Thursday, November 10, 2016

வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்கு ஆதாரம் காண்பிக்க வேண்டும்

By DIN  |   Published on : 10th November 2016 05:29 AM 


செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் தற்போது செலுத்தும்போது, அந்தப் பணத்துக்கான ஆதாரத்தை காண்பிக்க வேண்டியது அவசியம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் இனி செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அறிவித்தார். அதேசமயத்தில், மக்களிடம் தற்போது இருக்கும் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை இரு வாரங்களுக்குள் வங்கிகளிலும், தபால் அலுவலகங்களிலும் மாற்றிக் கொள்ளவும், வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை வங்கிக் கணக்குகளில் செலுத்தவும் முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு செலுத்தப்படும் பணத்துக்கு கணக்குக் காண்பிக்க வேண்டுமா, வேண்டாமா என்ற குழப்பம் மக்களுக்கு இருந்து வரும் சூழலில், இதுதொடர்பான விளக்கத்தை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அளித்துள்ளார்.
இதுகுறித்து, தூர்தர்ஷன் செய்தித் தொலைக்காட்சிக்கு புதன்கிழமை அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
நாட்டின் பணப்புழக்கத்தில் பெரும் பங்கு வகித்து வந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாததாக அறிவித்திருப்பது, கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் ஒரு மைல் கல் ஆகும். மேலும், இந்த அறிவிப்பால் ஊழலையும், கள்ளநோட்டு புழக்கத்தையும் பெருமளவில் கட்டுப்படுத்த முடியும்.
தற்போது மக்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளிலோ அல்லது தபால் அலுவலகங்களிலோ கொடுத்து அவற்றுக்குப் பதிலாக குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக்கொள்ள வசதி செய்து தரப்பட்டுள்ளது. இல்லையெனில், தங்களிடம் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் அவரவர் வங்கிக் கணக்குகளிலேயே செலுத்திக் கொள்ள முடியும்.
அவ்வாறு வங்கிகளில் மாற்றப்படும் அல்லது செலுத்தப்படும் பணத்துக்கான மூல ஆதாரத்தை சம்பந்தப்பட்டவர்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். அந்தப் பணத்துக்கு எந்த வரிச்சலுகையும் அளிக்கப்பட மாட்டாது. அதேசமயத்தில், அன்றாடச் செலவுகளுக்காக வீடுகளில் இருக்கும் பணத்துக்கு (ரூ.50 ஆயிரம் வரை) எந்த ஆதாரமும் காண்பிக்கத் தேவையில்லை.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், சட்டவிரோதமாக கருப்புப் பணம் வைத்திருப்பவர்களும், ஊழல்வாதிகளுமே பாதிக்கப்படுவார்கள். நேர்மையாக சம்பாதிப்பவர்களுக்கும், வரி செலுத்துபவர்களுக்கும் இந்த நடவடிக்கையால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
இந்த அறிவிப்பு வெளியான முதல் இரண்டு வாரங்கள் மட்டும் வங்கிகளில் பணப் பரிமாற்றத்தில் சிறிது பாதிப்பு இருக்கும். பின்னர், புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வந்துவிடும் என்பதால், பணப் பரிமாற்றம் வழக்கம்போல் நடைபெறும்.
இந்த நடவடிக்கையால், நாட்டில் மின் பணப்பரிமாற்றம் அதிகரிக்கும். குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் இருப்பதால் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்போது, அந்தப் பணத்துக்கு வரி செலுத்த வேண்டியிருக்கும். இந்த நிலை நீடிக்கும்போது, அதிக வரி செலுத்துவோர் வசிக்கும் நாடாக எதிர்காலத்தில் இந்தியா மாறும் என்றார் அருண் ஜேட்லி.





No comments:

Post a Comment

NEWS TODAY 27.09.2024