கலைஞர்களின் கலைஞரான இந்த நடிப்புக் கருவூலம் பற்றி எந்த வார்த்தைகளில் எழுதினாலும் சொற்கள் கர்வப்பட்டுக் கொள்ளும். மனோரமா என்று உச்சரிக்கும்போதே ரணப்பட்டுப் போன பாமர மனசு பூரித்து நிற்கும். நோயாளியின் முகமும் பரவசமாகும். மவுனமாக உடலில் புது ரத்தம் ஓடும்.
மனோரமா வெறும் நடிகை மாத்திரம் அல்ல. மன நலம் காக்கும் மருத்துவரும் கூட.
அன்றாடம் பணம் கொட்டும் ஏடிஎம் மெஷினாக எண்ணித் துரத்தும் உறவுகளுக்கு மத்தியில், வாழப் பிடிக்காமல் உயிரை விடத் துடிக்கும் நடிகைகள் வாழும் நாடு இது. மனோரமாவின் மடியில் விழுந்து ஆறுதல் தேடியவர்கள் அதிகம்.
காண்போரையெல்லாம் கவர்ந்த அந்த கலைத்தாய்க்கு ஈடாக(அதிக பட்ச வார்த்தை என்று எண்ணி விடாதீர்! காலம் காட்டும் உண்மை!) வேறு யாரைச் சொல்ல முடியும்!
உழைப்பைத் தவிர வேறு ஒன்றும் அறியாத நடிப்பின் ஜீவநதி மனோரமா! நூற்றுக்கணக்கான கதாநாயகிகளுக்கு மத்தியில் தனித்து நகைச்சுவைக்கென்றே உதித்து நாளடைவில் காவியத்தலைவி ஆனவர்.
மதுரம் தொடங்கி மதுமிதா வரையில் உலகில் தமிழ்நாடு போல் சிரிப்பு காட்டி திரைக்குச் சிறப்பு சேர்த்த பெண்கள் வேறு எங்கும் காணோம். அவர்களில் மனோரமா சிரஞ்சீவி. நிரந்தரமாகப் புகழ் மகுடம் சூட்டிக் கொண்ட ஒரே மகாராணி!
நடிப்பவர்களுக்கான முதல் அருகதை அவர்களது வசீகர வதனமும், கடல் போன்ற கண்களும். இரண்டுமே மனோரமாவுக்கு மைனஸ்.
சராசரிக்கும் குறைவான முகம். சின்னக் கண்கள். அவை மனோரமாவுக்கு உதவியது போல் வேறு யாருக்காவது உபயோகம் ஆகியிருக்குமா என்பது சந்தேகமே.அவருக்கு இறைவன் அளித்த மிகப் பெரிய வரம் குரல்! அந்தக் குரலில் மனோரமா வெளிப்படுத்திய நவரச பாவங்கள், வசன உச்சரிப்பில் ஏற்ற இறக்கங்கள் ஏராளம்... ஏராளம்.
எடுத்துக்காட்டுக்கு ‘கம்னு கட’ ஒன்று போதாதா!
காமெடி நடிகை என்பதால் மனோரமாவுக்கு நடிப்பில் எந்தத் தடைகளும் இல்லை. எப்படி வேண்டுமானால் நடிக்கலாம். எவ்வித இலக்கணங்களும் கிடையாது. சினிமாவில் காபரேவும் ஆடியிருக்கிறார். வில்லியாகவும் வலம் வந்திருக்கிறார்.
நினைத்த மாத்திரத்தில் கூடு விட்டுக் கூடு பாயும் ஆற்றல் முழுமையாக கை வரப் பெற்றவர் மனோரமா.
ஆயிரத்து முன்னூறு படங்களில் எத்தனை எத்தனை வேடங்கள்...! அன்றாட வாழ்க்கையில் தினம்தோறும் நாம் காணும் சக மனுஷிகளை செல்லுலாயிடில் செதுக்கியவர் மனோரமா.
விளைவு, கின்னஸில் இடம் பிடித்த ஒரே தமிழ் நடிகை என்கிற பெருமையைப் பெற்றார். ‘உன்னால் முடியும் தம்பி’படத்துக்குப் பிறகு அடுத்த ஆண்டே அபூர்வ சகோதரர்களும் புதிய பாதையும் சேர்ந்து மனோரமாவை முகம் மலர வைத்தன. தேசிய விருது முதல் முறையாக மனோரமாவைத் தேடி வந்தது.
மனோரமாவுக்கு மிகவும் பிடித்த ஹாலிவுட் ஸ்டார் ஷெர்லிமேக்ளின்.
மனோரமாவின் கால் தடம் பதிந்த முதல் படப்பிடிப்பு நிலையம் எது தெரியுமா?
‘நான் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரம். ஷூட்டிங் பார்க்க ஆசைப்பட்டேன். ஒரு நாள் எங்க குரூப்புடன் நியூடோன் ஸ்டூடியோவில் நுழைந்தேன். அன்று என்.எஸ். கிருஷ்ணனும் டி.ஏ. மதுரமும் நடித்த ராஜா ராணி படப்பிடிப்பு. அதுதான் நான் பார்த்த முதல் சினிமா ஷூட்டிங்.’- மனோரமா.
‘காக்கா’ ராதாகிருஷ்ணனில் ஆரம்பித்து ‘மயில்’ சாமியையும் கடந்து அவருடன் காமெடியில் கலக்கியவர்கள் எல்லோரும் ஜாம்பவான்கள். அநிருத் போன்ற சமீபத்திய பிரபலங்கள் நீங்கலாக எம்.எஸ். விஸ்வநாதன், வி.குமார், குன்னக்குடி வைத்தியநாதன், சங்கர் கணேஷ், இளையராஜா, சந்திரபோஸ், ஏ.ஆர். ரஹ்மான்... என இவர்கள் எல்லோரும் மனோரமாவை சொந்தக்குரலில் பாட வைத்த முன்னணி இசை அமைப்பாளர்கள்.
பொம்மலாட்டம் ‘வா வாத்யாரே ஊட்டான்டே’ மனோரமாவின் சிறப்பைப் பாட்டிலும் எதிரொலித்து இன்றும் பரவசப்படுத்துகிறது.
பேசும் படம் இதழ், ஒவ்வொரு இதழிலும் ‘இம்மாத நட்சத்திரம்’ என்று அம்மாதத்தில் வெளியான படங்களில் சிறப்பாக நடித்த நாயகன்-நாயகிகளைப் பாராட்டி மிக நீண்ட காலமாக எழுதி வந்தது.
கே.பாலசந்தரின் தாமரை நெஞ்சம், பொம்மலாட்டம் இரண்டும் ஒரே நாளில் 1968 மே 31ல் வெளிவந்தன. சரோஜாதேவி, கே. பாலசந்தரின் இயக்கத்தில் நடித்த ஒரே படம் அது. மிக அற்புதமாக கமலா எனும் கேரக்டரில் நடித்திருப்பார்.
சரோஜாதேவியை விட்டு விட்டு, அவ்வரிசையில் பொம்மலாட்டத்தில் சிறப்பாக நடித்ததற்காக மனோரமாவைத் தேர்வு செய்தது பேசும் படம். அனைவருக்கும் ஆச்சர்யம்!
பேசும் படத்துக்கு சோ உடனே ஒரு கடிதம் எழுதினார். ‘மனோரமா இம்மாத நட்சத்திரம் மாத்திரம் அல்ல. அவர் இந்தத் தலைமுறையின் நட்சத்திரம்!’ என்று.
அந்நாளில் சினிமா விமரிசனங்களில் மனோரமா குறித்துப் பெரிதாக எதுவும் எழுத மாட்டார்கள். சோ எழுதிய பதில் மீடியாவைத் திகைப்பில் ஆழ்த்தியது.
மனோரமாவின் திறமையை முழுதாக உணர்ந்தவர் சோ. பார் மகளே பார் படத்தில் சோ அறிமுகமானார். சோவின் முதல் ஜோடியாக மனோரமா நடித்தார்.
சோ இயக்கிய முதல் படம் முகமது பின் துக்ளக். அதில் மனோரமாவுக்கு இந்திரா காந்தி போல் ஒரு வேடத்தைக் கொடுத்து ஒட்டு மொத்த இந்தியாவையும் கலக்கினார். மத்திய மாநில அரசுகளின் கெடுபிடிகளைக் கடந்து துக்ளக் திரைக்கு வந்தது தனி வரலாறு. அடுத்து சோ - மனோரமா பங்கேற்ற அரசியல் நையாண்டி, தங்கப்பதக்கம் படத்தின் வசூலுக்கு உரமாக இருந்தது.
எம்.ஆர். ஆர். வாசு விவித் பாரதி சிறப்புத் தேன்கிண்ணத்தில் மனோரமாவை ‘திரையுலகில் என் ரவுடி தங்கச்சி!’ என்று பாராட்டி ‘வா வாத்யாரே வூட்டாண்டே’ பாடலை ஒலிபரப்பினார். எம்.ஆர்.ஆர். வாசு – மனோரமா கூட்டணியில் வெளிவந்த ‘பாரத விலாஸ்’ சிகரம்.
ரவிச்சந்திரனின் சொந்தத் தயாரிப்பு ‘மஞ்சள் குங்குமம். அதில் தேங்காய் -மனோரமா ஜோடி பாடி நடித்த தெலுங்குப் பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்.
‘ரா ரா பாவா ரா... ராங்கான பாதையில போத்தாவா அக்கட இக்கட சூஸ்தாவா அசடு போல பேஸ்தாவா’ என்று தொடங்கும் அந்தப் பாடலை எழுதியவர் கதாசிரியர் ‘தேவர் பிலிம்ஸ்’ மாரா. மனோரமாவுடன் பாடியவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
பேசிப் பேசி சிரிக்க வைக்கும் மனோரமா ஊமையாக ‘வாழ நினைத்தால் வாழலாம்’ படத்தில் தேங்காய் சீனிவாசனுக்கு கதை சொல்லும் கட்டம் அட்டகாசம்! அதில் மவுன மொழியிலேயே ‘கானாங்குருவிக்கு கல்யாணமாம்’ என்று பாடல் வேறு. ஊமை பாடுவதா? அது மனோரமாவால் மட்டுமே முடியும்.
முதல்முதலாக ‘அபலை அஞ்சுகம்’ படத்தில் மெட்ராஸ் பாஷையில் வெளுத்துக் கட்டத் தொடங்கிய மனோரமா தொடர்ந்து அனாயசமாகப் பேசிய வட்டார மொழிகள் ஆய்வுக்குரிய வரலாறு. சின்னக் கவுண்டரில் எடுப்பான பல் அழகியாக கொங்குத்தமிழில் பேசி நெஞ்சம் கலந்தவர்.
‘சூரிய காந்தி’ யில் ‘தெரியாதா நோக்கு...’ என்று பாடி ஆடும் மடிசார் மாமிக்கும் ‘பரீட்சைக்கு நேரமாச்சு’ ‘நூன் ஷோ’ மாமிக்கும் நடிப்பில் எத்தனை வித்தியாசம்! முக்தா சீனிவாசனின் படங்களில் மனோரமாவின் பங்களிப்பை அத்தனைச் சீக்கிரத்தில் யாரால் மறக்க முடியும். மனோரமா மறைவுக்கு முக்தா சீனிவாசன் கதறி அழுத காட்சி இயல்பான தோழமை உணர்வின் வெளிப்பாடு.
தீபாவை கமல் ஜோடியாகத் தனது ’அந்தரங்கம்’ படத்தில் அறிமுகப்படுத்தியவர் முக்தா. அதில் தேங்காய், சோ, மனோரமா மூவரும் தஞ்சாவூர் பாஷை பெரிதா, கோவை, மதுரை ஸ்லேங் பெரிதா என்று மோதுவார்கள்.
‘பாஷையெல்லாம் மாத்தி மாத்திப் பேசறதுக்கு மனோரமாவை விட்டா வேற யாரு இருக்காங்க இப்ப’ ன்னு சிவாஜி என்னைப் பாராட்டிப் பேசினார். எனக்கு வானத்துல இறக்கை இல்லாமப் பறக்கற மாதிரி இருந்தது. அதுதான் முதலும் கடைசியுமா சிவாஜி என்னை நேருக்கு நேர் பாராட்டின ஒரே சந்தர்ப்பம். அதுக்கப்புறம் ரெண்டு மாசத்துக்கெல்லாம் அவர் இல்ல.’ - மனோரமா.
அதே மனோரமாதான் முகச்சவரம் செய்யும் குமரிமுத்துவின் மனைவியாக கே.பாக்யராஜின் பாமரத் தாயாக ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஜொலி ஜொலித்தது!
மைக்கேல் மதன காமராஜனில் ரூபிணியுடன் சேர்ந்து ‘சிவராத்திரி... தூக்கம் ஏது ஹோ...! என்று இரவில் மெழுகுவர்த்தி ஏற்றி ஆடிப் பாடியபடி வெளிப்படுத்திய சிருங்கார பாவங்கள் மனோரமாவைத் தவிர வேறு யாருக்கு வரும்?
பாரதிராஜா, மணி ரத்னம் என மிகச் சிலரைத் தவிர மனோரமாவுடன் சேர்ந்து பணியாற்றி, ரெடி டேக் ஆக்ஷன் சொல்லாத இயக்குநர்கள் யார்?
அவருடன் பணியாற்றிய இயக்குநர்களின் பட்டியலைப் பார்த்தாலே தமிழ் சினிமாவின் வரலாறும் அதன் அத்தனைப் பரிமாணங்களும் புரியுமே!
இயக்குநர்களில் விசு விசேஷமானவர். ஒரு வாரம் மட்டும் மனோரமாவை நடிக்க வைத்து, முதல்வர் எம்.ஜி.ஆர். தலைமையில் 25 வார விழாவைக் கொண்டாடியவர். முதல்முதலாகத் தமிழ் சினிமாவுக்கு தங்கத்தாமரை என்கிற இமாலயப் பரிசை ‘சம்சாரம் அது மின்சாரம்’ வெள்ளிவிழாப் படம் மூலம் அளித்தவர்.
மனோரமா நடிகர் திலகத்துடன் நடித்து வெளிவந்த முதல் படம் ’வடிவுக்கு வளைகாப்பு’. சிவாஜி பட டைட்டில் கார்டுகளில் மனோரமாவின் பெயர் முப்பது ஆண்டுகளைக் கடந்து கடைசி வரை தொடர்ந்தது. சிவாஜி-மனோரமாவுக்கு இடையேயான பந்தம் மிக அபூர்வமானது.
சிவாஜி ஜோடியாக ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்கிற ஏக்கம் மனோரமாவுக்கு இருந்தது. அதுவும் ஞானப்பறவை படத்தில் தீர்ந்தது. மனோரமாவின் ஆசையை நிறைவேற்றியவர் வியட்நாம் வீடு சுந்தரம்.
1958-ல் கவிஞர் கண்ணதாசனின் மாலையிட்ட மங்கை மூலம் அறிமுகமான மனோரமா அடுத்துப் புகழ் பெற்றது அபலை அஞ்சுகம் படத்தில். 1962-ல் நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் நாகேஷ் கம்பவுண்டராகவும் மனோரமா நோயாளி நவநீதமாகவும் நடித்தார்கள்.
‘நவநீதம்... நவநீதம்...’ என்று காட்சிக்குக் காட்சி வித்தியாசமாக பேசி நாகேஷ் பிரபலமானார். அதற்குப் பிறகு மனோரமாவுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
நாகேஷ் ஹீரோவாக அறிமுகமான சர்வர் சுந்தரம் படத்தில் அவருடன் சினிமா நடிகையாக சில நிமிடங்களுக்கு கவுரவத் தோற்றத்தில் வருவார் மனோரமா. எஸ். வி. ரங்காராவ் இயக்குநர்.அந்தக் காட்சியில் மனோரமா சரோஜாதேவியை ஞாபகப்படுத்துவது மாதிரி கொஞ்சும் தமிழில் பேசி நாகேஷை மிரள வைப்பது அபாரம்.
பொதுவாக எம்.ஜி.ஆரின் சினிமாவில் நாயகன், நாயகியைத் தவிர மற்றவர்கள் யாருக்கும் டூயட் இருக்காது. மனோரமா மட்டும் விதிவிலக்கு!
‘வேட்டைக்காரன்’ படத்தில் முதல்முதலாக நாகேஷ் - மனோரமா இருவரும் ஆடிப்பாடிய ‘சீட்டுக்கட்டு ராஜா’ என்கிற டூயட் அதில் சூப்பர் ஹிட் ஆனது. அதனால் தேவர் பிலிம்ஸ் படங்களில் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதாவுடன் நாகேஷ்-மனோரமா ஜோடியும் சேர்ந்து கொண்டது.
தில்லானா மோகனாம்பாளில் ஜில் ஜில் ரமாமணியாக நடித்ததில் மனோரமா புகழின் உச்சிக்குச் சென்றார். கலைஞர் தலைமையிலான தமிழக அரசு மனோரமாவை சிறந்த துணை நடிகையாக கவுரவித்து விருது வழங்கியது.
மனோரமா ‘ரமாமணியாக’ மாறிய விதம் குறித்து என்னிடம் கூறியவை :
‘பாலையா அண்ணனைப் பார்த்து சிவாஜி சாரே பயப்படுவாங்க. அப்படிப்பட்ட மகா நடிகர் அவர். பாலையா அண்ணன், சிவாஜி, சாரங்கபாணி இவங்க கூடத்தான் எனக்கு முதல் ஷாட்.
‘என்ன சிக்கலாரே சவுக்கியமான்னு...’ விசாரிக்கிற சீன். அப்ப பாலையா அண்ணன் சொல்லுவாங்க. ‘இவங்க ஆட்டத்துல பேர் போனவங்கன்னு…’
அவங்களுக்கு முன்னால எனக்கு நடிக்கவே முடியல. பயமா இருக்கு. அழுகையா வருது. நான் தான் தொடர்ந்து வசனம் பேசணும். சிவாஜிக்கு என்னைக் கவனிக்கிற ஷாட் மட்டுமே. நான் ஏபிஎன். சாரைப் பார்க்கறேன். நடிப்பு வரல. அவர் என்னைக் கூப்பிட்டார்.
‘இந்த சீன்ல நீதான் பெரிய ஆள். அவங்கள மறந்துடுன்னு’ தைரியம் சொன்னாரு. அப்புறம் படபடன்னு பேசி நடிச்சேன்.
இப்பவும் நீங்க படத்தைப் பாத்தீங்கன்னா அந்த சீன்ல சிவாஜி வசனம் எதுவும் இல்லாம, ‘பரவாயில்ல போலிருக்கு. சின்னப் பெண்ணா இருந்தாலும் நல்லா ஆக்ட் பண்றே’னு என் நடிப்பையே ரசிக்கிறது தெரியும்.’ என்றார் மனோரமா.
ஏ.பி. நாகராஜனின் சின்ன பட்ஜெட் படங்களான திருமலை தென் குமரி, கண் காட்சி ஆகிய படங்கள் மனோரமாவுக்கு கை கொடுத்தது. இரண்டிலும் அவருக்கு அமைந்த புதிய ஜோடி சுருளிராஜன். ‘திருமலை தென்குமரி’ நூறு நாள்கள் ஓடியது. ’இந்தப் படம் ஓட வேண்டும் என்று நான் வேண்டாத தெய்வமே இல்லை’ என்று மனோரமா அதன் வெற்றி விழாவில் பேசினார்.
தமிழில் 150 படங்கள் பூர்த்தியான நிலையில் மனோரமாவுக்குத் தெலுங்கில் வாய்ப்புகள் வந்தன. அவர் நடித்த முதல் தெலுங்கு படம் ‘எதிர் நீச்சல்’ ரீமேக்.
1969 முதல் 1971 வரையில் சினிமாவில் மிகப் பெரிய வெற்றிடம். கடுமையாகப் போராடினார் மனோரமா. கோடம்பாக்கம் கை விட்டவுடன் சித்ராலயா கோபுவின் நாடகக் குழுவில் முழு மூச்சாக நடித்தார்.அங்கு உருவான ‘காசேதான் கடவுளடா’ நாடகம் சினிமாவானது. ஏவிஎம் தயாரிப்பில் நூறு நாள்கள் ஓடியது.
ஹீரோ முத்துராமனை விட மனோரமாவுக்கும் தேங்காய் சீனிவாசனுக்கும் மிகப் பெரிய திருப்புமுனை அந்தப் படம். மனோரமா செகண்ட் இன்னிங்ஸ்ஸில் கொடி கட்டிப் பறந்தார்.
ஜெய் சங்கர்-ஜெய்சித்ரா நடித்த ‘உங்கள் விருப்பம்’ படத்தில் தேங்காய் சீனிவாசன் - மனோரமா பாடி நடித்து, பிரபலமான ஒரு டூயட் - ‘மஞ்சள் பூசி மஞ்சம் வந்த ராதா ராதா.’ அன்றைய வானொலி நேயர்களுக்கு மிகவும் பிடித்தமானது. தேங்காய் சீனிவாசனுடன் மனோரமா நூற்று ஐம்பது படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.
மனோரமா சுயம்பு. விழுந்த சுவடே தெரியாமல் விரைவாக விஸ்வரூபம் எடுத்து நின்றவர். எம்.ஜி.ஆர். அரசியலில் முமு மூச்சாக ஈடுபட, மனோரமாவை மேலும் கை தூக்கி விட்டவர் மக்கள் கலைஞர் ஜெய் சங்கர். (‘ராமன் தேடிய சீதை’ எம்.ஜி.ஆருடன் மனோரமா பங்கேற்ற கடைசி படம்.)
தேவர் பிலிம்ஸ், முக்தா பிலிம்ஸ் போன்று கே.பாலாஜியின் தயாரிப்புகளில் மனோரமாவுக்கு நிச்சயம் ஓர் இடம் உண்டு.
நீதி படத்தில் மனோரமாவுக்காகவே டிராக்டர் ஓட்டும் கிராமத்து பொன்னம்மா கேரக்டரை கே.பாலாஜி உருவாக்கினார். சிவாஜியை ஒரு தலையாகக் காதலிக்கும் வேடம். விசிலுக்குக் கேட்க வேண்டுமா..? மீண்டும் வசந்தம்!
1981-ல் பாலாஜியின் படமான ‘சவால்’ மனோரமாவுக்கு பெரிய பிரேக். அதில் கமலுடன் பிக் பாக்கெட் அடிக்கும் ‘பர்மா பாப்பா’ வாக மனோரமா தூள் கலக்கி இருப்பார். ‘பந்தம்’ படத்தில் பேபி ஷாலினியுடன் செவிட்டுப் பெண்ணாக நடித்து குழந்தைகளைச் சிரிக்க வைப்பார்.
சினிமாவில் சிரிக்க சிரிக்கப் பேசி ஹாஸ்யங்கள் புரிந்த மனோரமாவின் சொந்த வாழ்க்கையில் சோகத்தின் சுவடுகளே அதிகம்.
அம்மாவை தெய்வமாக மதித்தவர். தாய் சொல்லைத் தட்டாதவர். சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று சொன்ன கணவரை, அன்னையின் ஆணைக்கேற்ப விட்டுப் பிரிந்தார். அம்மாவின் கனவை நிறைவேற்ற கலையுலகில் மாபெரும் சாதனையாளராக உயர்ந்தவர்.
‘கண் திறந்தது’ படம் மூலம் பிரபலம் ஆன ராமநாதன், மனோரமாவின் கணவர். மனோரமாவுடனான திருமண வாழ்க்கை முறிந்ததும் அவர் மறு விவாகம் செய்து கொண்டார். ஆனால் வாரிசுகள் இல்லை. 1992-ல் அவர் மறைந்தபோது தன் கணவருக்குக்குக் கொள்ளி வைக்க மகன் பூபதியுடன் சென்ற பெருந்தன்மைக்குரியவர் மனோரமா.
வெவ்வேறு திசைகளில் தமிழ் சினிமா பயணித்தாலும் மனோரமா தன் இடத்தை சாமர்த்தியமாகத் தக்க வைத்துக்கொண்டார்.
முப்பது ஆண்டுகளாக நகைச்சுவைக்கு ஒரே சிறந்த நடிகையாக ஆண்டு தோறும் விருதுகளைக் குவித்தவர் மனோரமா. சிவாஜியை மட்டும் அல்ல. எம்.ஜி.ஆருக்கு நிகரான பானுமதியையும் வியக்க வைத்தவர் அவர்.
‘பத்து மாத பந்தம்’ படத்தில் ‘தெய்வமகன்’ சிவாஜியைப் போல் அம்மாவாகவும் இரண்டு மகள்களாகவும் தினுசு தினுசாகப் புதுப்புது வடிவங்களில் மக்களை மகிழச் செய்தார்.
‘மொத்தம் மூன்று மனோரமாக்களைச் சந்திக்கிறோம். ஹைஸ்கூலில் காதலித்துக் கல்லூரியில் கல்யாணம் செய்துகொண்டு வாயும் வயிறுமாக ஹாஸ்யம் படைக்க வருகிறார் முதலில். அவர் தன் வயிற்றை மறந்து உற்சாகமாகக் குதி போடத் தொடங்குவதும் பிறகு ‘ஆ’வென்று வயிற்றைப் பிடித்தவாறு சோர்ந்து போவதும் வேதனையான வேடிக்கை. அவருடைய இரட்டைப் பெண்களாக மழலைக் கொஞ்சல் மனோரமாக்கள் வேறு. அமர்க்களம் போங்கள்!’ என்றது எவரையும் எளிதாகப் பாராட்டி விடாத குமுதம்.
பத்து மாத பந்தம் லேசான படமல்ல. கிருஷ்ணன்- பஞ்சு இயக்கியது. 1974 தைத் திருநாள் வெளியீடு.
பி. பானுமதி, சரோஜாதேவி, எம்.என். ராஜம், வெண்ணிற ஆடை நிர்மலா, ஏவிஎம். ராஜன், முத்துராமன், ரவிச்சந்திரன், அசோகன்... என நட்சத்திரப் பட்டியல் நிறைந்தது. அத்தனை பேருக்கும் நடுவில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்த பானுமதியோடு ஒரு வண்ணப் படத்தில் அவரையும் மீறி ஒருவர் பெயர் பெறுவது சாத்தியமே அல்ல.
சகலகலாவல்லியான பானுமதியுடன் சேர்ந்து அவரது இயக்கத்தில் ‘இப்படியும் ஒரு பெண்’ (1975 மே 1 ரிலீஸ்) படத்தில் ஜெயில் காட்சியில் பாடி நடித்திருக்கிறார் மனோரமா. ‘அகப்பட்ட வரையில் சுருட்டிட்ட யாரும் சுகப்பட்டதில்ல’ என்று அதன் பல்லவி ஆரம்பமாகும்.
1989-ல் ஏவிஎம்.மின் ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ அவரது ஹாஸ்ய நடிப்பின் நிறைவான கட்டமாக இருந்தது. அதில் கம்புச் சண்டையும் போட்டு சிறுவர் சிறுமியரைத் தன் வசப்படுத்தினார். சந்திரபோஸ் இசையில் அவர் பாடிய டைட்டில் சாங் ஒலிக்காத ஊரே இல்லை. அன்றைய முதல்வர் கலைஞர் தலைமையில் வெள்ளி விழா நடந்தது. பாட்டி சொல்லைத் தட்டாதே படத்தைத் தெலுங்கிலும் ஏவிஎம் தயாரித்தது. அதில் மனோரமாவின் வேடம் பானுமதிக்கு.
‘மனோரமா இந்த ரோலை கிரியேட் பண்ணிட்டாங்க. நான் அந்த ரோலில் ஆக்ட் பண்றேன். அவ்வளவுதான். ஐ டு நாட் நோ ஹவ் ஃபார் ஐ வில் ரீச் மனோரமா’ என்றார் பானுமதி.வசிஷ்டை வாயால் பிரம்ம ரிஷி பட்டம் யாருக்குக் கிடைக்கும்? ஆந்திரத்து ஆஸ்கார் அல்லவா அது!
மூப்பு வந்ததும் வயதுக்கேற்ப மெல்ல குணச்சித்திர நடிப்பில் ஆர்வம் காட்டினார். கமல்- ஷங்கர் இணைந்த ஒரே படமான ‘இந்தியனில்’ மனோரமா ஏழைக் கிழவியாக உருக வைத்ததை யாரால் மறக்க முடியும்! அதற்குக் கிடைத்த பலன் - 1996ன் சிறந்த குணச்சித்திர நடிகையாக மனோரமாவை கவுரவித்தது பேசும் படம் இதழ்.
அவர் வயதான தாயாராக நடித்த சின்ன கவுண்டர், சின்ன தம்பி, நாட்டாமை போன்ற படங்கள் தாறுமாறாக ஓடி வெள்ளிவிழா கொண்டாடின. ஏராளமான வசூலைக் குவித்தன. தெலுங்கிலும் ஏராளமான கேரக்டர் ரோல்கள் மனோரமாவைத் தேடி வந்தன. தமிழைப் போலவே அற்புதமாக சுந்தரத் தெலுங்கிலும் மாட்லாடுவார் மனோரமா.
சுஜாதாவின் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ சினிமாவாக வந்தது. நாட்டுப்புறப்பாடல் பாடும் கிழவியாக மனோரமா அநாயாசமாக நடித்திருப்பார். படம் ஓடவில்லை. அவ்வாறு மனோரமாவின் உழைப்பு தெரியாமல் போன படங்கள் எக்கச்சக்கம்.
ஐம்பது ஆண்டுகளைக் கடந்தாலும் ஜனங்களுக்கு மிகவும் பிடித்த ஜதை நாகேஷ் - மனோரமா. ஆறு ஆண்டுகளில் அலுப்பு சலிப்பில்லாமல் நூறு சினிமாக்களுக்கு மேல் நடித்த ஒரே காமெடி ஜோடி. அவை அத்தனையும் சிரஞ்சீவியான காட்சிப் பெட்டகம்!
கே.பாலசந்தரின் அனுபவி ராஜா அனுபவி படத்தில் வரும் ‘முத்துக் குளிக்க வாரீயளா...!’ பாடல் மனோரமாவின் இறுதி ஊர்வலத்திலும் இடம் பிடித்தது.
நவராத்திரி நேரத்தில் முப்பெரும் தேவியரோடு சேர்ந்து மனோரமாவும் சாமியாகி விட்டார்! என்றும் வாழும் அவர் புகழுக்கு அஞ்சலி எழுத வேண்டாம் என்று இருந்தேன். மனோரமாவை சிரிப்பு தேவதையாகப் பார்த்து பார்த்து ரசித்த பாழும் மனசு கேட்கவில்லை.
சிவாஜி, ஜெமினிக்கு செய்தது போல ஆச்சியின் தகனத்தையும் அரசு மரியாதைகளுடன் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க நடத்தியிருக்கலாம்.