புதுச்சேரியில் 96 கோடீஸ்வர வேட்பாளர்கள்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 553 கோடீஸ்வரர்கள் போட்டியிடுகின்றனர். 283 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு உள்ளது என்று தனியார் தொண்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘அசோசியேஷன் ஆப் டெமாக்ரடிக் ரீஃபார்ம்ஸ்’ (ஏடிஆர்) என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட் பாளர்களின் பின்னணியை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.
அந்த வரிசையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி யிடும் வேட்பாளர்கள் குறித்து ஏடிஆர் அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 16-ம் தேதி நடைபெறுகிறது. இதில் 3,776 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் பெரிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் 1,107 பேர். இதில் 997 வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்துள்ளோம். 110 பேரின் பிரமாணப் பத்திரங்கள் தெளிவாக இல்லை.
வசந்தகுமார் முதலிடம்
தமிழக தேர்தலில் மொத்தம் 553 கோடீஸ்வரர்கள் போட்டியிடு கின்றனர். இதில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு ரூ.337 கோடிக்கு சொத்துகள் உள்ளன. அவருக்கு அடுத்து சென்னை அண்ணாநகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எம்.கே.மோகனுக்கு ரூ.170 கோடிக்கு சொத்துகள் உள்ளன.
தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா 3-வது இடத்தில் உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு ரூ.113 கோடி.
கட்சிவாரியாக அதிமுக 156, திமுக 133, பாமக 72, பாஜக 64, தேமுதிக 57, காங்கிரஸ் 32, வேட்பாளர்கள் ரூ.1 கோடிக்கும் அதிகமாக சொத்துகளை வைத் துள்ள கோடீஸ்வரர்கள் ஆவர். ஒட்டுமொத்தமாக மதிப்பிடும் போது பெரிய கட்சிகளின் வேட்பாளர் களது சராசரி சொத்து மதிப்பு ரூ.4.35 கோடியாக உள்ளது.
திருவண்ணாமலை பாஜக வேட்பாளர் கருப்பன், திருக்கோவி லூர் பாஜக வேட்பாளர் தண்டபாணி ஆகியோர் தங்களுக்கு எவ்வித சொத்தும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
மொத்த வேட்பாளர்களில் 114 வேட்பாளர்கள் பான் எண் விவரங்களை தெரிவிக்கவில்லை. 284 பேர் வருமான வரி கணக்கு விவரங்களை தாக்கல் செய்யவில்லை.
283 பேர் மீது கிரிமினல் வழக்கு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 283 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில் 157 பேர் மீது கொலை, கொலை முயற்சி, திருட்டு, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன. இதில் 5 பேர் மீது கொலை வழக்கும் 30 பேர் மீது கொலை முயற்சி வழக்கும் நிலுவையில் உள்ளது.
கட்சிவாரியாக திமுக 68, பாமக 66, அதிமுக 47, தேமுதிக 41, காங்கிரஸ் 10, பாஜக 26, மார்க்சிஸ்ட் 8 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
சுமார் 28 தொகுதிகளில் மூன் றுக்கும் மேற்பட்ட குற்றப்பின்னணி உடைய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
கல்வித் தகுதி
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 454 பேர் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்ப தாகவும் 488 பேர் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருப்ப தாகவும் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளனர்.
6 வேட்பாளர்கள் தாங்கள் படிக்கத் தெரிந்தவர்கள் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளனர். 6 பேர் படிப்பறிவு இல்லாதவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
வயது விவரம்
வேட்பாளர்களில் 537 பேர் 25 வயது முதல் 50 வயதுக்கு உட் பட்டவர்கள். 458 பேர் 51 வயது முதல் 80 வயதுக்கு உட்பட்டவர் கள். 2 பேர் 80 வயதுக்கு மேற் பட்டவர்கள்.
ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்ட 997 வேட்பாளர்களில் பெண் வேட்பாளர்கள் 96 பேர் மட்டுமே உள்ளனர்.
புதுச்சேரி நிலவரம்
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர் தலில் மொத்தம் 344 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 343 வேட்பாளர்களின் பின்னணியை ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 343 வேட்பாளர்களில் 96 பேர் கோடீஸ்வரர்கள். கட்சி வாரியாக என்ஆர் காங்கிரஸ் 21, காங்கிரஸ் 18, பாஜக 8, அதிமுக 18, பாமக 5 மற்றும் 16 சுயேச்சை கோடீஸ்வர வேட் பாளர்கள் களத்தில் உள்ளனர். வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.2.49 கோடி.
94 வேட்பாளர்கள் பான் எண் விவரங்களை தெரிவிக்கவில்லை. 204 பேர் வருமான வரி கணக்கு விவரங்களை அளிக்கவில்லை.
ஒட்டுமொத்தமாக 68 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு உள்ளது. கட்சி வாரியாக பாஜக 8, என்ஆர் காங்கிரஸ் 8, காங்கிரஸ் 6, அதிமுக 6, பாமக 6, நாம் தமிழர் கட்சி 3 மற்றும் 11 சுயேச்சை வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
189 வேட்பாளர்கள் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்திருப்பதாக தெரிவித்துள்ளனர். 111 பேர் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருப்பதாக கூறியுள்ளனர்.
8 பேர் படிக்கத் தெரிந்தவர்கள் என்றும் 8 பேர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
25 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட 221 வேட்பாளர்களும் 51 வயது முதல் 80 வயதுக்கு உட்பட்ட 122 வேட்பாளர்களும் தேர்தல் களத்தில் உள்ளனர். ஒட்டுமொத்த வேட்பாளர்களில் 22 பேர் பெண்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.