Thursday, November 10, 2016

அதிக பணம் டெபாசிட்டா: வரி, அபராதம் விதிக்கப்படும்

புதுடில்லி: 'காலாவதியான, 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகளை, அதிக அளவில் வங்கி கணக்கில் செலுத்துபவர்கள் வருமான வரி ஏய்ப்பு செய்திருந்தால், அவர்களுக்கு வரியுடன், 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.
ரூ. 2.5 லட்சம் : இது குறித்து, மத்திய வருவாய் துறைச் செயலர் ஹஸ்முக் ஆதியா கூறியதாவது: காலாவதியான, 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகளை, வங்கிக் கணக்கில் செலுத்த, டிசம்பர், 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், வங்கியில் அதிக அளவு தொகையை டெபாசிட் செய்பவர்கள் குறித்து ஆராயப்படும். குறிப்பாக, 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் செய்யப்படும் அனைத்து டெபாசிட்கள் குறித்தும் வருமான வரித்துறை ஆய்வு செய்யும். அவ்வாறு டெபாசிட் செய்பவர்களின் வருமான வரி கணக்கு தாக்கலுடன் ஒப்பிட்டு, வருவாய்க்கு அதிகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டால், அதை வரி ஏய்ப்பாக கருதி, அதற்கு வரியும், 200 சதவீத அபராதமும் விதிக்கப்படும். இதனால், சிறு வணிகர்கள், குடும்பத் தலைவிகள், தொழிலாளர்கள் போன்றவர்கள் பீதியடைய வேண்டாம். அவர்கள், இரண்டு லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்தாலும், வருமான வரி வரம்புக்குள் வராத நிலையில், அவர்களுக்கு பாதிப்பு இருக்காது.
தங்கம் காப்பாற்றுமா? : கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக, 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, பலரும், தங்கத்தை வாங்கி குவிப்பதாக கூறப்படுகிறது. தங்கம் வாங்குபவர்களின், 'பான்' எண்களை பெற வேண்டும் என, அனைத்து தங்க நகை வியாபாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது கடைபிடிக்கப்படுகிறதா என, வருமான வரித்துறை சோதனைகளை மேற்கொள்ளும். அதனால், ஏமாற்றுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024