பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் தார்மிக ரீதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும், செயல்பாடுகளையும், சட்டம் போட்டும், உத்தரவு பிறப்பித்தும், விதிமுறைகளை உருவாக்கியும் உறுதிப்படுத்துவது என்பது எந்த அளவுக்கு நமது நிர்வாகம் சீர்கெட்டிருக்கிறது என்பதைத்தான் அடையாளப்படுத்துகிறது. மாநில ஆளுநர்களும், இந்தியக் குடிமை, காவல், வெளியுறவுப் பணியில் இருக்கும் அதிகாரிகளும் அவர்களாகவே கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை அரசு உத்தரவு பிறப்பித்து நடைமுறைப்படுத்த முற்பட்டிருப்பதை வரவேற்பதா, துரதிர்ஷ்டம் என்று வேதனைப்படுவதா என்று தெரியவில்லை.
மாநில ஆளுநர்களுக்குப் புதிதாகப் பதினெட்டு அம்ச சட்ட திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி, மாநில ஆளுநர்கள் விருப்பப்படி சொந்த மாநிலத்துக்கு அடிக்கடி சென்றுவிட முடியாது. ஆண்டொன்றுக்கு 73 நாள்கள், அதாவது 20% நாள்கள் மட்டுமே, பதவி வகிக்கும் மாநிலத்தை விட்டு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள முடியும் என்கிற கட்டுப்பாட்டை ஆளுநர்களுக்கு விதித்திருக்கிறது நரேந்திர மோடி அரசு.
தங்களது தனிப்பட்ட அலுவல், குடும்ப நிகழ்வுகளைக்கூட அரசுமுறைப் பயணமாக்கிச் சொந்த மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஆளுநர்கள் அடிக்கடி பயணிக்கும் போக்கு அதிகரித்ததைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. இனிமேல், மாநில ஆளுநர்களும், துணைநிலை ஆளுநர்களும் உள்நாட்டுப் பயணமாக இருந்தால் ஒரு வாரம் முன்பாகவும், வெளிநாட்டுப் பயணமாக இருந்தால் ஆறு வாரங்களுக்கு முன்பாகவும் குடியரசுத் தலைவரிடம் அனுமதி பெற்றாக வேண்டும். அவசர நிமித்தம் உள்நாட்டுப் பயணம் மேற்கொண்டால், பயணம் செய்த பிறகு அல்லது புறப்படும் முன்பு குடியரசுத் தலைவரிடம் அறிவித்தால் போதும். வெளிநாட்டுப் பயணமாக இருந்தால் இதுவும் அனுமதிக்கப்படவில்லை.
முந்தைய மன்மோகன் சிங் அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் அகற்றப்பட்டு, மோடி அரசால் நியமிக்கப்பட்டவர்கள் பெரும்பாலான மாநிலங்களில் ஆளுநர்களாக இருக்கும் நிலையில், இதற்குப் பின்னால் அரசியல் பழிவாங்குதல் இருக்கிறது என்று யாரும் குற்றம்சாட்ட முடியாது. மூதறிஞர் ராஜாஜி குறிப்பிட்டதுபோல, ஆளுநர் பதவி என்பது தீயணைப்பு வாகனம் போன்றது. அதற்கு அன்றாடத் தேவை இல்லாவிட்டாலும், திடீர் அவசியம் நேரும்போது தயாராக இருத்தல் வேண்டும். ஆளுநர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடு, நரேந்திர மோடி அரசின் பாராட்டுதற்குரிய நிர்வாக முடிவுகளில் ஒன்று.
அடுத்ததாக, இந்திய குடிமைப் பணியில் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். அதிகாரிகள் ரூ. 5,000-க்கும் அதிக மதிப்புள்ள பரிசுப் பொருள்களைப் பெற்றுக்கொள்ள அரசின் முன்அனுமதி பெற வேண்டும் என்றும், உறவினர்கள் அல்லது நண்பர்களிடமிருந்து ரூ.25,000-க்கு அதிகமான பரிசுப் பொருள்களைப் பெற்றால் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
ரூ.5,000 மதிப்புள்ள பரிசுப் பொருள் மட்டுமல்ல, இலவச கார் அல்லது வாகனத்தைப் பயன்படுத்துதல், விமான டிக்கெட் பெறுதல் அல்லது தனியார் விருந்தினர் மாளிகையில் தங்குதல், அவர்கள் செலவில் 5 நட்சத்திர ஹோட்டலில் சாப்பிடுதல் போன்றவையும் அடங்கும்.
இந்த நடைமுறை புதியதல்ல. இதுநாள் வரை இதே நிபந்தனையானது, பரிசுப் பொருளுக்கு ரூ.1,000 ஆகவும், உறவினர்களிடமிருந்து பெற்றால் தெரிவிக்க வேண்டிய பரிசுப் பொருள் மதிப்பு ரூ.5,000 ஆகவும் இருந்தது. தற்போது இதன் அளவு உயர்த்தப்பட்டுள்ளது. அவ்வளவுதான். ஆனால், இந்த நிபந்தனையை மீறியவர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? யாராவது தண்டிக்கப்பட்டார்களா என்றால், இல்லை.
2014-15ஆம் நிதியாண்டுக்கான அசையாச் சொத்து விவரங்களை ஜூலை 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி மத்திய அரசின் குரூப் ஏ, பி, சி பிரிவு ஊழியர்களுக்கு மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த நடைமுறையும் புதிதல்ல. ஆனாலும், பலரும் இதைத் தாக்கல் செய்வதே இல்லை. இதற்காக எந்த அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை.
1991-ஆம் ஆண்டு முதலாக இதுநாள் வரை 65 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. ஆனால், இவர்களில் ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை. இவர்களில் சிலர் ஓய்வு பெற்று சென்றுவிட்டார்கள். இவர்களில் பலர் மீது வழக்குத் தொடுக்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தும் வழக்குகள் முடிவுறவில்லை.
அரசியல்வாதிகள் ஊழல் செய்தால், அடுத்த தேர்தலில் அவர்களைத் தண்டிக்கும் வாய்ப்பு மக்களாட்சியில் குடிமகனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அரசு அதிகாரியோ, நீதித் துறையில் இருப்பவர்களோ எந்தவிதக் கேள்வி கேட்புக்கும் உள்பட்டவர்களாக இல்லை. அரசு அதிகாரிகள், நீதித்துறையினர் ஆகியோரின் நடவடிக்கையைக் கண்காணிக்க ஏதாவது அமைப்பு இருக்கிறதா என்றால் அதுவும் கிடையாது.
ஆளுநர்களுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி விடலாம். அரசு அதிகாரிகளை இதுபோன்ற உத்தரவுகள் கட்டுப்படுத்துமா, அவர்கள் அதைப் பின்பற்றுவார்களா என்பது சந்தேகம்தான். உத்தரவைக் காட்டி பயமுறுத்தவாவது முற்பட்டிருக்கிறார்களே, அதுவரைக்கும் மகிழ்ச்சி!