வேண்டாம் தற்கொலை
By எஸ். பாலசுந்தரராஜ் | Last Updated on : 10th September 2016 01:16 AM | அ+அ அ- |
தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் வழக்குரைஞர் ஒருவர் அண்மையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பெங்களூரில் இவர் சட்டமேற்படிப்பை படித்தபோது, ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு வயதில் பெண் குழந்தை உள்ளது. கருத்துவேறுபாட்டால் கணவன் - மனைவி பிரிந்து வாழ்கிறார்கள். இந்நிலையில் அந்த பெண் வழக்குரைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
படித்த பெண் தனது இல்லறவாழ்க்கையை தொடங்கி ஆறு ஆண்டில் இந்த முடிவை எடுத்துள்ளார்.
தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 5,000 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் எனவும், இதில், பெண்கள் 60 சதவீதம் பேர் என்பது அதிர்ச்சி தகவல். 15 முதல் 25 வயது உள்ள பெண்கள் 20 சதவீதமும், 25 முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் 30சதவீதமும் என காவல் துறை புள்ளிவிவரம் கூறுகிறது.
தேர்வில் மதிப்பெண்கள் பெறாவிட்டாலும், காதலில் தோல்வி ஏற்பட்டாலும், கணவன் மனைவிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டாலும் மேலும் பல காரணங்களுக்காகவும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
மண்ணெண்ணையை உடல்மீது ஊற்றி தீவைத்து, விஷம் அருந்தி, கிணற்றில் குதித்து, மாடியிலிருந்து குதித்து, தூக்கிட்டு என பல வழிகளில் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் 33,000 பேர் என ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.
வாழ்கையை வெறுத்து தற்கொலை செய்து கொள்கிறார்கள் என தற்கொலைக்கு காரணம் கூறுகிறார்கள். வாழ்க்கை என்பது மனிதனுக்கு கடவுள் கொடுத்த மிகப்பெரிய வரம்.
உலகத்தில் 84 லட்சம் ஜீவராசிகள் உள்ளன. எந்த ஜீவராசியாவது தற்கொலை செய்துகொண்டது என கேள்விப்பட்டதுண்டா? ஆறு அறிவுள்ள மனிதர்கள் ஏன் தற்கொலை எண்ணத்தை மனதில் நுழைய விடவேண்டும்.
நம்மிடம் அற்புதமான, ஜீவனுள்ள, துடிப்புள்ள, வலிமைமிக்க மனம் உள்ளது என்பதை பலர் மறந்து விடுகிறார்கள். மனதில் உற்சாகத்தையும், தைரியத்தையும், மகிழ்ச்சியையும் பாய்ச்ச வேண்டும்.
பழைய இரும்பு வியாபாரம் செய்யும் ஒருவர், தனது சைக்கிளில் செயின் இல்லாததால் அந்த சைக்கிளை நடந்தே தள்ளிக்கொண்டு வியாபாரம் செய்கிறார்.
அவர் தன்னாலும் வாழமுடியும் என உலகிற்கு எடுத்துக்காட்டுகிறார் எனக்கூறலாம். அவர் சவால்களை சந்திக்க தயாராக உள்ளார். பிரச்னைகளை கண்டு முடங்கிவிடவில்லை. என்னால் முடியாது என சும்மா இருந்துவிடவில்லை.
இதுபோன்ற எண்ணற்றவர்கள் நாட்டில் உள்ளார்கள். அவர்களை முன்மாதிரியாக கொண்டு வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் தற்கொலை எண்ணம் நம் மனதில் நுழையாது.
தற்கொலை செய்வதுகொள்பவர்களை வாழ்கையில் பிரச்னைகளை எதிர்கொள்ள இயலாதாவர்கள் எனக்கூறலாம். தோல்விகளையும், சங்கடங்களையும் மனதில் நுழையவிடக்கூடாது.
ஒரு பிரச்னை ஏற்படுகிறது என்றால் அந்த பிரச்னையை தீர்க்க நான்கு அல்லது ஐந்து தீர்வுகளை மனதில் எண்ணிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தீர்வாக செயல்படுத்திபார்க்க வேண்டும். நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
கடவுள் ஒரு ஜன்னலை மூடினால் மற்றொரு ஜன்னலைத் திறப்பார் என முழுமையாக நம்ப வேண்டும். எனது பிரச்னைகளுக்கு தீர்வு கிடையாது. தற்கொலை செய்து கொள்வதுதான் தீர்வாகும் என நினைப்பது என்பது தைரியமில்லாதர்கள் கூறும் காரணம்.
நாம் நம்மைப்பற்றி கொண்டிருக்கும் அபிப்பிராயங்களை ஆராய வேண்டும். அவற்றை ஒரு தாளில் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். எவ்வளவு முட்டாள்தனமாக நம்மை நாமே சிறுமைப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்ற தெளிவு வரும்.
இந்த தெளிவு தற்கொலை எண்ணத்தை மாற்றிவிடும் என்பது உறுதி.
நம்பிக்கையையும், நல்ல எதிர்காலம் பற்றிய கற்பனையையும் நம் மனதில் நுழையவிட்டால், அது நம் ஆழ்மனதில் பதிந்து தற்கொலை எண்ணத்தை தகர்த்தெறிந்துவிடும். பின்னர் சூழ்நிலை மாறுவதை நாம் உணரலாம்.
பலர் பழைய தோல்விகளை விரிவாக, கதை கூறுவதுபோல கூறுவார்கள். அனுபவித்த கஷ்டங்களை, சங்கடங்களை பெரிதுபடுத்தி கூறுவார்கள். கஷ்டங்களை பெரிதுபடுத்தினால் கஷ்டம்தான் வரும்.
உங்கள் வாழ்வில் நடந்த மகிழ்ச்சியான சம்பவங்களை மனதில் அசைபோட்டுப் பாருங்கள். தற்கொலை எண்ணம் தடுக்கப்படும். அவன் விதி, தற்கொலை செய்து கொண்டான் எனக் கூறுவதுண்டு.
நல்ல விஷயங்களை எண்ணாமல், வாழ்கையின் எதிர்கால மகிழ்ச்சியை எண்ணாமல், உலகில் உள்ள அற்புதமானவற்றை ரசிக்காமல் தற்கொலை என தவறான முடிவை எடுப்பவர்களை அவர்களின் விதி எனக்கூறுவது தவறு.
ஒவ்வொரு மனிதனுக்கும் எதாவது பிரச்னை இருந்து கொண்டே இருக்கும். பிரச்னைகள் இருந்து கொண்டிருந்தால்தான், புலனும், புத்தியம் சுறு சுறுப்பாக இருக்கும்.
எந்த பிரச்னைக்கும் தீர்வு உண்டு. வாழ்க்கை என்னும் விருந்தில் தனது பங்கிற்கான உணவினை உண்ணாமல், தற்கொலை என்ற பெயரில் உயிரை மாய்த்துக் கொள்வதை மனிதகுலம் நிறுத்த வேண்டும்.