பிப்.9-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் புதன்கிழமை சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்தார். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு அரசியல் அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் இன்றும் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அவற்றின் நிகழ்நேரத் தொகுப்பு: (அவ்வப்போது இந்தப் பக்கத்தை ரெஃப்ரஷ் செய்க)
4.00 pm: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ராஜ்பவன் வந்தடைந்தார்.
3.40pm: சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்.
3.30 pm: "அதிமுக எம்எல்ஏக்கள் அவர்களது விருப்பத்தில்தான் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எம்எல்ஏக்களை யாரும் கட்டுப்படுத்தவில்லை. 10 முக்கிய அமைச்சர்களுடன் ஆளுநரை இரவு 7.30 மணிக்கு சந்திக்க இருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா. விரைவில் சசிகலா தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும். ஆதாரமின்றி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார் பன்னீர்செல்வம்" என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
3.24 pm: வில்லிவாக்கம் எம்எல்ஏ ஜே.சி.டி பிரபாகர் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆதரவு அளித்தார்.
3.20 pm: அதிமுகவின் முன்னாள் எம்பி கே. பழனிசாமி முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு.
3.17 pm: அதிமுக உறுப்பினர் பரிதி இளம்வழுதி முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை இல்லத்தில் சந்தித்தார்.
3.15 pm: இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்கிறார் ஓபிஎஸ். சசிகலா 7.30 மணிக்கு சந்திக்கிறார்.
3.03 pm: "சசிகலா அணியினரால் கடத்திச் செல்லப்பட்டு கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள விடுதிகளிலும், புதுச்சேரியிலும் கட்டாய சிறை வைக்கப்பட்டுள்ள 120-க்கும் மேற்பட்ட அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். விவரம்: சிறை வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களை மீட்க வேண்டும்: அன்புமணி
2.58 pm: "சசிகலாவை ஆதரித்தவர் பன்னீர்செல்வம். தற்போது நாடகமாடுகிறார். பன்னீர் செல்வமும், மதுசூதனனும் துரோகிகள். அதிமுகவின் சொத்துகளை அபகரிக்க முயற்சி நடக்கிறது" என்று அதிமுகவின் கோகுல இந்திரா கூறியுள்ளார்.
2.42 pm: ஆளுநரை வரவேற்க விமான நிலையம் செல்கிறார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.
2.33 pm: தமிழக ஆளுநரை இன்று மாலை 5 மணிக்கு சந்திக்கிறார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.
2. 30 pm: அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா இன்று இரவு 7.30 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார்.
1.49 pm: மதுசூதனன் வருகை தங்களுக்கு வலிமையைக் கூட்டியுள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். விவரம்: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் நேரில் ஆதரவு: ஓ.பன்னீர்செல்வம் நெகிழ்ச்சியுடன் உற்சாகம்
1.47 pm: சசிகலாவை அதிமுகவினர் நிராகரிக்க வேண்டும். அதிமுக காப்பாற்றப்பட வேண்டும்- மதுசூதனன்.
1.38 pm: முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
1.22 pm: முதல்வர் பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் வருகை.
1.17 pm: "அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அவர்களது விடுதியில் சுதந்திரமாக உள்ளனர். தமிழ்நாட்டின் முதல்வராக சசிகலா விரைவில் பதவியேற்பார்" என்று அதிமுகாவின் பா. வளர்மதி கூறியுள்ளார்.
12. 55 pm: நெல்லித்தோப்பு முன்னாள் எம்எல்ஏ ஒம்சக்தி சேகரை சசிகலா நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி நெல்லித்தோப்பு அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
12. 50 pm: முன்னாள் மாவட்ட செயலாளர், கோயம்பத்தூர் மேயருமான பி. ராஜ்குமார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு.
12.50 pm : முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துடன் வீணை காயத்ரி சந்திப்பு
12.30 pm: மும்பையிலிருந்து சென்னை புறப்பட்டார் ஆளுநர் வித்தியாசாகர் ராவ். இன்று ( வியாழக்கிழமை) பிற்பகல் 3.15 மணிக்கு சென்னை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
12.20 pm: "எங்களை யாரும் கடத்தவில்லை. சுதந்திரமாகவே இருக்கிறோம். ஆளுநர் சென்னை வந்தவுடன் சசிகலாவுக்கு எங்களது ஆதரவை தெரிவிப்போம்" என்று குன்னம் தொகுதி எம்ஏல்ஏ ராமசந்திரன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
12.15 pm: "அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் திமுக தலையிடவில்லை. அதிமுகவில் நடக்கும் பிரச்சினைகள் மோசமாகவும், வருத்தமளிப்பதாகவும் உள்ளது" என்று திமுக நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி டெல்லியில் கூறியுள்ளார்.
12.08 pm: 'அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 130-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை; அவர்களைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்' எனக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. அரசினர் விடுதியில்தான் 130 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
11.55 am: சென்னை போயஸ் கார்டனில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிராக அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
11.15 am: 'ஜெயலலிதா சிகிச்சை மர்மங்களை மறைத்தது ஏன்?' என்பன உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், 'சசிகலா குழுவினருக்கு துணையாக இருந்துவிட்டு, இப்போது பிரிந்து வந்த பிறகு உத்தமர் வேடம் போட பன்னீர்செல்வம் முயல்கிறார். ஆனால், அவரது நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள்' என்று கூறியுள்ளார். | முழு விவரம் > உத்தமர் வேடத்தில் ஓபிஎஸ் நாடகம்: பல கேள்விகளை அடுக்கி ராமதாஸ் கருத்து
11.00 am: நாடாளுமன்றத்தில் அதிமுக எம்எல்ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. தமிழக முதல்வராக சசிகலா உடனடியாக பதவியேற்க வேண்டும் என்பது அவர்களது விருப்பக் குரலாக இருந்தது
.
10.55 am: பிணைக் கைதிகள் போல சிறை வைக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களின் மன விருப்பத்தை ஆய்ந்து அறிந்து ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், "சுதந்திர ஜனநாயக நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் இப்படி 'பிணைக் கைதி'கள் போல சிறைப்படுத்தப்பட்டிருப்பது மக்களாட்சியின் மாண்பை சிதைக்கின்ற செயலாக இருக்கிறது" என்று அவர் காட்டமாக கூறியுள்ளார். | விவரம் > பிணைக் கைதிகள் போல அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிறைவைப்பு: ஸ்டாலின் காட்டம்
10.50 am: முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைந்தியநாதன் அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
10.45 am: "உச்ச நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா தண்டனை பெற்றாலும், அதிமுக சசிகலாவை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளது. ஓ. பன்னீர் செல்வம் முதல்வராக முடியாது. அவர் இரு வழிகளையும் இழந்துவிட்டார்" என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
10.42 am: அதிமுக புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர், அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
10.40 am: தமிழக டிஜிபி ராஜேந்திரன், முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசினார்.
10.35 am: குற்றவாளிகளைப் போல் எம்.எல்.ஏ.க்களை நடத்துவதற்கு இந்தப் பெண்ணுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். | முழு விவரம் > குற்றவாளிகளைப் போல் எம்.எல்.ஏ.க்களை நடத்துவதா?- குஷ்பு சாடல்
முந்தைய முக்கியச் செய்திகள்:
* மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதன் விவரம்: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
* எதிர்தரப்புக்கு தாவிவிடக் கூடாது என்பதற்காக அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சொகுசு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டு ரகசிய இடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. விவரம்: ஓபிஎஸ் அணிக்கு தாவுவதை தடுக்க ரகசிய இடத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கவைப்பு: ஆளுநர் இன்று வருவதால் டெல்லி செல்லும் திட்டம் ரத்து
*தமிழக அரசியலில் அசாதாரணமான சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.விவரம்: ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகிறார்: ஆளுநர் மாளிகை தகவல்
* முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக மெரினாவில் இளைஞர்கள் திரள வாய்ப்புள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து அங்கு அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர். விவரம்: முதல்வருக்கு ஆதரவாக இளைஞர்கள் திரள வாய்ப்பு: மெரினா கடற்கரையில் போலீஸார் குவிப்பு
* அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவாக இருந்த எம்எல்ஏக் கள் ஒவ்வொருவராக தற்போது ஓபிஎஸ் பக்கம் சாய்ந்து வருவதால் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு வரை பன்னீர் செல்வத்தையும் சேர்த்து அவரது அணியில் 6 எம்.எல்.ஏ.க்கள் இருப்பது உறுதியாகியுள்ளது. விவரம்: ஓபிஎஸ் அணியில் 6 எம்எல்ஏக்கள்: சசிகலாவுக்கு ஆதரவு கரைகிறதா?
* போயஸ் கார்டனில் ஓ.பன்னீர் செல்வத்தை ஒருமையில் அழைத்து அவமானப்படுத்தியதாக அவரது நெருக்கமான ஆதரவாளர்கள் ஆதங்கப்படுகின்றனர். விவரம்: கார்டனில் ஒருமையில் அழைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார் ஓ.பி.எஸ்.: ஆதங்கத்தைக் கொட்டும் ஆதரவாளர்கள்
* திமுகவுடன் எங்களுக்கு உறவு கிடையாது. சசிகலா தான் திமுகவுடன் உறவு வைத் திருந்தார். அதற்கு உதாரணம் மிடாஸ் நிறுவனம். திமுக ஆட்சிக் காலத்தில் மிடாஸ் நிறுவனத்திடம் இருந்து மது வாங்கினார்கள். ஜெயலலிதாவுக்கு மிடாஸ் நிறுவனம் பிடிக்காது. ஆனால், சசிகலா அந்த மிடாஸ் நிறுவனம் மூலம் பணம் சம்பாதித்தார். விவரம்: மிடாஸ் நிறுவனம் மூலம் சசிகலாதான் திமுகவுடன் உறவு வைத்திருந்தார்: முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் குற்றச்சாட்டு