By ஆசிரியர்
First Published : 18 September 2015 01:01 AM IST
தலைநகரில் எது நடந்தாலும் அது செய்திதான், தேசியப் பிரச்னைதான். தில்லியில் வெங்காயத்தின் விலை ரூ.100-க்கு அதிகமானால், மத்திய அரசு உடனடியாக வெங்காயத்தை இறக்குமதி செய்கிறது. வெங்காய ஏற்றுமதி விலையை உயர்த்தி நிர்ணயிக்கிறது. தில்லியில் ஒரு பெண் வல்லுறவுக் கொலைக்கு ஆளானால், மத்திய அரசு உடனே சட்டத்தையே திருத்தி எழுதுகிறது. அதேபோலவே, தில்லியில் டெங்கு காய்ச்சல் என்றாலும் மத்திய அரசு பதறுகிறது. களம் இறங்குகிறது.
தில்லியில் கடந்த மூன்று வாரங்களாகவே டெங்கு காய்ச்சல் பரவலாக இருக்கிறது. கடந்த ஒரு வார காலமாக டெங்கு தீவிரம் கொண்டு, மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. ஏழு வயதுச் சிறுவன் அவினாஷ் டெங்கு காய்ச்சலால் இறந்தபோது, அந்தத் துயரத்தைத் தாங்க முடியாத பெற்றோர் தாங்கள் வசித்த 4-ஆவது மாடிக் கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை, தில்லியில் மட்டுமன்றி இந்தியா முழுவதிலும் பேசப்படும் விவகாரமாக மாற்றின ஊடகங்கள்.
இந்தச் சிறுவனின் மரணம், பெற்றோரின் துயரம் ஆகியவற்றோடு நின்றுவிடாமல், குழந்தை அவினாஷ் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டபோது, மூன்று மருத்துவமனைகளால் சேர்த்துக்கொள்ள முடியாது எனத் திருப்பியனுப்பப்பட்ட விவகாரம், தில்லி மருத்துவமனைகளின் மீதான தீவிர எதிர்வினையைக் கிளப்பியது. சிறுவன் அவினாஷ் மட்டுமல்ல, அன்றாடம் பல நூறு பேர் திருப்பி அனுப்பப்படுகிறார்கள் என்கிற உண்மையும் வெளிவந்தது. மக்கள் பெருந்திரள் போராட்டங்கள், அரசியல் கட்சிகளின் களப் போராட்டம், அறிக்கைப் போராட்டம், பேட்டித் தாக்குதல் என பன்முனை எதிர்ப்புகள் தொடங்கின.
இதன்பிறகுதான் மத்திய அரசு தலையிட்டது. தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் டெங்கு காய்ச்சலால் வரும் நோயாளிகளைத் திருப்பி அனுப்பக் கூடாது என்றும், டெங்கு காய்ச்சல் பரிசோதனைக்கு ரூ.600 மட்டுமே கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்றும் திட்டவட்டமாக மத்திய அரசு அறிவித்தது.
இந்தச் சோதனைகள் தில்லி அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படுகின்றன. தில்லியில் அனைத்துப் படுக்கைகளும் டெங்கு காய்ச்சல் நோயாளிகளால் நிரம்பியுள்ளன. கூடுதலாக 1,000 படுக்கைகளை வாங்குவதற்கு முதல்வர் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார். இருந்தாலும்கூட, தனியார் மருத்துவமனைகளை நடுத்தர வருவாய்ப் பிரிவினர் அதிகமாக நாடுகின்றனர்.
தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தால், அத்தகைய மருத்துவமனைகளை நெருக்கடிநிலை நடவடிக்கையாக அரசே தாற்காலிகமாக ஏற்று நடத்தும் என்று கேஜரிவால் கூறியதால், இந்திய மருத்துவர்கள் கழகம் சார்பில் நோயாளிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. "தற்போதைய டெங்கு காய்ச்சல் வைரஸ் 2013-ஆம் ஆண்டு வைரஸ் போல கொல்லும் கிருமி அல்ல. அச்சப்பட வேண்டாம். அதிகமான காய்ச்சல் இருந்தால் மட்டுமே அனுமதிக்கும் அவசியம் நேரும்' என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
நீதிமன்றமும்கூட பொதுநல வழக்கை ஏற்றுக் கொண்டு, டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு மருத்துவம் அளிக்க என்னென்ன செய்திருக்கிறீர்கள் என்று மத்திய அரசுக்கும், தில்லி முதல்வருக்கும் விளக்கம் கோரியுள்ளது.
இவை யாவும் ஒருபுறம் நடந்தபோதிலும், ஓர் உண்மையை மறுப்பதற்கில்லை. டெங்குக் காய்ச்சல் தில்லிக்குப் புதியதல்ல. காமன்வெல்த் விளையாட்டு நடந்த வேளையில், தில்லியில் டெங்கு காய்ச்சலால் எட்டு பேர் இறந்தனர். சுமார் 6,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். ஆண்டுதோறும் 2,000 பேர் தில்லியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவது தொடர்கிறது. குறிப்பாக, அக்டோபர் மாதம் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
நிகழாண்டில் செப்டம்பர் 17-ஆம் தேதி வரை 15 பேர் இறந்துள்ளனர். சுமார் 1,800 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில்தான், மத்திய அரசும், தில்லி அரசும் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளன.
டெங்கு காய்ச்சலைப் பொருத்தவரை, அரசுகளைவிட மக்களே பொறுப்பாளிகள். டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்கள், தூய்மையான நன்னீரில் மட்டுமே வளர்ந்து பல்கிப் பெருகுகின்றன. ஆகவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் வீணாகக் கிடக்கும் சிறு பாத்திரங்கள், கலயங்கள், பயன்படாத டயர்கள், பூந்தொட்டிகள், பாத்திகளில் நன்னீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று தொடர்ந்து பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறார்கள். டெங்கு காய்ச்சல் தொற்றுநோய் அல்ல. ஆகவே, நன்னீர் தேங்குவதைத் தவிர்த்தாலே பாதி பிரச்னையை எளிதில் சமாளிக்கலாம். நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருஞ்செலவு மிச்சமாகும்.
கொசு விரட்டி, கொசுக் கொல்லி ஆகியவற்றைத்தான் இன்று பயன்படுத்தி வருகிறோம். இவற்றைவிட கொசுக்களை மலடாக்கும் மருந்துகள் மிகவும் பயனுள்ளதாகவும், கொசு உற்பத்தியை வேகமாகக் கட்டுப்படுத்தவும் உதவுவதாகச் சொல்கிறார்கள். ஆனால், அத்தகைய கொசு மலடுக்கான மருந்துகள் சந்தைக்கு வரவில்லை. அது ஏன் என்பது புரியவில்லை.
மக்களை நோயிலிருந்து காப்பாற்றுவது எப்படி அரசின் கடமையோ, அதேபோன்று நோய் உண்டாக்கும் கொசுக்களை உற்பத்தியாகாமல் தடுக்க உதவுவதும் மக்களின் கடமைதான் என்பதை நாம் உணர வேண்டும்.