Thursday, February 9, 2017

மனிதர்களும் விலங்குகளும்

By சா. கந்தசாமி  |   Published on : 09th February 2017 01:21 AM  | 
kandasamy
உலகத்தில் வாழும் விலங்குகளில் ஒருவகைதான் மனிதர்கள். அவர்கள்தான் இளைய விலங்குகள். அதாவது பரிணாம வளர்ச்சியில் கடைசியில் இருக்கிறார்கள். ஆனால் மற்ற எந்த விலங்கிற்கும் இல்லாத அறிவு பெற்று இருக்கிறார்கள். சிந்திக்கவும், செயல்படுத்தவும், பேசவும், எழுதவும், நடந்ததையெல்லாம் நினைவு கூர்ந்து சொல்லவும் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆயுதங்கள் கொண்டு வேட்டையாடவும், நிலத்தில் நீர் பாய்ச்சி தானியங்கள் பயிரிடவும் அறிந்திருக்கிறார்கள். விலங்குகள், பறவைகளின் வாழ்விடமான வனங்களை அழித்து விவசாய நிலங்களாக்கி விட்டார்கள். அதனால் விலங்குகள் உணவு தேடி, தண்ணீர் குடிக்க ஊருக்குள் வருகின்றன. எங்கள் விளைநிலங்களை விலங்குகள் நாசப்படுத்திவிட்டன, அவற்றின் அட்டகாசம் பொறுக்க முடியவில்லை என்று புலம்புகிறார்கள்.
உண்மையில் வன விலங்குகளின் இருப்பிடத்திற்குள் புகுந்து அட்டகாசம் புரிவது மனிதர்கள்தான். எல்லா விலங்குகளும் தங்களது பல், கால், வால்களால்தான் வேட்டையாடுகின்றன. ஆனால் மனிதர்கள்தான் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு போய் வேட்டையாடுகிறார்கள். வலை வீசி பறவைகளையும் விலங்குகளையும் பிடிக்கிறார்கள்.
மனிதர்கள் தானியங்கள், ஊண் உண்டு பசியாற்றிக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் உடல் உறுப்புகள் எதைத் தின்றாலும் ஜீரணிக்கக் கூடியதாக இருக்கின்றன. எனவேதான் பலவிதமான விலங்குகளையும் பறவைகளையும், மீன்களையும் பிடித்துத் தின்று கொழுத்துப் போயிருக்கிறார்கள்.
கறியின் சுவையும், எலும்புகள் கடிப்பதில் உள்ள இன்பமும், கவிச்சி நாற்றமும் கறி தின்ன வைத்துக் கொண்டே இருக்கின்றன. எனவேதான் பறவைகளின் முட்டைகளில் இருந்து, ஆட்டின் தலை வரை எல்லாவற்றையும் தின்று வருகிறார்கள்.
நஞ்சு கொண்ட பாம்புகளைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. பாம்பின் நஞ்சு கொண்ட பையை வெட்டியெறிந்து விட்டு தோலை உறித்து சதையைத் தீயில் நெய் சொட்டச் சொட்ட சுட்டுத் தின்கிறார்கள்.
மனிதர்கள் தின்னத் தகாதது என்று ஒதுக்கிய விலங்குகோ, பறவையோ ஒன்றுகூட இல்லை. உடன் வாழும் சகோதர மனிதர்களைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னால் சீனா சென்று வந்த மார்கோ போலோ அங்கே மனிதக் கறி விற்கப்பட்டதாக எழுதி வைத்து இருக்கிறார்.
அன்பு, பாசம், இரக்கம், கருணை கொண்டவர்கள் மனிதர்கள் என்று எத்தனைதான் சொன்னாலும், அவர்களிடம் ஆதி குணங்களான கொடூரமான செயற்பாடுகள், வேட்டையாடுதல், பறவைகளைச் சுட்டுக் கொல்வது போன்ற குணங்கள் மாறவே இல்லை.
உணவிற்காக விலங்குகள், பறவைகள் கொல்லப்படுவது போல வே அவற்றின் நிறம், இறகுகளின் வனப்பு, பல், நகம், முடி ஆகியவற்றுக்காகவும், மருத்துவத்திற்கென்றும் மந்திர சக்தி பெற்றவை என்பதற்காகவும் வேட்டையாடப்பட்டு வருகின்றன. அது நெடுங்காலமாக நடந்து வரும் நிகழ்வாகவே இருந்து வருகிறது.
பூமி என்பது பல்லுயிர்களும் இணை ந்து வாழும் இடம். அது ஒற்றை உயிராகிய மனிதர்கள் மட்டுமே வாழத்தக்கது இல்லை. மனிதர்கள் தங்களைச் சுற்றி இருக்கும் விலங்குகள், பறவைகள், மீன்களைப் பசியாற்றிக் கொள்ளவும், ஆடம்பர வாழ்க்கைக்கு வேண்டியது என்றும் கொன்றுவிட்டால் வாழ்க்கை என்பதே தரமற்றதாகிவிடும்.
அகவும் மயிலும், கூவும் குயிலும் பல வண்ணங்கள் கொண்ட பறவைகளும், வண்ணத்துப்பூச்சிகளும், அழகிய நிறங் கொண்ட பாயும் புலியும், பனி பிரதேசத்து வெண் முடி கொண்ட கரடியும், பெரிய யானைகளும், வேகமாக ஓடும் குதிரைகளும் பால் கொடுக்கும் பசுக்களும், ஏர் உழும் காளைகளும் வீடு காக்கும் உற்ற நண்பனாகிய நாய்களும் இல்லாவிட்டால் மனித வாழ்க்கை என்பதே அர்த்தமற்றதாகிவிடும். பல்லுயிர் வாழ்க்கை என்ற சமன்பாடுதான் வாழ்க்கையென்பதை அர்த்தமுள்ளதாக்குகிறது.
உலகத்தில் பல விலங்குகள், பறவை இனங்கள், மீன் வகைகள் இப்போது இல்லை. மனிதர்களால் கொல்லப்பட்டுவிட்டன. தன் தேவை என்பதுதான் மனிதர்களின் சித்தாந்தம். பல்லுயிர் வாழ்க்கை என்பது மனிதர்கள் அனுமதிக்கும் வரையில்தான்.
மனிதர்கள், மாடுகள், நாய்கள், பூனைகள், கிளிகள், யானைகள் என்று பலவற்றையும் பிடித்து செல்லப் பிராணிகளாக வளர்த்து வருகிறார்கள். மாடுகள் பாலுக்கும், உழவிற்கும், வண்டிக்கும் பயன்படுத்தப்பட்டன. நாய்கள் நல்ல தோழனாக இருக்கின்றன. குதிரைகள் வேகமாக ஓடுவதால் போர்களுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன.
மகா அலெக்சாண்டர் முப்பதாயிரம் பேர் கொண்ட குதிரைப் படையுடன் உலகம் முழுவதையும் வென்று ஆட்சி செய்யப் புறப்பட்டான். அக்பர் பெரும் யானைப் படை வைத்துக் கொண்டிருந்தார்.
நவீன காலத்தில் விலங்குகளுக்கு போரில் இடம் இல்லாமல் போய்விட்டது. ஆனால் விளையாட்டில் விலங்குகள், பறவைகள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. இது காட்டுமிராண்டித்தனம். நாகரிக மனிதன் செய்யக்கூடிய காரியம் இல்லை.
"அவற்றுக்குப் பேச வாய் இல்லை என்பதால் வதைக்க முடியாது. அவற்றின் சார்பாகப் பேச நாங்கள் இருக்கிறோம்' என்று சொல்லிக் கொண்டு உலகம் முழுவதிலும் பல தன்னார்வ நிறுவனங்கள் தோன்றியுள்ளன. அவை இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, கனடா ஆகிய நாடுகளில் இருந்து பெரும் பணம் வாங்குகின்றன.
1980-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இன்கிரிடு என்ற பெண்மணி அலெக்ஸ் பச்சிகோ என்பவரோடு இணைந்து, People for the Ethical Treatment of Animal  - என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அதுதான் பீட்டா. விலங்குகள் தின்பதற்கு இல்லை. அதன் மென் முடிகள், தோல்கள் அணிவதற்கு இல்லை. பரிசோதனைகள், விளையாட்டிற்கு இல்லை என்று கூறினார்.
இவையெல்லாம் இந்தியர்கள் நெடுங்காலமாக அறிந்ததுதான். ஊண் உண்பதை அடிப்படையிலேயே மகாவீரரின் சமண சமயம் எதிர்த்து வருகிறது. அது சமண சமயத்தின் வளர்ச்சியைப் பாதித்து விடவில்லை.
பகவான் புத்தர் உயிர்ப் பலி என்பதற்கும், ஊண் உண்பது என்பதற்கும் எதிராகவே இருந்தார். அசோக சக்ரவர்த்தி, எந்த உயிரையும் கொல்லக் கூடாது என்று கல்வெட்டுக்களில் பொறித்து வைத்தார்.
திருவள்ளுவர் ஊண் உண்பதையும், கள் குடிப்பதையும் கடுமையாக எதிர்த்து வந்தார். திருக்குறளில் புலால் மறுத்தல் பற்றி எழுதி வைத்து இருக்கிறார்.
ஐம்பதாண்டுகளுக்கு முன்னால் கலாக்ஷேத்ராவை நிறுவிய ருக்மிணி தேவி அருண்டேல் விலங்குகளின் நலம் காக்க, மருத்துவம் பார்க்க "புளுகிராஸ்' என்னும் காப்பகத்தை திருவான்மியூரில் நிறுவினார். தெருவில் திரியும் மாடுகள், விபத்துக்கு ஆளான நாய்கள், பூனைகளை புளுகிராஸ் எடுத்து வந்து பாதுகாத்தது.
இந்தியாவில் விலங்குகளின் நலம் காக்க சட்டபூர்வமான ஒரு நலவாரியம் அவசியம் என்று மத்திய அரசுக்குத் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்.
1962-ஆம் ஆண்டில் மத்திய அரசு விலங்குகள் நல வாரியம் அமைத்தது. ருக்மிணி தேவி அருண்டேல் அதன் முதல் தலைவியானார். அவர் விலங்குகள் நலத்தோடு இறைச்சி உண்பதையும் மக்கள் தவிர்க்க வேண்டும் என்று பிரசாரம் செய்து வந்தார். 24 ஆண்டுகள் விலங்குகள் நல வாரியத்தின் தலைவியாக இருந்தார்.
விலங்குகள் நல வாரியம் சுற்றுப்புறச் சூழல், வன அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. சமூகத்தின் பல நிலைகளிலும் இருக்கு 21 பேர் உறுப்பினர்கள். தலைவர் கால்நடை மருத்துவர்.
2000-ஆம் ஆண்டில் அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்ட தன்னார்வ அமைப்பான பீட்டா இந்தியாவில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. இந்தியாவில் 31 லட்சம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றில் பீட்டா ஒன்று. ஆனால் பீட்டா, விளம்பரத்தின் மூலமாகவும் - பரிசுகள், பாராட்டு விழாக்கள் நடத்தி தன்னை முதன்மைப்படுத்திக் கொண்டது.
ஐரோப்பிய காளை மாட்டு சண்டையோடு தமிழக ஜல்லிக்கட்டை சேர்த்து கொண்டுவிட்டது. அதற்காக உச்சநீதிமன்றம் சென்று ஜல்லிக்கட்டு மிருகங்களை வதைக்கிறது. அது நாகரிக சமூகத்தின் விளையாட்டு கிடையாது. எனவே ஜல்லிக்கட்டை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்று வழக்குத் தொடுத்தது.
உச்சநீதிமன்றம் இந்தியா முழுவதும் காளை மாடுகள், எருமை மாடுகள் வைத்து விளையாடும் எல்லா பாரம்பரிய விளையாட்டுகளையும் தடை செய்து விட்டது. மேல்முறையீடு தீர்ப்பு வராமல் இருந்தது.
தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்கள் எங்களின் பாரம்பரிய ஏறு தழுவுதல் விளையாட்டை நாங்கள் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று பெரும் போராட்டம் நடத்தினர். மாநில அரசு ஆதரவு அளித்தது.
ஜல்லிக்கட்டுப் போராட்டக்காரர்கள் பீட்டாவையும் தடை செய்ய வேண்டுமென்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
விலங்குகள் மனிதர்களின் உற்றத் தோழனாகவும், உதவி செய்யும் பணியாளனுமாகவும், பசியாற்றும் ஜீவனுமாகவும் இருக்கின்றன. பசுவை "கோமாதா' என்று கொண்டாடுவது மரபு.
மனிதர்கள் விலங்குகளை வைத்துக் கொண்டு விளையாடுவதால் அவற்றை வதைக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அதுபோலவே ஊண் உண்கிறவர்கள் கெட்டவர்கள், உண்ணாதவர்கள் நல்லவர்கள் என்பதும் இல்லை. ஒரே குடும்பத்தில் எல்லோரும் நன்றாகவே வாழ்கிறார்கள். அதுதான் குடும்பம்.
இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் பகவான் புத்தர் சொன்னார்: "தின்னும் உணவால் யாரும் புனிதமடைய மாட்டார்கள்'.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
சா. கந்தசாமி

No comments:

Post a Comment

Girl who left home after a fight 7 years ago found

Girl who left home after a fight 7 years ago found  Abhay@timesofindia.com 11.01.2025 New Delhi : In 2018, a 17-year-old girl fought with he...