Thursday, November 10, 2016

உன்னத மன்னர் திப்பு சுல்தான்

By ஜெ. ஹாஜாகனி  |   Published on : 10th November 2016 01:36 AM  |

ஆடுகளாய் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதைவிட, சிங்கமாக ஒரே நாள் வாழ்வது மேல்' என்ற வீர வரிகளின் விலாசமாய் நிற்பவன் தீரன் திப்பு சுல்தான்.
நவம்பர் 10 அன்று திப்பு சுல்தானுக்கு கர்நாடக அரசு விழாவெடுக்க முன்வந்ததும், அதைக் கடுமையாக எதிர்ப்போர் திப்பு சுல்தானை மதவெறி மன்னனாக சித்திரிப்பதும், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி "திப்பு ஒரு மன்னன்தானே தவிர சுதந்திரப் போராட்ட வீரன் இல்லை. அவனுக்கு விழா எடுக்க அரசு ஆர்வம் காட்டுவது அவசியமா' என்று வினாத் தொடுத்திருப்பதும், தியாக வரலாறுகள் திரும்பத் திரும்ப சொல்லப்பட வேண்டிய அவசியத்தையும், சொல்லப்படாவிட்டால் நிகழும் அபாயத்தையும் உணர்த்துகின்றன.
சென்னையிலே வால்டாக்ஸ்(Wall Tax) சாலை மிகப் பிரபலம். (Wall Tax) என்ற சுவர் வரி ஏன் விதிக்கப்பட்டது என்ற வரலாறு பலருக்கும் தெரியாது. "சென்னைப் பட்டணத்தில் நிலை கொண்டிருந்த ஆங்கிலேயர்கள் மீது, ஹைதர் அலி அடிக்கடி அதிரடித் தாக்குதல் தொடுத்து, அவர்களை அலற வைத்துக் கொண்டிருந்தார்.
ஹைதர் அலியின் படையெடுப்பைத் தடுக்க ஒரு நெடுஞ்சுவர் எழுப்பவும், அதற்கான நிதிக்காக விதிக்கப்பட்டதே வால்டாக்ஸ்' என்றும் தனது ஆய்வுரையில் குறிப்பிடுகிறார் பேராசிரியர் தஸ்தகீர்.
திப்பு சுல்தானைத் தனது "யங் இந்தியா' இதழில் மிகவும் பாராட்டி எழுதியுள்ள தேசத் தந்தை காந்தியடிகள்,
"நல்லதொரு முஸ்லிமான அவர், மதுவிலும், மங்கையரிலும் மூழ்கிப் போகாத நல்ல மன்னராகவும் வாழ்ந்தார். வருமான இழப்புகளைப் பற்றிக் கவலைப்படாமல், பூரண மதுவிலக்கை அமல்படுத்திய திப்பு ஓர் உன்னதமான மன்னர்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய தேசத்தின் வரலாற்றை The Discovery of India என்று எழுத்தோவியமாய்த் தீட்டிய பண்டித ஜவாஹர்லால் நேரு, "ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் கிழக்கிந்தியக் கம்பெனியின் பேரெதிரிகளாய் நின்றனர். படுதோல்விகளை பிரிட்டிஷாருக்கு பரிசளித்து, அவர்களின் ஆளுமைக் கனவுகளைத் தகர்த்து வந்தனர்' என்று புகழாரம் சூட்டுகிறார்.
"திப்பு விடுதலைப் போரின் முன்னோடி' என்ற முனைவர் வெ. ஜீவானந்தம் தொகுத்த நூலுக்கு எழுதிய முன்னுரையில் நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர்,
"மதவாதம் பெரும் நோயாகி, நமது சமுதாயத்தைச் சீர்குலைத்துக் கொண்டிருக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம். பைத்தியக்காரத்தனமான மதவெறியும், மூர்க்கம் மிகுந்த வழிதவறிய சிந்தனைகளுமே இந்த அவலத்தின் காரணமாகும்.
இவர்கள் வரலாற்று நாயகர்களைக் கூட பொய்யான கதை கட்டி இனவெறியர்களாகவும், மதவெறியாளர்களாகவும் சித்திரிக்கிறார்கள். சிறந்த மனிதாபிமானியும், சமய ஒற்றுமை பேணியவருமான திப்பு கூட இத்தகைய அவதூறுகளிலிருந்து தப்பவில்லை.
திப்புவின் தலைநகரான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் மசூதியும், ரங்கநாதர் ஆலயமும் அருகருகே எந்த பாதிப்பும் இன்றி, இன்னுமிருப்பதைக் காணலாம். திப்பு மதவெறியனாக இருந்திருந்தால் இந்த ஆலயம் அல்லவா முதல் பலியாகியிருக்க வேண்டும்' என்று குறிப்பிடுகிறார்.
சிறந்த மன்னனாக, சீர்திருத்த நாயகனாக, அறிவியல் தொழில்நுட்ப ஆர்வலனாக, ஆன்மிகத் தேடல் உள்ளவனாக, விவசாயிகளின் தோழனாக, வெள்ளை ஏகாதிபத்தியத்தின் எதிரியாக, அனைத்து சமயத்தினர்க்கும் பொதுவானவனாக கல்வியாளனாக, களப் போராளியாக - இப்படிப் பன்முக ஆளுமை கொண்ட திப்பு சுல்தானை, தப்பு சுல்தானாகக் காட்டும் தகாத செயலுக்கு உந்து சக்தியாக இருப்பது எது என சிந்திக்க வேண்டும்.
"தன்மானமும், மண்மானமும் காக்க இஸ்லாமிய நிஜாமையும், கிறிஸ்தவ ஆங்கிலேயரையும், இந்து மராட்டியரையும் எதிர்த்தவன் திப்பு சுல்தான்' என்று குறிப்பிடுகிறார் குமரி அனந்தன்.
மார்பை மறைக்கும் உரிமை மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்டப் பெண்களின் நிலை கண்டு துடித்து, அதற்குக் காரணமான மரபையும், வறுமையையும் மாற்றியவன். ஆயுதத் தொழிற்சாலையின் கழிவான கந்தக அமிலம் காவிரியை மாசுபடுத்துவது கண்டு பொறுக்காமல், ஆலையையே இடம் மாற்றியவன்' என்று திப்பு சுல்தான் இந்தத் திருநாட்டில் ஏற்படுத்திய தாக்கத்தை அழகுறப் பதிவு செய்துள்ளார் குமரி அனந்தன்.
திப்பு சுல்தான் பற்றி ஆவணங்களை லண்டன் அருங்காட்சியகத்தில் தேடிப் பிடித்து, ஒரு நூலை எழுதுகிறார் பகவான் எஸ். கித்வானி. இந் நூல்தான் பிற்காலத்தில் Sword of Tipu Sultan' என்ற பெயரில் தொலைக்காட்சியில் தொடராக ஒளிபரப்பானது.
இந்தத் தொடருக்குப் பெரும் நெருக்கடிகள் தரப்பட்டன. படப்பிடிப்பு நடந்த பிரிமியர் சினிமா ஸ்டுடியோவுக்கு வன்முறையாளர்கள் தீ வைத்ததில் 55 பேர் மரணமடைந்தனர்.
அப்போதைய அரசு மல்கானியை இத் தொடரின் ஒரு நபர் தணிக்கையாளராக நியமித்தது. அவரது வற்புறுத்தலின்படி, ஆய்வுநூலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இத் தொடர் முற்றிலும் ஒரு கற்பனைக் கதை என போடப்பட்டது.
திப்பு சுல்தானைப் பற்றிய கொடிய அவதூறுகள் திட்டமிட்டுப் பரப்பப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, கொல்கத்தா பல்கலைக்கழக சமஸ்கிருதத் துறைத் தலைவராக இருந்த, ஹரிபிரசாத் சாஸ்திரி எழுதிய பள்ளிப் பாடநூலுக்கான கட்டுரையில், "திப்பு முஸ்லிமாக மாற வற்புறுத்தியதால் 3,000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டனர்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இது உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிகார், ஒடிஸா மாநிலங்களின் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரரும், ஒடிஸாவின் முன்னாள் ஆளுநருமான பி.என். பாண்டே, ஹரிபிரசாத்தைத் தொடர்பு கொண்டு, அவரது கூற்றுக்கான ஆதாரங்களைக் கேட்டபோது, அவரால் தர இயலவில்லை. பிறகு பாண்டேவின் முயற்சியால் அப்பாடப் பகுதி நீக்கப்பட்டுள்ளது.
திப்பு சுல்தானின் மிக நெருங்கிய உதவியாளரான பூர்ணய்யா, ஒரு பிராமணர். அவர் உங்களைக் காட்டிக் கொடுத்துவிடக் கூடும் என்று சிலர் குற்றம் சாட்டியபோது, "யாரோ சிலரின் தவறுக்காக ஒட்டுமொத்த சமுதாயத்தையே நிந்திப்பது கூடாது' என்ற குர்ஆனின் கருத்தை எடுத்துரைத்து அவர்கள் கூற்றை மறுத்துள்ளார் திப்பு சுல்தான்.
சமய நிறுவனங்களுக்கு திப்புவின் ஆட்சியில், ஓராண்டில் ஒதுக்கப்பட்ட தொகை 2,33,959 வராகன்கள். இதில் 2,13,959 வராகன்கள் இந்துக் கோயில்களுக்கு செலவிடப்பட்டது.
மூன்றாம் மைசூர் போரின்போது, பரசுராம் பாவே தலைமையில் படையெடுத்து வந்த இந்து வீரர்களைக் கொண்ட மராட்டிய படை சிருங்கேரி மடத்தை சூறையாடி 17 லட்சம் வராகன் மதிப்பிலான பொருள்களைக் களவாடிச் சென்றது. அப்போது பீடாதிபதியாக இருந்த சச்சிதானந்த பாரதியும், அவரது சீடர்களும் கர்க்கலாவிற்குத் தப்பிச் சென்றனர்.
மடத்தின் மூல விக்ரகமான தங்கத்தால் ஆன சாரதா தேவி சிலையும் கொள்ளை போனது. சிருங்கேரி மடத்திற்கு மராத்தியர்கள் செய்த கொடுமைக்கு இழப்பீடாகப் பெரும் பொருளுதவிகளை வழங்கி ஆறுதல் தந்தது திப்பு சுல்தான்தான்.
நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோயிலுக்கு திப்பு வழங்கிய 9.5 அங்குல உயரமுள்ள பச்சை மரகதலிங்கம் பாதுஷா லிங்கம் என்றே இன்றும் அழைக்கப்படுகிறது.
திண்டுக்கல் போரின்போது, கோட்டையைப் பின்புறமிருந்து தாக்கினால் எளிதாக வீழ்த்தலாம் என்ற ஆலோசனை திப்புவுக்கு வழங்கப்பட்டது. அப்படித் தாக்கினால் அங்கிருந்த சிவன் கோயிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதையறிந்து, அந்த வியூகத்தையே திப்பு கைவிட்டார்.
திப்புவின் ஆட்சியில் ஆளுநர் ஒருவர் காவிரி நீர் கீழ்பவானி பகுதிக்குச் செல்ல முடியாமல் தடுப்பணை கட்டினார். கீழ்பவானி விவசாயிகளான தமிழர்கள் திப்புவை சந்தித்து முறையிட்டனர்.
தமிழக விவசாயிகளின் நியாயப்பாட்டை ஏற்றுக் கொண்ட திப்பு, சூரியனும், சந்திரனும் உள்ளவரை, மேலிருந்து கீழ்நோக்கிப் பாயும் தண்ணீரைப் பிறரைப் பாதிக்கும் வகையில் தடுக்க யாருக்கும் உரிமையில்லை என்று கூறி தடுப்பணையை உடைத்துள்ளார்.
நிலப்பிரபுத்துவம் உருவாக்கிய சமூக அநீதிகளை சரிசெய்ய அரசு முதலாளித்துவம்(State Capitalism) என்ற கோட்பாட்டை திப்பு சுல்தான் அறிமுகப்படுத்தினார். சோஷலிசத்தை ஐரோப்பா சிந்திக்கத் தொடங்கும் முன்பே அதை நடைமுறைப்படுத்தியவர் திப்பு சுல்தான்.
அருகமைப் பள்ளிகளே கல்வி வளர்ச்சிக்கு அடித்தளம் என்று நம்பிய திப்பு ஆறு மைல்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் திறந்ததும், கானுயிர் காப்பகத்தை முதலில் நிறுவியதும், அவரது தொலைநோக்கையும், மக்களின் மீதான பற்றையும் காட்டுவன.
17 வயதில் படைத் தளபதியான திப்பு, 1767-ஆம் ஆண்டு ஜோசப் ஸ்மித் தலைமையிலான ஆங்கிலப் படையை எதிர்த்துப் போரிட்டு முதல் வெற்றியை ருசித்த இடம் தமிழகத்தின் வாணியம்பாடி.
திப்புவைக் கொன்று, அவனது பிள்ளைகளை வேலூரில் சிறை வைத்தது வெள்ளை ஏகாதிபத்தியம். 1806-ஆம் ஆண்டு திப்புவின் பிள்ளைகள், வேலூர் புரட்சியை சிறையிலேயே நடத்தி, கோட்டையில் பறந்த யூனியன் ஜாக் கொடியை இறக்கி, புலிக்கொடியை பறக்கவிட்டனர்.
திகைக்க வைக்கும் தீரத்தை கொண்ட திப்பு சுல்தானைக் கொண்டாடுவதன் மூலம், இளைய தலைமுறை ஏற்றமிகு சிந்தனையையும், எழுச்சிமிகு தியாகத்தையும் இதயத்தில் பதியமிடும்.

கட்டுரையாளர்:
பேராசிரியர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.09.2024