Thursday, February 9, 2017

ஆளுநர் மாளிகை அரசியல்!

By ஆசிரியர்  |   Published on : 09th February 2017 01:22 AM  |  
மாநில ஆளுநர் பதவியை தீயணைப்பு வாகனத்துடன் ஒப்பிட்டு, மூதறிஞர் ராஜாஜி கருத்துத் தெரிவித்திருக்கிறார். "எங்கேயாவது தீப்பிடித்தால் மட்டுமே தீயணைப்பு வாகனம் செயல்படும். மீதி நேரங்களில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான நேரங்களில் செயல்படாமல் இருக்கிறதே என்பதற்காகத் தீயணைப்பு வாகனம் தேவையில்லை என்று கூறிவிட முடியாது. ஆளுநர் பதவியும் அப்படித்தான். பிரச்னை ஏற்பட்டால்தான் ஆளுநர் செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதற்காக ஆளுநர் பதவி தேவையில்லை என்று முடிவெடுத்துவிட முடியாது' என்பதுதான் ராஜாஜி தந்த விளக்கம்.
இங்கே தமிழகமே அசாதாரண அரசியல் குழப்பத்தில் சிக்கித் தீப்பற்றி எரிகிறது. தமிழகத்துக்குப் பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ் சாவகாசமாக தில்லியில் முக்கியஸ்தர்களைக் கலந்தாலோசித்துவிட்டு, சென்னைக்கே வராமல் மும்பையில் கவலையே படாமல் தங்கி இருக்கிறார். ராஜாஜி கூறியதுபோல, தீப்பிடித்தால் விரைந்து வருகிற தீயணைப்பு வாகனமாக இல்லாமல், வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிற வாகனமாகக் காட்சி அளிக்கிறது பொறுப்பு ஆளுநரின் செயல்பாடு.
தமிழகத்துக்கு கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவர்கூட இல்லை. ஏழு கோடிக்கும் அதிகமான மக்களை உடைய தமிழகத்திற்குக் கடந்த ஐந்து மாதமாக ஒரு முழுநேர ஆளுநரை நியமிக்க வேண்டும் என்கிற நினைப்பாவது இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. முழுநேர ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தால் தமிழகத்தின் நிர்வாகம் இப்படி ஸ்தம்பிக்கும் நிலைமை ஏற்பட்டிருக்காது. முந்தைய ஆளுநர் ரோசய்யா ஓய்வு பெறுகிறார் என்று தெரிந்தும் வேறு ஆளுநரை நியமிக்காததற்கு காரணம் அசிரத்தையா அல்லது தமிழகத்தின் மீதான அக்கறையின்மையா?
தமிழகத்தின் முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்புகிறார். ஆளுநர் அதைப் பெற்றுக்கொண்டு அடுத்த ஏற்பாடு செய்யப்படும்வரை தொடரும்படி சொல்லிவிட்டு, எந்தவொரு பரபரப்பும் இல்லாமல் மும்பையில் தங்கியிருக்கிறார். அவர் எப்போது சென்னை வருவார் என்பதுகூட அறிவிக்கப்படவில்லை. ஆளுநரின் இந்தப் போக்கு வேடிக்கையாகவும், வினோதமாகவும் இருக்கிறது.
முதல்வர் ஒருவர் பதவி விலகினால், உடனடியாக அடுத்த அமைச்சரவை அமைகிற சாத்தியம் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து, பொறுப்பை அடுத்த முதல்வரிடம் ஒப்படைப்பதுதான் ஆளுநரின் மிகவும் முக்கியமான கடமை. அதைச் செய்யாமல் ஆளுநர் காலம் தாழ்த்தும்போது இதற்குப் பின்னால் இருப்பது பொறுப்பற்றதனம் அல்ல, அரசியலும்கூட என்று தோன்றுகிறது.
சசிகலா நல்லவரா, கெட்டவரா, தகுதியானவரா, தகுதி இல்லாதவரா என்பதெல்லாம் ஓர் ஆளுநரின் அடிப்படைக் கேள்வியாக இருக்க முடியாது. அவர் மீது நம்பிக்கையில்லாவிட்டால் சட்டப்பேரவை கட்சி உறுப்பினர்களை வேறு ஒரு நபரை தேர்வு செய்யக் கோரலாம், அவ்வளவே.
பெரும்பாலான சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு ஒருவருக்கு இருக்கிறதா என்பதுதான், அமைச்சரவை அமைக்க ஒருவரை அழைக்கும்போது ஆளுநர் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய அடிப்படைத் தகுதி. அவரது பெரும்பான்மையை உடனடியாக சட்டப்பேரவையில் நிரூபிக்கச் சொல்வதுதான் வழக்கம்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் சசிகலாவும் இருக்கிறார் என்பது உண்மை. உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு எந்த நேரத்திலும் வெளிவரலாம் என்பதும் உண்மை. அதற்கும் சட்டப்பேரவை அ.தி.மு.க. உறுப்பினர்களால் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் ஒருவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்கும் தொடர்பு ஏற்படுத்துவது சரியாகப் படவில்லை.
சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டுத் தீர்ப்பு வரும்வரை சசிகலாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூறுவாரென்றால், எந்த அடிப்
படையில் கடந்த மே மாதம் முந்தைய ஆளுநர் ரோசய்யா முதல்வராக ஜெயலலிதாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்? அந்த வழக்கில் முதல் குற்றவாளியே ஜெயலலிதாதானே!
உச்சநீதிமன்றத்தில் இருப்பது மேல்முறையீட்டு வழக்குதான். ஆனால், 2001-இல் ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கு மட்டுமல்ல, ஏனைய பல வழக்குகளும் நடைபெற்று வந்தன.
அந்த நிலையில்கூட, சட்டப்பேரவையில் பெரும்பான்மை இருக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காக அன்றைய ஆளுநர் பாத்திமா பீவீயால் அவர் முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டிருக்கிறார்.
ஓ. பன்னீர்செல்வத்தின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்ட கையோடு ஆளுநர் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைத்திருந்தால் இன்றைய அரசியல் நிலையற்றதன்மை ஏற்பட்டிருக்காது. ஆனால், ஆளுநர் எதிர்பார்ப்பது அதுவல்ல என்று தோன்றுகிறது. உத்தரகாண்டிலும், அருணாசலப் பிரதேசத்திலும் அந்தந்த மாநிலத்தின் ஆளுநர்களாக மத்திய பா.ஜ.க. அரசு நியமித்திருப்பவர்கள் நடந்து கொள்வதைப் போலவே, தமிழகத்திலும் ஆளுநர் மாளிகை அரசியல் நடத்துவது என்கிற முயற்சியில் மத்திய ஆளும்கட்சி இறங்கி இருக்கிறதோ என்கிற சந்தேகம் ஏற்படுகிறது.
சசிகலாவோ, ஓ. பன்னீர்செல்வமோ யார் முதல்வர் என்பதல்ல பிரச்னை. யாராக இருந்தாலும் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அதற்கு ஆளுநர் வழிகோல வேண்டும். முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெறாமல் நிர்வாகம் ஸ்தம்பித்து கிடப்பதற்கு ஆளுநரே துணை போவது விசித்திரமாக இருக்கிறது. ஆளுநர் மாளிகையில் இருந்து அரசியல் நடத்துவது ஏற்புடையதல்ல!

No comments:

Post a Comment

Girl who left home after a fight 7 years ago found

Girl who left home after a fight 7 years ago found  Abhay@timesofindia.com 11.01.2025 New Delhi : In 2018, a 17-year-old girl fought with he...