Sunday, February 15, 2015

மீண்டும் 1 ரூபாய் நோட்டுரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை:'புதிய 1 ரூபாய் நோட்டு விரைவில் புழக்கத்திற்கு வர உள்ளது' என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மத்திய அரசு, 1 ரூபாய் நோட்டையும் அதற்கு மேற்பட்ட இரண்டு மற்றும் ஐந்து ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியும் அச்சடித்து வெளியிட்டன.

நிறுத்தம்: இந்நிலையில், 1 ரூபாய் நோட்டு அச்சடிப்பதை, 1994ல், மத்திய அரசு நிறுத்தியது. அதன்பின் இரண்டு மற்றும் ஐந்து ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதும் நிறுத்தப்பட்டது. எனினும் அவை சட்டப்படி இன்னும் புழக்கத்தில் உள்ளன. அதேநேரத்தில் இந்த நோட்டுகளுக்குப் பதிலாக, நாணயங்கள் அதிக அளவில் வெளியிடப்பட்டு வருகின்றன.

இருப்பினும் நாணயங்களை சட்ட விரோதமாக உருக்குவது போன்ற பிரச்னைகளால் நாட்டில் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டது. அத்துடன், நாணயங்களின் தயாரிப்பு செலவும்

அதிகரித்துள்ளதால் மீண்டும் 1 ரூபாய் நோட்டு அச்சடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், கரன்சி அவசர சட்டம் மூலம் நாணயச் சட்டப் பிரிவு 2 நீக்கப்பட்டதால், மத்திய அரசுக்கு, 1 ரூபாய் நோட்டு அச்சடிக்கும் உரிமை இல்லை என, ரிசர்வ் வங்கி வாதாடியது. இதையடுத்து இப்பிரச்னை குறித்து சட்ட அமைச்சகத்திடம் மத்திய அரசு ஆலோசனை கேட்டது.

அதற்கு 2011ம் ஆண்டு நாணயச் சட்டத்தில், மத்திய அரசு 1 ரூபாய் நோட்டு அச்சடிப்பதை தடை செய்யும் பிரிவு இல்லை என சட்ட அமைச்சகம் சுட்டிக் காட்டியது. இதை ரிசர்வ் வங்கி ஏற்றுக் கொண்டதால் இப்பிரச்னை முடிவிற்கு வந்தது. இதை தொடர்ந்து, புதிய 1 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு அச்சிட்டு வருகிறது. இந்த நோட்டு களை விரைவில் வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. செல்லுபடி: புதியவற்றுடன் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள பழைய 1 ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகும். 'புதிய 1 ரூபாய் நோட்டானது அடர்த்தியான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். அதில், ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தின் மும்பை ஹையில் அமைந்துள்ள சாகர் சாம்ராட் எண்ணெய் துரப்பண மையத்தின் படம் இடம் பெற்றிருக்கும்' என ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024