ரூ.500, ரூ.1000 மாற்றும் பணி தீவிரம்: சில இடங்களில் கால தாமதத்தால் மக்கள் வாக்குவாதம்
பாரதி ஆனந்த்
500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை அரசும், ரிசர்வ் வங்கியும் கூறியதுபோல் எளிதாக மாற்ற முடியாமல் மக்கள் சில இடங்களில் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
"நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இந்த உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வரும் 10-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்" என்று பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை இரவு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்படவே ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை அடுத்து பொதுமக்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க உதவி மையம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது மத்திய ரிசர்வ் வங்கி. விரிவான செய்திக்கு > பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றுவது எப்படி?- பதற்றம் தணிக்க ரிசர்வ் வங்கியின் 20 வழிகாட்டுதல்கள் |
500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை அஞ்சல் நிலையங்களில் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் ஒரு நாளைக்கு ஒரு நபர் அதிகபட்சம் ரூ.4 ஆயிரம் வரை பெறலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.
அதன்படி இன்று (வியாழக்கிழமை) காலை முதலே வங்கிகள், தபால் நிலையங்கள் வாயிலில் மக்கள் அதிகளவில் திரண்டனர்.
சென்னை திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள வங்கிகளில் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் நம்மிடம் கூறும்போது, "எனது பணம் ரூ.6000-த்தை மாற்றுவதற்காக வந்தேன். வங்கியில் ஒரு படிவம் தந்தார்கள். அதை பூர்த்தி செய்து, கொடுத்தேன். ஆனால், பணத்தை டெபாசிட் செய்துவிட்டு செல்லுங்கள். இப்போதைக்கு பணமில்லை. பணத்தை உங்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்வோம் என்று சொல்லிவிட்டனர். இப்போதைக்கு எனக்கு செலவுக்கு பணமில்லை" என்றார்.
இதேபோல் வாடிக்கையாளர்கள் பலரிடமும் அதிகாரிகள் சொன்னதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வங்கி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பணம் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் | படம்: எல்.சீனிவாசன்.
வங்கி நிலைமை இப்படியிருக்க சென்னை திருவல்லிக்கேணி தபால் நிலையத்தின் வாசலில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். தபால் அலுவலகத்தில் ஆயத்தப் பணிகள் நடப்பதால் உள்ளே மக்களை அனுமதிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பொறுமையிழந்து கூச்சலிட்டனர். நிலைமையை சமாளிக்க வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் போலீஸார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
திருச்சி நிலவரம்:
திருச்சியில் இன்று காலை 7 மணி முதலே வங்கி மற்றும் தபால் நிலையங்களில் மக்கள் பெருமளவில் திரண்டனர். போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வங்கிகளில் மக்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டு அதனடிப்படையில் மக்கள் வரிசையாக அனுமதிக்கப்படுகின்றனர்.
வங்கியில் ஏற்கெனவே கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது சேமிப்பு புத்தகத்தை அளித்து பணத்தை பெற்றுக் கொள்ள முடியும். அவர்களுக்கு ரூ.10,000 (5 புதிய ரூ.2000 நோட்டுகள் வீதம் வழங்கப்படுகிறது). ஆனால் வங்கியில் சேமிப்புக் கணக்கு இல்லாதவர்கள் படிவம் ஒன்றை பூர்த்தி செய்து அடையாள அட்டை ஒன்றை காண்பித்துவிட்டு பணத்தை பெற்றுக் கொள்கின்றனர். அவர்களுக்கு ரூ.4000 வழங்கப்படுகிறது.
படம்: எஸ்.ஞானவேல்முருகன்
ரூ.2000 புதிய நோட் ஒன்றும் எஞ்சிய பணம் ரூ.100, ரூ.50, ரூ.20 மற்றும் ரூ.10-ஆக வழங்கப்படுகிறது. திருச்சி முழுவதும் இன்னும் ரூ.500 புதிய நோட்டுகள் வரவில்லை.
மத்திய அரசின் நடவடிக்கைக்கு நடுத்தரவர்க்க மக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தபால் நிலையங்களில் தாமதம்:
திருச்சி நகர் முழுவதும் தபால் நிலையங்களுக்கு இன்னும் பணம் வரவில்லை. இதனால், மக்கள் காத்திருக்கின்றனர். வழக்கமான தபால் அலுவல்கள் மட்டுமே அங்கு மேற்கொள்ளப்படுகின்றன. பகல் 12 மணிக்கு மேல் பணம் விநியோகிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
மதுரையில் அடையாள அட்டை கெடுபிடி:
மற்ற ஊர்களைப் போலவே மதுரையிலும் மக்கள் தங்கள் பணத்தை மாற்றிக்கொள்ள அலைமோதுகின்றனர். பணத்தைப் பெற்றுக்கொள்ள ஆதார், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை என எதை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் பாரத ஸ்டேட் வங்கி ஆதார் அல்லது பான் கார்டு மட்டுமே ஏற்றுக் கொள்கிறது. இதனால் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். தங்களது சிரமத்தை புரிந்து கொள்ளாமல் வங்கி நடந்து கொள்வதாக அதிருப்தி தெரிவித்தனர்.
ஒத்தக்கடை பாங்க் ஆஃப் இந்தியா வங்கி அருகே காத்திருக்கும் மக்கள்| படம்:கி.மகாராஜன்.
மதுரையிலும் தபால் நிலையங்களில் பணம் விநியோகம் தொடங்கவில்லை. ஆனால், காலை 7 மணி முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
சேலத்தில் ரூ.4000/- மட்டுமே:
சேலம் மாவட்டத்தில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் கணக்கில்லாதவர்கள் என அனைத்து மக்களுக்கு வெறும் ரூ.4000/- மட்டுமே மாற்றித் தரப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் தபால் நிலையங்களில் பொது மக்களிடம் சேமிப்புக் கணக்கு ஆரம்பித்து அதில் பணத்தை டெபாசிட் செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. உடனடியாக பணத் தேவை இருக்கும்போது இவ்வாறாக கணக்கு ஆரம்பித்து பின்னர் பணத்தை எடுப்பது நடைமுறை சிக்கலுக்கு வழிவகுக்கும் என மக்கள் குமுறல்களை தெரிவித்தனர்.
சேலத்தில் வங்கி வளாகத்தில் திரண்டிருந்த பொது மக்கள் | படம்: எஸ்.குருபிரசாத்.
சேலம் மாநகர் முழுவதுமே கடந்த 2 நாட்களாக வெறிச்சோடி காணப்படுகிறது. பணப்புழக்கம் அதிகம் இல்லாததால் செவ்வாய்ப்பேட்டை, லீ பஜார், புது பஸ்ஸ்டாண்ட், சின்னக்கடை வீதி, பஜார் வீதி போன்ற பகுதிகள் முடங்கிப் போயிருக்கின்றன.
கோவையில் கட்டுக்கடங்கா கூட்டம்:
கோவை நகரில் ஒவ்வொரு வங்கியின் முன்னும் குறைந்தது 3000 பேராவது திரண்டிருக்கிறார்கள். மக்கள் கூட்டத்தை சமாளிக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கூட்டம் அதிகமாக இருப்பதால் கையில் பணமிருந்தும் வங்கியில் அதை மாற்றி அத்தியாவசியப் பொருட்களை விற்க முடியாமல் மக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
கோவையில் புது கரன்சி நோட்டுடன் புன்னகை பூக்கும் பெண்கள் | படம்: ஜெ.மனோகரன்.
தபால் நிலையங்களில் பண பட்டுவாடா தொடங்கவில்லை. இன்னும் பணம் வரவில்லை என தபால் நிலைய அதிகாரிகள் தெரிவித்தாலும் மக்கள் வரிசையில் காலையில் இருந்தே காத்திருக்கின்றனர்.
சில்லறை தட்டுப்பாட்டால் காய்கறி சந்தையில் காய்கறிகள், பழங்கள் தேங்கிக் கிடக்கின்றன. பெட்ரோல் பங்குகளில் ரூ.500/-க்கு மட்டுமே பெட்ரோல் விநியோகிக்கப்படுகிறது என மக்கள் பரவலாக புகார் கூறியுள்ளனர்.
உங்கள் ஊர் நிலவரம் எப்படி?
தலைநகர் சென்னையில் ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் இன்னல்களை சந்தித்துவரும் நிலையில் உங்கள் ஊரில், உங்கள் பகுதியில் நோட்டுகளை எளிதாக மாற்ற முடிகிறதா? இல்லை சிரமம் நிலவுகிறதா? அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.