Thursday, February 9, 2017

இனோவா கார், ஆச்சர்ய பரிசுகள்...! எம்.எல்.ஏக்களுக்கு குதிரை பேரம் ஆரம்பம் #OPSvsSasikala, #VikatanExclusive


அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரம் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கார், நிலம், பணம் எனப் பரிசுகளை அள்ளிக் கொடுக்க கட்சியில் ஏற்பட்டுள்ள இரண்டு அதிகார மையங்கள் தரப்பிலிருந்து தூது விடப்பட்டுள்ளது.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா மீது பகிரங்கமான குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார். இதையடுத்து கட்சியில் இரண்டு அதிகார மையங்கள் ஏற்பட்டுள்ளன. முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதாக மாணிக்கம், சண்முகநாதன், மனோ ரஞ்சிதம், ஆறுக்குட்டி, மனோகரன், மைத்ரேயன் எம்.பி ஆகியோர் பகிரங்கமாக அறிவித்துள்ளனர். இதற்கிடையில் முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன், அவரது மகன் மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, நடிகர் பாக்யராஜ் என ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவு பட்டியல் நீள்கிறது.



அதே நேரத்தில் சசிகலாவுக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆதரவு இருப்பதை நிரூபிக்கும் வகையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அடுத்து கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கள் சொகுசு வேனில் அழைத்துச் செல்லப்பட்டனர். கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மட்டும் சசிகலாவுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மதியம் சென்னைக்கு வர உள்ளார். இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் ஆளுநரின் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவரை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா தரப்பினர் சந்திக்க உள்ளனர். இந்தச் சூழ்நிலையில் சொகுசு வேனில் அழைத்துச் செல்லப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் காட்டில் அதிர்ஷ்டக் காற்று வீசத் தொடங்கியிருக்கிறது.

இதுகுறித்து கட்சி வட்டாரங்கள் கூறுகையில், "எம்.எல்.ஏ.க்களுக்கு நெருக்கமானவர்களிடம் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகிய இரண்டு தரப்பிலிருந்தும் பேரம் பேசும் படலம் தொடங்கியிருக்கிறது. தென்மாவட்ட அ.தி.மு.க.வில் ஒருகாலத்தில் கோலோச்சிய வி.வி.ஐ.பி. ஒருவர் மூலம் இந்தப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு கார், நிலம், பணம் எனப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதற்காக இனோவா கிரிஸ்டா மற்றும் பார்ச்சூனர் கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு இதுவரை 42 எம்.எல்.ஏ.க்கள் கிரீன் சிக்னல் காட்டிவிட்டனர்.



சசிகலா தரப்பு கட்டுப்பாட்டில் அவர்கள் இருந்தாலும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளனர். இதுபோல சசிகலா தரப்பிலும் எம்.எல்.ஏ.க்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சொகுசு பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் விரும்புவதை கட்சித் தலைமை செய்து கொடுத்துள்ளது. அங்கேயும் விட்டமின் 'சி' தாராளமாக கொடுப்பதாகவும் சசிகலா தரப்பு உறுதி அளித்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் சின்னம்மாவுக்கு ஆதரவு கொடுக்கும்படி எம்.எல்.ஏ.க்களிடம் வாக்குறுதி பெற்ற சசிகலா தரப்பு, ஆளுநரை சந்திக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகிய இரண்டு தரப்பிடமிருந்தும் குதிரை பேரத்துக்கான தூதுகள் வரத் தொடங்கி இருப்பதால் எம்.எல்.ஏ.க்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்" என்றனர்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிய நிலையில் அதை சசிகலா தரப்பு முற்றிலும் மறுத்துள்ளது. இதுகுறித்து அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சுதந்திரமாக அங்கு இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பேசியவர்கள், "மக்களின் ஆதரவும், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் எந்த எம்.எல்.ஏ.க்களிடமும் பேரம் பேசவில்லை. கட்சித் தலைமை எம்.எல்.ஏ.க்களை ரகசிய இடத்தில் மறைத்து வைத்துள்ளது. எம்.எல்.ஏ.க்களை சுதந்திரமாக செயல்படவிட்டால் நிச்சயம் அவர்களது ஆதரவு எங்களுக்குக் கிடைக்கும். சிறை வைக்கப்பட்டாலும் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது. தற்போது ஆளுநரை சந்திப்பது, அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை நடந்து வருகிறது" என்றனர்.

மதில் மேல் பூனையாக எம்.எல்.ஏ.க்களின் நிலைப்பாடு இருப்பதாக உள்விவரம் தெரிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

-எஸ்.மகேஷ்

No comments:

Post a Comment

Girl who left home after a fight 7 years ago found

Girl who left home after a fight 7 years ago found  Abhay@timesofindia.com 11.01.2025 New Delhi : In 2018, a 17-year-old girl fought with he...