பாதுகாப்பில்லா பெட்டகம்
By வாதூலன் | Published on : 28th January 2017 01:38 AM |
இரண்டு வாரம் முன்பு, சில ஏடுகளிலும் ஊடகங்களிலும் வெளியான செய்தி பலரையும் பதற்றப்பட வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
சென்னையில் வங்கிக் கிளையொன்றில், பாதுகாப்புப் பெட்டகங்கள் கொள்ளையடிக்கப்பட்டன என்பதுதான் அந்தச் செய்தி.
இதுபோன்ற கொள்ளை சம்பவம் இதுவரை அறிந்தே இராத ஒன்று. எனவேதான், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த வங்கிக் கிளை, "அவசர விடுமுறை'யை அறிவித்து, வாடிக்கையாளர்களை அருகிலிருக்கும் வேறு கிளைகளை அணுகுமாறு கோரிக்கை விட்டிருக்கிறது.
"பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறோம், சேதம் எவ்வளவு என்பதை ஆராய்ந்து வருகிறோம்' என்று நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வங்கியின் அறிக்கை மழுப்பலாகத் தெரிந்தாலும், நடைமுறை அதுதான்.
வங்கியில் பாதுகாப்பு பெட்டக சேவை என்பது, மிகத் தனியான வகை. இதில், வாடிக்கையாளர்களுக்கும் வங்கிக்கும் இடையே உள்ள உறவு, பிற கணக்குகளில் இருப்பது போலல்ல, கிட்டத்தட்ட இது வீட்டு உரிமையாளர்களுக்கும் வீட்டில் குடியிருப்போருக்கும் நிலவும் உறவு போன்றதுதான்.
ஒரு வீட்டை ஒருவருக்கு வாடகைக்குக் கொடுப்பது போல, வங்கி மேலாளர் பெட்டகத்தை ஒரு வாடிக்கையாளருக்கு வாடகைக்குக் கொடுக்கிறார். இல்லத்துக்கு முன்பணம் கொடுப்பது போல, பெட்டகத்துக்கும் நாலு மாச அட்வான்ஸ் தர வேண்டும் (வேறு வகையான டெபாஸிட்டுகள் நிறைய இருந்தால்கூட இதற்கான முன்பணம் அவசியமென்று வங்கி வற்புறுத்துகிறது).
அவ்வப்போது, வீட்டு வாடகை உயர்த்தப்படுவதுபோல வாடகை பெட்டக அளவுக்குத் தக்கபடி வாடகைத் தொகை மாறுபடும், வீட்டு உடமையாளருக்கு, வீட்டுக்குள் வைத்திருக்கும் பொருள்கள் என்னென்ன என்பதை தெரிவிக்க வேண்டியது எப்படி அவசியமில்லையோ, அதேபோல, பெட்டகத்தில் உள்ள பொருள்களின் விவரத்தை வாடிக்கையாளர் வங்கிக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.
பெட்டகத்தில் இன்னின்ன பொருள் களைத்தான் வைக்க வேண்டும் என்கிற வரையறை எதுவும் கிடையாது. நகை, பாத்திரங்கள், உயில், வீட்டுப் பத்திரங்கள் என்று எதை வேண்டுமானாலும் வைக்கலாம் (சேதம் விளைவிக்கக் கூடிய சாமான்கள் இருக்கக் கூடாதென்று ஒப்பந்த படிவத்திலேயே ஒரு ஷரத்து உண்டு).
பெட்டகத்தைத் திறப்பதற்கு, வாடிக்கையாளருடன் வங்கி அதிகாரியும் உடன் செல்வார். அதிகாரியிடம் இருக்கும் Master Key யும், வாடிக்கையாளரின் சாவியும் இணைந்து செயல்பட்டால்தான், லாக்கரைத் திறக்க இயலும்.
பின்னர், நிதானமாக வாடிக்கையாளர் தேவையானவற்றை எடுத்தோ, வேறு பொருள்களை வைத்தோ, பூட்டிக் கொள்ளலாம். அப்போது அதிகாரி யாரும் அருகிலிருக்க மாட்டார். இதுதான் நடைமுறை.
பெட்டகத்தை உடைத்துத் திறக்க மிக அரிதான தருணங்களில் வங்கிக்கு உரிமை உண்டு. ஒரு குறிப்பிட்ட காலம் கடந்தும் கட்டணம் செலுத்தாமலிருந்தால் -- கடிதம், பதிவுத் தபால் எல்லாம் போட்டும் பதில் இல்லாமலிருந்தால் -- வங்கி அதிகாரி ஒரு சாட்சி முன், அதை திறந்து பார்ப்பார் (நூற்றுக்கு 99 சதவிகிதம் அதில் ஏதும் இருக்காது, பெட்டக வாடிக்கையாளர் எங்காவது வெளிநாட்டிலிருந்து, மறந்தும் போயிருப்பார்!).
வேறொரு சூழலிலும் பெட்டகத்தை உடைக்கலாம். புலனாய்வுத் துறையிலிருந்தோ, வருமான வரி அலுவலகத்திலிருந்தோ நோட்டீஸ் வந்தால், அவர்கள் முன்னிலையிலேயே உடைப்பார்கள்.
1976-ஆம் ஆண்டு அவசர நிலையின்போது, வருமான வரி அதிகாரிகள் ஒரு சிறிய பெட்டகத்தை உடைத்து, அதிலுள்ள கட்டு கட்டான நோட்டுகளை அரசு கணக்கில் வரவு வைத்தார்.
இன்னொன்றையும், இங்கு அவசியம் குறிப்பிட்டாக வேண்டும். பெட்டகத்திலுள்ள பொருள்களின் மீது வங்கிகளுக்கு உரிமை கிடையாது; அதாவது வாராக் கடன் உள்ள வாடிக்கையாளர் பெட்டகத்தில் நகையோ வேறு வீட்டு பத்திரமோ வைத்திருந்தால், அதை கடனுக்குச் சரி செய்யக் கூடாது.
பொதுவாக, வங்கிகளில் இரும்பறையில் (Double Lock) உள்ள தொகை; அடமானம் வைக்கப்பட்டிருந்த நகைகள் இவற்றுக்குக் காப்பீடு உண்டு. குத்து மதிப்பாகச் சில கோடிகளுக்குக் காப்பீடு எடுத்திருப்பார்கள்.
இதுதவிர, வங்கியிலிருந்து வேறு இடத்துக்குக் கொண்டு செல்லும் பணத்துக்கும் (Cash in trsnsit) காப்பீடு உண்டு. ஆனால், பெட்டகத்துள் இருக்கிற பொருள்களுக்கு காப்பீடு கிடையாது.
ஏனெனில் என்னென்ன வைக்கப்பட்டிருக்கின்றன, மதிப்பு எவ்வளவு என்பது வாடிக்கையாளருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் ஆயிற்றே?
கூட்டுறவு வங்கியில் சில மாத முன் நிகழ்ந்த சம்பவத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். வாடிக்கையாளர் ஒருவர் தன் பெட்டகத்திலுள்ள ஆவணங்களைக் கறையான் அரித்து விட்டதாக வழக்கு கொடுத்து, வெற்றியும் பெற்றிருக்கிறார்.
இதில் வங்கி செய்த தவறு, ஏற்கெனவே அவர் புகார் தந்தும் கண்டு கொள்ளவில்லை. நட்ட ஈடாக வங்கி ஒன்றரை லட்ச ரூபாய் வழங்குமாறு நீதியரசர் தீர்ப்பு அளித்திருக்கிறார்.
அண்மையில் நிகழ்ந்த கொள்ளை சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர் ஒருவர் அல்ல; பல வாடிக்கையாளர்கள். வங்கியில்
காவலாள் இல்லையா? எச்சரிக்கை மணி வைக்கப்படவில்லையா? இருந்தும் அது செயல்படவில்லையா? வங்கியின் பாதுகாப்பு அம்சத்தில் ஏதாவது பெரியதவறு இருந்ததா?
பொதுவாக, வீட்டில் திருட்டுப் பயம் உண்டென்ற அச்ச உணர்வில்தான், வங்கியில் பெட்டகத்தை மக்கள் நாடுகிறார்கள், பாதுகாப்பு பெட்டகத்துக்கே பாதுகாப்பு இல்லையானால்? வங்கி நிர்வாகம் தீவிரமாக யோசிக்க வேண்டிய விஷயம் இது