எம்ஜிஆர் 100 | 66: கேட்காதவர்களுக்கும் உதவியவர்!
தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் அவ்வளவாக அரங்குகள் கிடையாது. மயிலாப்பூரில் ரசிக ரஞ்சனி சபாவுக்கு சொந்தமான சுந்தரேஸ்வரர் அரங்கு, எழும்பூரில் அரசுக்கு சொந்த மான மியூஸியம் தியேட்டர், வால்டாக்ஸ் சாலையில் அமைந்திருந்த ஒற்றை வாடை தியேட்டர், மாநகராட்சி அலுவல கத்தை ஒட்டிய வி.பி.ஹால், அண்ணா மலை மன்றம் போன்ற ஒருசில அரங்குகள்தான் இருந்தன.
இந்த அரங்குகளில் நடந்த பல கலை நிகழ்ச்சிகளுக்கு எம்.ஜி.ஆர். வருகை தந்து தலைமை தாங்கியிருக்கிறார். மாநகராட்சி அலுவலகம் அருகே இருந்த வி.பி.ஹாலில் ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எம்.ஜி.ஆர். சென்றார். நிகழ்ச்சி முடிந்து கலைஞர்களை பாராட்டிவிட்டு காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அந்தக் கால கட்டத்தில் அவர் ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் வசித்து வந்தார். சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்துக்கு எதிரே ஒரு ரயில்வே கேட் உண்டு. இப்போது அந்த பகுதியில் மேம்பாலம் உள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து ரயில்வே கேட்டைக் கடந்து சிந்தாதிரிப்பேட்டை வழியாக ராயப்பேட் டைக்கு எம்.ஜி.ஆர். செல்ல வேண்டும்.
எம்.ஜி.ஆரின் கார் வந்து கொண் டிருந்தபோது ரயில்வே கேட் மூடப் பட்டிருந்தது. அது திறப்பதற்காக கார் காத்திருந்தது. ரயில்வே கேட் அருகே ஒரு குதிரை லாயம். காரில் எம்.ஜி.ஆர். செல்லும்போது, சுற்றும்முற்றும் கூர்ந்து கவனித்தபடி இருப்பார். அவர் பார்த்த போது குதிரை லாயம் அருகே சிறு கூட்டம். கூடவே அழுகை சத்தமும் கேட்டது. என்ன வென்று விசாரித்து வருமாறு காரில் இருந்த தனது மேனேஜர் சாமியிடம் எம்.ஜி.ஆர். சொல்ல, அவரும் விசாரித்து வந்தார்.
அங்கிருந்த ஒரு குதிரை வண்டிக்கார ருக்கு சொந்தமான குதிரை திடீரென இறந்துவிட்டது. வண்டிக்காரரின் குடும் பமே குதிரை சவாரியை நம்பித்தான் இருந்தது. திடீரென குதிரை இறந்த அதிர்ச்சி, துக்கம், இனி பிழைப்புக்கு என்ன செய்வது என்ற கவலை எல்லாம் சேர, அவரது குடும்பமே இறந்த குதிரையின் அருகில் அமர்ந்து கதறியது. அதைவிடக் கொடுமை, அந்தக் குதிரையை அடக்கம் செய்யக்கூட அவர்களிடம் பணம் இல்லை.
இந்த விவரங்களை எம்.ஜி.ஆரிடம் மேனேஜர் சாமி தெரிவித்தார். பொறுமையாகக் கேட்ட எம்.ஜி.ஆர்., ‘‘புதுக் குதிரை வாங்க எவ்வளவு பணம் தேவைப்படும்?’’ என்றார். ‘‘600 ரூபாய் தேவைப்படலாம்’’ என்றார் சாமி. ஒரு பொருளின் விலையை கடைக்காரர் அதிகமாக சொன்னால், ‘‘என்னய்யா... யானை விலை, குதிரை விலை சொல்ற?’’ என்ற வசனத்தை முன்பெல்லாம் கேட்டிருப்போம். 50 ஆண்டுகளுக்கு முன் குதிரை விலை 600 ரூபாய் என்பது அதிகம்.
சாமி சொன்னதைக் கேட்ட எம்.ஜி.ஆர்., ‘‘புதுக்குதிரை வாங்கி வந்து வண்டியில் பூட்டி ஓட்ட வேண்டும். இதற்கு சில நாட் கள் ஆகலாம். அதுவரை அந்த வண்டிக் காரரின் குடும்பம் கஷ்டப்படக் கூடாது. இறந்த குதிரையையும் அடக்கம் செய்ய வேண்டும். எனவே, குதிரை விலையோடு சேர்த்து தேவை யான பணத்தை வண்டிக்கார ரிடம் கொடுத்துவிடுங்கள்’’ என் றார். பணத்தோடு சென்ற சாமி, வண்டிக்காரரிடம் விவரங்களைச் சொல்லி பணத்தைக் கொடுத்தார்.
வண்டிக்காரருக்கு இன்ப அதிர்ச்சி. நம்ப முடியாமல் கூட்டத்தை விலக்கி எம்.ஜி.ஆர். வந்த காரைப் பார்த்தார். காரில் எம்.ஜி.ஆர். இருப்பதை கவனித்துவிட்டு இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிட்டபடி, கண் ணீருடன் காரை நோக்கி ஓடிவந்து அப்படியே தரையில் விழுந்து வணங்கி னார். காரில் இருந்து இறங்கிய எம்.ஜி.ஆர்., அவரை தூக்கி ஆறுதல் சொன்னார். ‘‘இறந்த குதிரையை அடக் கம் செய்துவிட்டு, புதுக் குதிரை வாங்கி தொழிலை கவனியுங்கள்’’ என்றார். அதற் குள், விஷயம் பரவி அங்கு பெரும் கூட்டம் சேர்த்துவிட்டது. அந்த நேரத்தில், ரயில்வே கேட் திறக்கப்பட, மக்களைப் பார்த்து கையசைத்து விடைபெற்றபடி எம்.ஜி.ஆர். புறப்பட்டார்.
அந்தக் குதிரை வண்டிக்காரர் நன்றி மறக்காதவர். அடுத்த சில நாட்களில் ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்டுக்கு புதிய குதிரை பூட்டிய வண்டியை ஓட்டிக் கொண்டு வந்துவிட்டார். எம்.ஜி.ஆரை சந்தித்து அவரது காலில் விழுந்து நன்றி சொன்னார். அவரை வாழ்த்தி குதிரையையும் பார்த்து மகிழ்ச்சியுடன் அதைத் தட்டிக் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.!
‘பல்லாண்டு வாழ்க’ படத்தில் ஜெயிலர் ராஜன் என்ற பாத்திரத்தில் எம்.ஜி.ஆர். நடித்திருப்பார். கொடிய குற்றங்கள் செய்த சிறைக் கைதிகள் 6 பேரை தனது பொறுப்பில் அழைத்துவந்து, அவர்களோடு தானும் வாழ்ந்து கைதிகளை திருத்தும் முயற்சியில் ஈடுபடுவார். குற்றவாளி களில் ஒருவராக நடிக்கும் ஆர்.எஸ். மனோகர், கதைப்படி தனது மனைவியை கொன்றுவிட்டதால் சிறை தண்டனை அடைந்திருப்பார். அவரைப் பார்க்க மனோகரின் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவரது தாயார் வருவார்.
தனது தள்ளாத வயதில், வீடுகளில் வேலைசெய்து குழந்தைகளைக் காப்பாற்றி வருவதாகவும் தானும் இறந்துவிட்டால் இந்தக் குழந்தைகளின் கதி என்ன என்று மனோகரிடம் கூறி அவரது தாயார் கலங்குவார். என்ன செய்வதென்று புரியாமல் மனோகரும் கண் கலங்கும் கட்டம் பார்ப்பவர் மனதை உருக்கும்.
இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் எம்.ஜி.ஆர்., இரு குழந்தைகளையும் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறுவார். அந்தத் தாய், நன்றியும் மகிழ்ச்சியும் போட்டிபோட, உணர்ச்சிப் பெருக்கோடு எம்.ஜி.ஆரைப் பார்த்துச் சொல்வார்…
‘‘இந்த உலகத்துலே ஏழைங்களோட கஷ்டத்தைப் புரிஞ்சவங்க உன்னை மாதிரி வேற யாரும் இல்லப்பா!’’
- தொடரும்...
படங்கள் உதவி : ஞானம், செல்வகுமார்
எம்.ஜி.ஆர். குதிரையேற்றம் அறிந்தவர். மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரமும் குதிரை சவாரியில் விருப்பம் உள்ளவர். பல குதிரைகளை வளர்த்து வந்தார். மாடர்ன் தியேட்டர்ஸின் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தில் குதிரை சவாரி காட்சியில் எம்.ஜி.ஆர். ஓட்டியது, டி.ஆர். சுந்தரத்துக்கு சொந்தமான குதிரை.