Thursday, November 10, 2016

ரூ.500, ரூ.1000 நோட்டை மாற்ற படிவம் பூர்த்தி செய்வது அவசியம்: இன்று முதல் மாற்றிக் கொள்ளலாம்

By DIN  |   Published on : 10th November 2016 04:42 AM 

வங்கிகளில் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான சிறப்புப் படிவத்தை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றுவதற்கு இந்த சிறப்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து அளிப்பது அவசியம் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். வங்கிகளின் உயர் அதிகாரிகள் மேலும் கூறியதாவது:
இன்று முதல்...: நாடு முழுவதும் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செவ்வாய்க்கிழமை (நவ.8) நள்ளிரவு முதல் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் மாற்றம் காரணமாக நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு புதன்கிழமை (நவ.9) விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வியாழக்கிழமை (நவ.10) முதல் மாற்றிக் கொள்ளும் ஏற்பாடுகளை தமிழகம் உள்பட நாடு முழுவதும் வங்கிகள் அனைத்தும் செய்து தயார் நிலையில் உள்ளன.
சிறப்புக் கவுன்ட்டர்கள்: பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள அனைத்து வங்கிக் கிளைகளிலும் சிறப்புக் கவுன்ட்டர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்புக் கவுன்ட்டர் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி வரை செயல்படும்.

சிறப்புப் படிவம் இலவசம்:

பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டு வைத்துள்ளோர் சிறப்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.4,000 வரை எந்த வங்கிக் கிளையிலும் அளித்து மாற்றிக் கொள்ளலாம். அனைத்து வங்கிக் கிளைகளிலும் இந்த சிறப்புப் படிவம் இலவசமாக அளிக்கப்படும்.
அடையாள அட்டை பிரதி அவசியம்: கணக்கு வைத்துள்ள வங்கிக் கிளையின் பெயர், வாடிக்கையாளரின் பெயர், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, கடவுச் சீட்டு ("பாஸ்போர்ட்'), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட அடையாள அட்டை, பான் அட்டை ஆகியவற்றின் ஏதாவது ஒன்றின் பிரதியை சிறப்புப் படிவத்துடன் அளிப்பது அவசியமாகும். அடையாள அட்டையின் எண்ணை சிறப்புப் படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.எந்த வங்கிக் கிளை
யிலும்...: தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியில்தான் பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; மேலும் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள வங்கிக் கணக்குப் புத்தகம் ("பாஸ் புக்') தேவையில்லை.

ஒவ்வொரு நாளும் ரூ.4,000 அளவுக்கு பழைய நோட்டுகளை மாற்றும்போது சிறப்புப் படிவத்தை அளிப்பது அவசியம். இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ள புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் வெள்ளிக்கிழமை (நவ.11) முதல்தான் புழக்கத்துக்கு வர உள்ளன. இதன் காரணமாக வங்கிகளில் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வியாழக்கிழமை (நவ.10) மாற்றும் பொது மக்களுக்கு ரூ.100 எண்ணிக்கையில்தான் மாற்று நோட்டுகள் வழங்கப்படும்.
கணக்கில் பணம் செலுத்த...: பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள வரும் டிசம்பர் 30-ஆம் தேதி வரை அவகாசம் உள்ளதால் பொதுமக்கள் பதற்றப்படத் தேவையில்லை;

வங்கிகளுக்கு இருப்பில் உள்ள அனைத்து பழைய ரூ.500, ரூ.1,000 பழைய நோட்டுகளை எடுத்துச் சென்று வழக்கம்போல் சேமிப்புக் கணக்குப் படிவத்தைப் பூர்த்தி செய்து வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்கில் செலுத்தி விடுவது மிகவும் சிறந்தது; வாடிக்கையாளர்கள் பழைய ரூ,500, ரூ.1,000 நோட்டுகளை வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு வரம்பு எதுவும் இல்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.09.2024