Thursday, February 9, 2017

பிணைக் கைதிகளாக எம்.எல்.ஏ.க்கள்! ஆளுநருக்கு, மு.க.ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்!


பிணைக் கைதிகளாகச் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரின் உண்மையான ஆதரவு யாருக்கு என்பது வெளிப்படையாகத் தெரியாத நிலை நிலவுகிறது என்று தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர், மாநிலத்தில் சட்டபூர்வமான ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய கடமைப் பொறுப்பில் இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தின் அரசியல் சூழல் நிலையற்ற தன்மையுடனும் ஜனநாயக மாண்புகளுக்கு எதிராகவும் உள்ள நிலையில், பொறுப்பு ஆளுநரின் வருகையும் அவர் மேற்கொள்ளப் போகும் நடவடிக்கைகளும் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கின்றன.

காபந்து முதலமைச்சராக நீடிக்கும் ஓ.பன்னீர்செல்வம், தன்னிடம் கட்டாயப்படுத்தி ராஜினாமாக் கடிதம் வாங்கினார்கள் என தனது கட்சித்தலைமையின் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனார். ஆனால் அவர் ராஜினாமா ஆளுநரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. இந்நிலையில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது எந்தத் தலைமையின் கீழ் இருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர்களை சொகுசு பேருந்துகளில் ஏற்றிச் சென்று, நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுதந்திர ஜனநாயக நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் இப்படி ‘பிணைக் கைதி’கள் போல சிறைப்படுத்தப்பட்டிருப்பது மக்களாட்சியின் மாண்பை சிதைக்கின்ற செயலாக இருக்கிறது. ஆளுங்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்ற ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன், பின்னர் காபந்து முதலமைச்சரை சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். அப்படியானால், உண்மையாகவே இவர்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என்பது சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. பிணைக் கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ள ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரின் உண்மையான ஆதரவு யாருக்கு என்பது வெளிப்படையாகத் தெரியாத நிலை நிலவுகிறது.

இத்தகைய சூழலில், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் மாநிலத்தில் நிலையான-சுதந்திரமான-சட்டபூர்வமான வழியில் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய கடமைப் பொறுப்பில் இருக்கிறார். மக்களின் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டத்திற்குப் புறம்பான நிர்பந்தங்களாலும் மிரட்டல்களாலும் ஏதேனும் ஒரு பக்கத்திற்கு செல்கிறார்களா, இதற்கான பலன்கள்-வாக்குறுதிகள் தரப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் பல்வேறு செய்திகள் உலா வருகின்றன. ஆகவே ஆளுநர், அரசியல் சட்டம் மற்றும் எஸ்.ஆர் பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் வழிகாட்டுதல் அடிப்படையிலும் உரிய முடிவுகளை எடுத்து சுதந்திரமான சட்டமன்ற வாக்கெடுப்பை உறுதி செய்து ஜனநாயக மாண்புகளைக் காத்திடுமாறு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Girl who left home after a fight 7 years ago found

Girl who left home after a fight 7 years ago found  Abhay@timesofindia.com 11.01.2025 New Delhi : In 2018, a 17-year-old girl fought with he...