By ஆசிரியர்
First Published : 02 January 2016 12:58 AM IST
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாளிலிருந்து தமிழ்நாட்டில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் ஆடைக் கட்டுப்பாடு அமலுக்கு வந்திருக்கிறது. இந்த நடைமுறை ஏற்கெனவே நமது அண்டை மாநிலங்கள் மூன்றிலுமே நடைமுறையில் இருப்பவைதான். தமிழகத்திலும் இருந்துவந்த நடைமுறைதான் இவை.
கேரள மாநிலத்திலுள்ள ஆலயங்களில் ஆண்களாக இருந்தால் வேட்டி அணிந்து சென்றால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். முழுக்கால் சட்டை, பைஜாமா உள்ளிட்ட தைக்கப்பட்ட ஆடை எதையும் அனுமதிப்பதில்லை. அதுமட்டுமல்ல, மேல் சட்டை அணிவதும் அனுமதிக்கப்படுவதில்லை. பெண்களும்கூட தென்னிந்தியப் பாரம்பரிய உடைகளை அணிந்துச் சென்றால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அதேபோல, திருப்பதி - திருமலை தேவஸ்தானத்திலும் கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற நடைமுறைகள் சிறப்பு தரிசனங்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
இறைவழிபாட்டிற்கும் தெய்வத்தின் தரிசனத்துக்கும் கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் இந்து மதத்துக்கு மட்டுமே இருப்பவை அல்ல. இஸ்லாமியர்களின் தொழுகைக்கு மிக அதிகமான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அதேபோல, கிறிஸ்தவர்களுக்கும்கூட பெண்கள் தலையைத் துணியால் போர்த்திக்கொள்வது உள்ளிட்ட சில மாதா கோயில் வழிபாட்டு முறைகள் உள்ளன. சீக்கியர்களுக்கும், பெளத்த மதத்தினருக்கும்கூட இதுபோன்ற சம்பிரதாயங்கள் உண்டு.
இந்து கோயில்களில் ஆண்கள் வேட்டி கட்டுவது, அங்கவஸ்திரம் மட்டுமே போர்த்திக்கொண்டு ஆலயத்திற்குள் செல்வது உள்ளிட்ட நடைமுறைகளுக்குப் பின்னால் சில காரணங்கள் உண்டு. ஏனைய மத வழிபாட்டுத் தலங்களை அமைக்க ஆகம விதிமுறைகளோ, இன்ன இடத்தில் இன்ன பிராகாரங்கள் அமைய வேண்டும் என்றோ விதிமுறைகள் கிடையாது. ஏனைய மதங்களைச் சார்ந்தவர்கள் ஒன்றுகூடி பிரார்த்திக்கும் இடமாக மட்டுமே வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. ஆனால், இந்து மதத்தில் அப்படி அல்ல.
இங்கே வழிபாட்டுத் தலங்கள் எனப்படுபவை கூட்டுப் பிரார்த்தனைத் தலங்களாக இல்லாமல், பரிகாரத் தலங்களாகவும் இருக்கின்றன. அவை ஒவ்வொரு கிரகங்களின் ஆதிக்கத்தில் உள்ள ஈர்ப்பு சக்தியை மையப்படுத்தி ஆகம விதிகளின்படி அமைக்கப்பட்டவை. அதனால்தான், இன்னென்ன பிரச்னைகளுக்கு இன்னென்ன குறிப்பிட்ட ஆலயங்களைத் தரிசிப்பது, அங்கே பரிகாரங்களைச் செய்வது போன்றவை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
மேலாடை அணியாமல் செல்லும்போது அந்த ஆலயத்தின் அடிப்படையாகக் கருதப்படும் கிரகத்தின் காந்த சக்தியை முழுமையாக உடலில் வாங்கிக் கொள்ள முடியும் என்பதுதான் இதுபோன்ற விதிமுறைகளுக்குக் காரணம். கோயில்களில் வலம்வருவது, கொடி மரத்துக்கு முன்னால் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து நமஸ்கரிப்பது போன்றவையும் இதனால்தான்.
இறை நம்பிக்கை இல்லாத, அன்னிய மோகத்தின் பாற்பட்ட திராவிட அரசியலின் காரணமாக இந்து ஆலயங்களின் வழிபாட்டு முறைகளும், சம்பிரதாயங்களும் கேலிக்கும், பழிப்புக்கும் உள்ளாயின. மேல் சட்டை அணியாமல் ஆலய வழிபாடு என்கிற சம்பிரதாயம் பூணூல் அணிந்த பிராமணர்களையும், அணியாத பிராமணர் அல்லாதவர்களையும் பிரித்தறிந்து பார்ப்பதற்காகத்தான் என்கிற குதர்க்கமான பொய்ப் பிரசாரத்தை புத்திசாலித்தனமாக முன்னெடுத்துச் சென்று அனைவரையும் நம்ப வைத்தனர் அந்த இறை மறுப்பாளர்கள். ஆலயங்களில் மட்டுமல்லாமல் மகான்களையும், துறவிகளையும், வயதில் மூத்தவர்களையும் தரிசிக்கும்போதுகூட மேலாடை அணியாமல் செல்வதன் மூலம் அவர்களிடம் இருக்கும் ஆத்ம சக்தியையும் அருளையும் முழுமையாகப் பெற முடியும் என்கிற பாரம்பரிய நம்பிக்கைக்கும்கூட இதேபோன்ற காரணத்தைக் கூறி பழிக்க முற்பட்டனர்.
கடந்த 70 ஆண்டு கால இந்து மத எதிர்ப்பை (வெறுப்பை) முன்னிலைப்படுத்தும் சக்திகளின் பிரசாரத்தால், இடையில் சிறிது காலம் துவண்டுபோன இறை நம்பிக்கை உணர்வு, இப்போது மிகப்பெரிய அளவில் உருவெடுத்திருக்கிறது. ஆலயங்களில் முக்கியமான தினங்களில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் அதற்கு கட்டியம் கூறுகிறது. அதேநேரத்தில், ஆலயம் தொழுவது ஏனைய மதத்தினரிடம் காணப்படும் ஈடுபாட்டைபோல இல்லாமல் இருப்பது வேதனைக்குரியது.
அண்மைக்காலமாக இளைஞர்களிடம் புதிய போக்குகள் தோன்றி டி-சர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ் உள்ளிட்ட நாகரிக ஆடைகளும், பெண்கள் லெக்கின்ஸ், ஸ்கின் டைட் ஜீன்ஸ், டாப்ஸ் உள்ளிட்ட ஆடைகளும் அணிந்து கோயிலுக்கு வரத்தொடங்கியதால், தமிழக ஆலயங்களில் ஆடைக் கட்டுப்பாடு குலைந்தது. நமது பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலை, பாவாடை - தாவணி போன்றவை காணாமல் போகும் சூழல் ஏற்பட்டுவிட்டிருக்கிறது. நமது பாரம்பரியச் சின்னங்களைக் குறைந்தபட்சம், ஆலய வழிபாட்டிலாவது கடைப்பிடிக்க இந்த உடைக்கட்டுப்பாடு நிச்சயமாக உதவும். இறை வழிபாட்டைப் பொருத்தவரை நாம் இஸ்லாமிய சகோதரர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை நிறையவே இருக்கின்றன.
ஆலயங்களில் உடைக் கட்டுப்பாடு என்கிற நல்லதொரு முடிவை நடைமுறைப்படுத்தி இருக்கும் இந்து அறநிலையத் துறையையும், அரசையும் பாராட்டும் அதேநேரத்தில் இன்னும் ஒரு வேண்டுகோள். இதேபோல, கோயிலுக்குள் செல்லிடப்பேசியை அனுமதிப்பதற்கும் தடை பிறப்பிக்க வேண்டும். கோயிலுக்குள் செல்லிடப்பேசி ஒலித்தால் அபராதம் விதிப்பது, செல்லிடப்பேசியில் படம் பிடித்தால் பறிமுதல் செய்வது போன்ற கடுமையான நடவடிக்கைகளை ஆடைக் கட்டுப்பாட்டுடன் சேர்த்து அமல்படுத்த வேண்டும்!