மௌனராகம் 30: நினைவில் நகரும் கம்பளிப்பூச்சி!
ந. வினோத் குமார்
கடந்த சில நாட்களாகவே ‘மெளன ராகம்’ திரைப்படத்தின் பின்னணி இசையைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். என்ன காரணமெனத் தெரியவில்லை. பிறகு ஒரு நண்பர் சொல்லித் தெரிந்தது. இது மெளன ராகத்தின் முப்பதாவது ஆண்டு! ஆம், 1986-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று வெளியானது அத்திரைப்படம்.
ஏதேனும் ஒரு திரைப்படம் நம்மைக் கவர்கிறது என்றால், அதற்கு முக்கியக் காரணம் நாம் அந்தப் படத்துடன் நம்மைத் தொடர்புபடுத்திக்கொள்வதுதான். என் வாழ்க்கையில் நான் அப்படித் தொடர்புபடுத்திக்கொண்ட சில திரைப்படங்களில் முதன்மையானது, முக்கியமானது, மௌன ராகம்.
இந்தப் படம் வெளியான அடுத்த வருடம் அதே ஆகஸ்ட் மாதத்தில் நான் பிறந்தேன். என் பால்யத்தில், கார்த்திக் போடும் சண்டைக் காட்சிகளுக்காகத்தான் இந்தப் படத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்தேன். படத்தின் ஆகப் பெரும் பலம் கார்த்திக். “தான் நடித்தேன் என்று சொல்லிக்கொள்வதற்கு கார்த்திக்குக்கு இந்த ஒரு படம் போதும். ‘ஸீல் ஆஃப் யூத்’ என்பதை இந்தப் படத்தில் கார்த்திக் முழுமையாக வெளிப்படுத்தியிருப்பார். அதனை என்ஹான்ஸ் செய்ததில் இளையராஜாவின் இசைக்கும், பி.சி.ஸ்ரீராமின் கேமராவுக்கும் நிறைய பங்குண்டு” என்று என் நண்பர் ஒருவர் சொல்கிறார். இன்று வரையிலும் கார்த்திக் வரும் அந்தப் பகுதியைப் போல வேறு எந்தப் படத்திலும், எந்த இயக்குநரும் செய்யவில்லை. அதை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தும் கார்த்திக்கின் துள்ளல் வசனம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’.
கார்த்திக் அறிமுகமாகும் காட்சி இந்தப் படத்தின் சிறந்த காட்சிகளில் ஒன்று. அவர் தன் நண்பர்களுடன் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் உள்ளே வரும்போது, கேமரா நிறைய ‘ஷேக்’ ஆகியிருக்கும். அந்தக் காட்சியைப் பார்த்தால், கார்த்திக் நம் எதிரில் வருவதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.
“கீழே ஒரு போர்வையை விரித்து அதில் பி.சி. ஸ்ரீராம் கேமராவுடன் படுத்துக்கொண்டார். நாங்கள் பின்னாலிருந்து அந்தப் போர்வையை இழுத்துக்கொண்டு செல்லச் செல்ல, கார்த்திக் அறிமுகமாகும் காட்சியை அவர் படமாக்கினார்” என்று திரைப்பட விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் எழுதிய ‘கான்வர்சேஷன்ஸ் வித் மணி ரத்னம்’ புத்தகத்தில் தெரிவிக்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர் மணி ரத்னம்.
“திவ்யா என்ற கதாபாத்திரத்தை மையமாக வைத்து முதலில் ஒரு சிறுகதை எழுதினேன். அதுதான் பிறகு திரைப்படமாக மாறியது” என்று மணி அதே புத்தகத்தில் சொல்கிறார்.
அப்படியான ஒரு பெண்ணை என்னுடைய இருபதுகளில் கடந்தபோது தான், இந்தப் படம் சொல்லவரும் உண்மையான அர்த்தத்தைத் தெரிந்துகொண்டு பார்த்தேன்.
இது போன்ற சில தனிப்பட்ட காரணங்கள் பலருக்கும் இருக்கலாம். அவை எல்லாவற்றையும் தாண்டி அந்தப் படம் நம்மை ஈர்த்ததற்கு, இன்றும் ஈர்ப்பதற்கு முக்கிய காரணம் அதன் படமாக்கம்.
ஏழை நாயகன், பணக்கார நாயகி. நாயகியின் திமிரை அடக்கி, தன்னிடம் காதலில் விழவைக்கும் நாயகன். நாயகியின் அப்பாவின் வில்லத்தனங் களை முறியடித்து, சில பாடல் காட்சிகள், ‘அபுஹாய்… அபுஹாய்’ எனப் பறந்து பறந்து அடிக்கும் சண்டைக் காட்சிகள், கொஞ்சம் சென்டிமென்ட் ஆகியவற்றுக்குப் பிறகு ‘சுபம்’ போடுகிற ரீதியிலான படங்கள் வந்துகொண்டிருந்த வேளையில், எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நகரும் திரைக்கதையுடன் வந்த இத்திரைப்படம், தமிழ் சினிமாவின் ஒரு மைல்கல்!
கதை மிகவும் எளிமையானது. தனக்கு முன்பின் அறிமுகமில்லாத ஒருவருடன் நாயகிக்குத் திருமணம் நடக்கிறது. நாயகிக்கு ஒரு ‘ஃப்ளாஷ்பேக்’ காதல் உண்டு. அதைத் தனக்குள்ளேயே மறைத்து வைத்துக்கொண்டு, புதிய வாழ்க்கைக்குத் தயாராக வேண்டிய சவால் நாயகிக்கு. அதை அவள் எப்படி எதிர்கொள்கிறாள் என்பதுதான் கதையின் அடிநாதம். அன்றைய காலத்தில் காதல் படங்களுக்கு கமல்ஹாசனிடம் ‘கால்ஷீட்’ கிடைக்கவில்லை என்றால், தயாரிப்பாளர்கள் அடுத்துத் தேர்வு செய்யும் நபர் மோகன். நாயகியை மையமாகக் கொண்ட இதுபோன்ற படத்தில் மோகன் நடித்தது உண்மையிலேயே ஆச்சர்யம்!
“சின்ன வயதிலிருந்து சுதந்திரமாக வளர்ந்த ஒரு பெண், பெற்றோர் பார்க்கிற ஆணை மணந்துகொள்வாள். முன்பின் தெரியாத ஒரு ஆணுடன் முதலிரவைக் கழிக்க நேரிடும். என் சிறுகதை அந்த முதலிரவைப் பற்றியதுதான். பின்னர் அந்தக் கதையைத் திரைப்படமாக எடுத்தபோது ரேவதி சொல்லும் 'நீங்க தொட்டாலே கம்பளிப்பூச்சி ஊர்ற மாதிரி இருக்கு' என்கிற வசனமும் அந்த முதலிரவைப் பற்றித்தான்” என்று பரத்வாஜ் ரங்கனுடனான உரையாடலில் தெரிவிக்கிறார் மணி.
திருமணமான முதல் நாளில் விவாகரத்தைப் பரிசாகக் கேட்கும் பெண், எந்த ஒரு கணவனுக்கும் மிகப் பெரிய அதிர்ச்சியையே தருவார். நாயகியின் முன்பு கம்பளிப்பூச்சியாகக் குறுகிப்போய் நாயகன் கடக்கின்ற நாட்கள், வெளிப்படுத்த முடியாத அன்பு குறித்த கவித்துவமான சுயகழிவிரக்கம்!
பின்னர் ஒரு காட்சியில் “என்னைத் தொட்டா உனக்குத்தான் கம்பளிப்பூச்சி ஊர்ற மாதிரி இருக்கும்” என்று ரேவதியிடம் அவர் கொடுக்கும் பதிலடியில் அத்தனை காலம் தான் பொதித்து வைத்திருந்த ஆற்றாமையை, ஒரே வரியில் மோகன் கடந்துவிடும்போது நமக்குள்ளும் ஒரு பனிப்பாறை உடைக்கப்பட்டுவிடுகிறது.
இந்தப் படம் வெளியானதற்குப் பிறகு ‘மிஸ்டர் சந்திரமெளலி’ எனும் வசனம் எவ்வளவு பிரபலமானதோ, அதே அளவுக்கு அந்த ‘கம்பளிப்பூச்சி’யும் பிரபலமாகிவிட்டது. ‘மெளன ராகம்’ திரைப்படத்தை முதன்முறை பார்ப்பவர்களுக்கு கார்த்திக்கையும் அவருடைய இளமைத் துள்ளலையும் பிடிக்கும். அதே படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கிறவர்களுக்குக் கம்பளிப்பூச்சிதான் அதிகம் பிடிக்கும். ஏனென்றால், நம் எல்லோருக்குள்ளும் வெளிப்படுத்த முடியாத அன்பு, சுயகழிவிரக்கமாக நகர்ந்துகொண்டிருக்கிறது ஒரு கம்பளிப்பூச்சியைப் போல!
No comments:
Post a Comment