந்த நோய்க்குப் பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. அவற்றில் எந்தச் சிகிச்சை முறை குறிப்பிட்ட நோயாளிக்கு நல்ல பலனைத் தரும் என்று முடிவு செய்வதற்கு இது உதவும். மூலநோயின் நிலைக்கு ஏற்ப சிகிச்சை தரப்பட்டால் மட்டுமே, நோய் முழுவதுமாக குணமாகும். அப்படி இல்லாதபோது மூலநோய் மீண்டும் வந்துவிடும்.
மூலநோய் நிலைகள்
முதலாம் நிலையில், சிறிய அளவில் தடிப்பு அல்லது வீக்கம் தோன்றும். அந்த இடத்தில் லேசாக வலி இருக்கும். இரண்டாம் நிலையில், வீக்கம் பெரிதாக இருக்கும். மலம் கழிக்கும்போது ரத்தம் வெளியேறும். மலம் கழித்தபின் வீக்கம் உள்ளே சென்றுவிடும். மூன்றாம் நிலையில், வீக்கம் நிரந்தரமாக இருக்கும். ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். நான்காம் நிலையில், வீக்கத்தில் புண் ஏற்படலாம். வலி அதிகமாகலாம். அடிக்கடி ரத்தம் மிக அதிகமாக வெளியேறும்.
முக்கியக் குறிப்பு
பெருங்குடலில் ஏற்படும் புண், வீக்கம், புற்றுநோய், ஆசனவாயில் ஏற்படும் புற்றுநோய் ஆகியவற்றின் காரணமாகவும் மலம் கழிக்கும்போது ரத்தம் வெளியேறலாம். ஆகவே, ஒருமுறை ஆசனவாயிலிருந்து ரத்த ஒழுக்கு ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் பரிசோதித்து, காரணம் தெரிந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டியது முக்கியம்.
இது மூலநோயாகத்தான் இருக்கும் என்று நீங்களாகவே முடிவு செய்துகொண்டு சிகிச்சை எடுக்காமல் இருந்துவிடக் கூடாது.
சிகிச்சை முறைகள்
மூலநோய்க்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற்றுக்கொண்டால் மருந்து, மாத்திரை, களிம்புகளில் குணப்படுத்திவிடலாம். முக்கியமாக, மலச்சிக்கலுக்கு சரியான சிகிச்சை பெற்றுவிட்டால் போதும். மூலநோயும் விடைபெற்று விடும். மூலநோய்க்குப் பல்வேறு சிகிச்சைமுறைகள் உள்ளன. அவை:
1. சுருங்க வைத்தல் 2. வளையம் இடுதல் 3. உறைய வைத்தல் 4. அறுவைச் சிகிச்சை 5. கதிர்வீச்சு சிகிச்சை 6. லேசர் சிகிச்சை 7. ஸ்டேப்ளர் சிகிச்சை. நோயாளியின் தேவைக்கேற்ப இவற்றில் ஒன்றை மருத்துவர் தேர்வு செய்வார்.
தடுப்பது எப்படி?
மூலநோய் உள்ளவர்கள் மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மலம் கழிப்பதைத் தள்ளிப்போடக் கூடாது. மலம் கழிப்பதற்கு முக்கவும் அவசரப்படவும் கூடாது.
அடிக்கடி அசைவ உணவு வகைகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். காரம் அதிகமான உணவு ஆகாது. மசாலா நிறைந்த, கொழுப்பு மிகுந்த உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்துள்ள உணவு வகைகளை அதிகப்படுத்த வேண்டும்.
பச்சைக் காய்கறிகள், பயறு வகைகள், பொட்டுக்கடலை, அவரைக்காய், கொத்தவரங்க்காய், கீரைகள், முழு தானியங்கள், வாழைத்தண்டு போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம். தினமும் இரண்டு பழ வகைகளைச் சாப்பிட வேண்டும். காபி. தேநீர் குடிப்பதைக் குறைத்துக்கொண்டு, பழச்சாறுகளை அருந்த வேண்டும். தினமும் போதுமான அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும்.
ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதையும், நிற்பதையும் தவிர்க்க வேண்டும். உடற்பருமன் அடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏற்கெனவே, உடல் பருமனாக உள்ளவர்கள், உடல் எடையைக் குறைக்க வேண்டும். வயிற்றில் தோன்றும் கட்டிகள், புற்றுநோய் போன்றவற்றுக்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற்றுவிட வேண்டும்.
புகைப்பிடித்தல், மது அருந்துதல் கூடாது. இடுப்புக்குழித் தசைகளுக்குப் பயிற்சி தரலாம். இயலாதவர்கள் இதற்கென்றே உள்ள யோகாசனங்களைச் செய்யலாம். இவை எல்லாமே மூலநோய்க்குத் தடை போடும்.
சிகிச்சை முறைகள்
சுருங்க வைத்தல்:
ரத்தத்தை உறைய வைக்கும் மருந்தை ஊசிக்குழாயில் எடுத்துக்கொண்டு மூலநோய் ஏற்பட்டுள்ள இடத்தில் செலுத்தி, தடித்துள்ள ரத்தக்குழாயைச் சுருங்க வைப்பது இந்த சிகிச்சையின் முக்கிய செயல்முறை. முதல்நிலை மூலநோயாளிக்கு இது உதவும்.
வளையம் இடுதல்:
இந்த முறையில், மூலநோய் உள்ள பகுதியைச் சுற்றி ஓர் இறுக்கமான ரப்பர் வளையத்தைப் பொருத்துகிறார்கள். இதனால் ரத்தக்குழாய் வீக்கத்துக்குள் ரத்தம் வருவது தடைப்பட்டுப்போகும். இதனால் வீக்கம் சுருங்கிவிடுகிறது. இரண்டாம் நிலை மூலநோய் உள்ளவர்களுக்கு இந்தச் சிகிச்சை உதவும்.
உறைய வைத்தல்:
திரவ நைட்ரஜனை மூலநோயின் மேல் வைத்தால், அதில் உள்ள ரத்தக்குழாய்கள் உறைந்து சுருங்கிவிடும். இரண்டாம் நிலை, மூலநோய் உள்ளவர்களுக்கு இந்தச் சிகிச்சை உதவும்.
அறுவைச் சிகிச்சை:
நாள்பட்ட மூலநோயில் வீக்கம் மிக அதிகமாக இருந்தால், அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றி விடுகிறார்கள். வெளிமூலம் உள்ளவர்களுக்கு இந்தச் சிகிச்சை சிறந்த பலன் தரும்.
கதிர்வீச்சு சிகிச்சை:
ஐ.ஆர்.சி. ( IRC Infra red Coagulation) என்ற கருவி மூலம் இந்தச் சிகிச்சை செய்யப்படுகிறது. இக்கருவி அகச்சிவப்புக் கதிரை உற்பத்தி செய்து, மூலநோய் உள்ள பகுதிக்கு அனுப்புகிறது. அப்போது அக்கதிர்கள் மூலநோய்க்குச் செல்லும் ரத்தத்தை நிறுத்திவிடும். இதனால் மூலநோய் வீக்கம் சுருங்கிவிடும்.
முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை மூலநோய் உள்ளவர்களுக்கு, இதயநோய் உள்ளவர்களுக்கு, கர்ப்பிணிகளுக்கு, மயக்க மருந்து கொடுக்க இயலாத நிலையில் உள்ள முதியவர்களுக்கு இந்தச் சிகிச்சை உதவும்.
லேசர் சிகிச்சை:
லேசர் கதிர்களைச் செலுத்தி மூலநோயில் உள்ள திசுக்களை அழிப்பது, இந்தச் சிகிச்சையின் செயல்முறை. ஆனால், இதற்கு ஆகும் பணச்செலவு சிறிது அதிகம்.
ஸ்டேப்ளர் சிகிச்சை:
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நவீன சிகிச்சை முறை இது. இதற்கு ஆகும் பணச்செலவும் அதிகம்தான். என்றாலும், இதுதான் மிக எளிய சிகிச்சை முறை. நவீன ஸ்டேப்ளர் கருவியைக் கொண்டு மூலநோயின் மேல்பகுதியைத் தையலிட்டு இறுக்கிவிட்டு, வீக்கமுள்ள பகுதியையும் அதை ஒட்டியுள்ள தசைப்பகுதியையும் வெட்டி எடுத்து தையலிட்டுவிடுகிறார்கள்.
இது மூலநோயை நிரந்தரமாக குணப்படுத்திவிடும். மூலநோய் முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கும், முதியவர்களுக்கும் இந்தச் சிகிச்சை நல்ல பலனைத் தருகிறது.
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com