Thursday, February 9, 2017

“அரசியலின் அசத்தல் சாணக்கியர் ஓ.பன்னீர்செல்வம்!” சிலாகிக்கிறார் எஸ்.வி.சேகர்


பிப்ரவரி 7-ம் தேதி இரவில் இருந்தே தமிழக அரசியல் களம் தகிக்க ஆரம்பித்திருக்கிறது. சசிகலா vs ஓ.பி.எஸ். என்று எதிரெதிர் துருவங்களாகப் பிரிந்துநின்று முஷ்டி முறுக்கிவரும் சூழலில், அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வும் பி.ஜே.பி மூத்த தலைவருமான எஸ்.வி.சேகரிடம் தமிழக அரசியல் நிலவரம் குறித்துப் பேசினோம்....

''தமிழக அரசியல் நிலவரம் அடுத்தகட்டமாக எப்படி நகரும் என நினைக்கிறீர்கள்?''

''ஓ.பி.எஸ் உறுதியான முடிவை எடுத்து அறிவித்துவிட்டார். அதனால், அடுத்தகட்டமாக சட்டசபையில், நடைபெறும் ஓட்டெடுப்புத்தான் இனிவரும் தமிழக அரசியலைத் தீர்மானிக்கப்போகிறது. அந்தவகையில், தற்போது அ.தி.மு.க-வில் மெஜாரிட்டி எனப்படும் எம்.எல்.ஏ-க்களின் வித்தியாச எண்ணிக்கை என்பது 20-தான். இந்த எண்ணிக்கை சட்டசபை ஓட்டெடுப்பின்போது மாறி வாக்களிப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது. அப்படி ஒரு சூழ்நிலை நேர்ந்தால் மறுபடியும் சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு மூன்று வார இடைவெளி கொடுக்க முடியும். அமைச்சர்கள் 30 பேரைத் தவிர, மற்ற எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் நல்லதொரு வாய்ப்பை எதிர்பார்த்து இருப்பவர்கள்தான்.

அ.தி.மு.க-வில் இருந்தவன் என்ற முறையில் அந்தக் கட்சியின் ராணுவக் கட்டுப்பாடு பற்றி எனக்குத் தெரியும். எந்த ஒரு விஷயம் என்றாலும், தலைமை ஏற்பதற்கு அவ்வளவு எளிதில் யாரும் வரமாட்டார்கள். 'நீங்கள் தலைமை ஏற்று நில்லுங்கள்; உங்களுக்குப் பக்கபலமாக நாங்கள் அணிவகுக்கிறோம்' என்று சொல்லக்கூடிய எம்.எல்.ஏ-க்கள்தான் அங்கே அதிகம். அதனால், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ-க்கள் ஓட்டளிக்கும் வாய்ப்புப் பிரகாசமாக உள்ளது.

இதற்கிடையில், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டு வேறு ஒரு வழியில் போராடிக் கொண்டிருக்கிறார் சசிகலா புஷ்பா. இப்படி தமிழக அரசியல் சரியான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது. இதில் எங்கேனும் கரணம் தப்பினால் மரணம் கதையாக தவறு ஏற்பட்டால் மட்டுமே, அது தி.மு.க-வுக்கான வாய்ப்பாக அமையும் என்று நினைக்கிறேன்.''

''ஓ.பன்னீர்செல்வத்துக்கு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு ஆதரவு அலை இருக்கிறது?''

''அரசியலைப் பொறுத்தவரை எப்போதுமே எதிர்ப்பு அரசியலுக்குத்தான் சக்தி அதிகம். அந்த வகையில், சசிகலாவுக்கு எதிரான மனநிலைதான் தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் மக்கள் மத்தியில் இருக்கிறது. இது தானாகவே ஓ.பி.எஸ்ஸுக்கான ஆதரவாக மாறிவிடும்.

ஜெ. சமாதியில் அமர்ந்து தியானம் செய்துவிட்டு பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, 'இதுவரை நடந்தவை' என்று ஓ.பி.எஸ் அறிவித்தது எல்லாமே அரசியலின் உச்சபட்ச சாணக்கியத்தனம். இனிமேல் இதற்கு எதிராக யார் எந்த அஸ்திரத்தை வீசினாலும் அது முனை மழுங்கிப்போன விஷயமாகத்தான் பார்க்கப்படும். ஏனெனில், 'அப்படியெல்லாம் இல்லை, இப்படியெல்லாம் இல்லை' என்பது மாதிரி விளக்கங்கள் கொடுப்பது, தற்காப்பாகத்தான் இருக்கமுடியுமே தவிர... அது எதிர்த் தாக்குதலாக இருக்காது.''



''சசிகலா மீது எந்த மாதிரியான எதிர்ப்பு அலை இருக்கிறது?''

''ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது யாரை எல்லாம் விலக்கி வைத்தாரோ, அவர்கள் எல்லோருமே அவர் இறந்தபிறகு உள்ளே வந்துவிட்டார்கள். பொதுவாக, இறந்துபோனவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுமானால், அவர்களது விருப்பங்களை நிறைவேற்றத்தான் குடும்பத்தினர் ஆசைப்படுவார்கள். நியாயமான குடும்பத்தைச் சேர்ந்தவர்களைச் சொல்கிறேன். ஆனால், இங்கே எல்லாமே ஏறுக்கு மாறாக நடந்திருக்கிறது. இதுதான் அந்தக் குடும்பத்தில் இருக்கிறவர்கள் மீதான சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது என்று மக்கள் நினைக்கிறார்கள்.''

''ஜெ. மரணத்தில் மர்மம் இருப்பதாக நினைக்கிறார்களா...?''

''மர்மங்கள் குறித்த விஷயங்களுக்குள் போக நான் விரும்பவில்லை. ஆனால், 'ஜெ. மரணத்தில் எதையோ மறைத்துவிட்டார்கள்' என்ற எண்ணம் மக்கள் மனதில் ஆழமாகவே பதிந்துவிட்டது. 'தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி' என்பார்கள். அதேபோல், இன்றைக்குத் திடுதிப்பென டாக்டர்கள் ஒன்றுகூடி பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார்கள். 'வெள்ளைக்காரன் பொய்சொல்ல மாட்டான்' என்பதுபோல யாரையோ கூட்டிவந்து பிரஸ்மீட் வைக்கிறார்கள். அதில், ஒரு டாக்டர் 'நோ என்று சொல்லுங்கள்' என்று எடுத்துக் கொடுக்கிறார். அதைக் கேட்டு அவரும் 'நோ' சொல்கிறார். 'இந்தச் சந்திப்பே, தற்செயலானதுதான்' என்கிறார்கள். அதற்கு முந்தைய நாளில்தான் ம.நடராசனும் அப்போலோவில் அட்மிட் ஆகிறார். அதுவும் தற்செயல்தானாம். எப்படி இவ்வளவு தற்செயல்கள் ஒன்றுபோல நடக்கின்றன என்று மக்கள் ஆச்சர்யப்படுகின்றனர். இதுமாதிரியான காட்சிகள் சினிமாவில் வந்தாலே, 'என்னப்பா இது பழைய சீனாக இருக்கிறதே' என்று எழுந்துபோய்விடுவார்கள்.

ஜெ.-வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த ஆவணங்களை எடுத்துக் காட்டினாலே போதுமானது. நான்கூட 3 டாக்டர் பட்டம் வாங்கி வைத்திருக்கிறேன்.... இந்த மாதிரி டாக்டர்களிடம் அல்லாமல், உண்மையாகவே டாக்டருக்குப் படித்து அரசியலில் இருக்கிற மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், தமிழிசை சவுந்தர்ராஜன் மாதிரியானவர்களிடம் அந்த ஆவணங்களைக் காட்டலாமே....?

ஜெ. மரண விஷயத்தில் இனிமேல் எத்தனை ஆவணங்களை எடுத்துக் காட்டினாலும் மக்கள் அதனை நம்பத் தயாராக இல்லை என்பதே உண்மை. ஏனெனில், சாதாரணமாக ஓர் இழவு வீட்டில், 16-ம் நாள் கழித்துத்தான் எந்தவொரு விஷயத்தையுமே யோசிக்கவே ஆரம்பிப்பார்கள். ஆனால், கோடிக்கணக்கிலான சொத்து, வாரிசு இல்லை, இருக்கும் வாரிசுகளையும் உள்ளே விடவில்லை என்று எவ்வளவோ பிரச்னைகள் இருந்த சூழ்நிலையிலும் உடனடியாக இரவோடு இரவாக மந்திரி சபை பதவி ஏற்கவைத்ததை எல்லாம் மக்கள் ஏற்றுக்கொள்ளவே இல்லை.''



''முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

'' 'வர்தா' புயலின்போது எல்லோருமே கதவு, ஜன்னல்களைச் சாத்திவிட்டு வீட்டுக்குள் பத்திரமாக இருந்துகொண்டோம். ஆனால், ஒரு முதல்வராக அவர் கோட்டையில் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார்; களத்தில் இறங்கி, பணிகளை விரைவுப்படுத்தினார்; கடலில் எண்ணெய் கொட்டிய இடத்தைப் பார்வையிட்டார்; சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து தமிழகத்துக்கு தண்ணீர் கேட்டுப் பெறுகிறார். ஜல்லிக்கட்டுக்காக சும்மா கடிதம் எழுதிக் கொண்டிருக்காமல், டெல்லிக்கே நேரடியாகப் போய் பிரதமரோடு உட்கார்ந்து பேசி, சட்டம் கொண்டுவருகிறார்.

'உங்களை மிக்சர் என்று கிண்டல் செய்கிறார்களே...?' என்று நிருபர்கள் கேட்டபோதுகூட, 'பொது வாழ்க்கை என்று வந்துவிட்டால், இதெல்லாம் வரத்தான் செய்யும்' என்று பக்குவமாகப் பதில் அளிக்கிறார். அடடா இவ்வளவு எளிமையான முதல்வரா என்ற ஆச்சர்யம் மேலிட மக்கள் அவரைப் பார்க்கிறார்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம்.... எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்தபோதே அ.தி.மு.க-வின் வாரிசாக, செங்கோல் கொடுத்து அடையாளப்படுத்தப்பட்டவர் ஜெயலலிதா. அதேபோல், ஜெயலலிதாவும் தான் இருந்த காலத்திலேயே தனக்கு அடுத்தபடியாக இரண்டு முறை முதல்வர் பதவியை ஓ.பி.எஸ்ஸுக்குக் கொடுத்து அடையாளப்படுத்திவிட்டார்.''

''தி.மு.க-தான் ஓ.பன்னீர்செல்வத்தைத் தூண்டிவிடுவதாக குற்றம்சாட்டப்படுகிறதே...?''

''எதிர்க்கட்சிக்காரனைப் பார்த்து சிரிக்கக் கூடாது. எழுந்து நின்று வணக்கம் செலுத்தக் கூடாது என்றெல்லாம் கடந்த 40 வருடங்களாக தமிழக அரசியலில் வெறுக்கப்பட்ட விஷயங்களை எல்லாம் மாற்றி புது நாகரிகத்தைக் கொண்டுவந்தவர் ஓ.பி.எஸ். அவ்வளவுதான். ஆனால், இது அந்தக் கட்சித் தலைமைக்குப் பிடிக்கவில்லை என்றால், மறுபடியும் ஒரு நாகரிகமற்ற கலாசாரத்தைக் கொண்டுவரத்தான் அந்தக் கட்சி நினைக்கிறது என்றே அர்த்தம். இது மக்களுக்குப் பிடிக்காது. மாற்றங்களை ஏற்பதுதான் நல்லது. 20 வருடங்களுக்கு முன்பு பெற்றோரே, 'என் பையனை அடிச்சுப் படிக்க வையுங்கள்' என்று வாத்தியாரிடம் சொல்வார்கள். ஆனால், இன்றைக்கு வாத்தியார் ஸ்கேலை தூக்கினாலே, பெற்றோர் போலீஸைக் கூட்டிக்கொண்டு பள்ளிக்கூடத்துக்கு வந்துவிடுவார்கள். காலம் மாறிவிட்டது சார்...''

- த.கதிரவன்

No comments:

Post a Comment

Girl who left home after a fight 7 years ago found

Girl who left home after a fight 7 years ago found  Abhay@timesofindia.com 11.01.2025 New Delhi : In 2018, a 17-year-old girl fought with he...