Thursday, February 9, 2017

வீட்டிலிருந்து புறப்படும் முன் இதெல்லாம் செய்ய மறக்காதீர்கள் பெண்களே!


"எங்காவது புறப்படுவதுபோதெல்லாம் கடிகாரம் வேகமாக சுற்றுவதுபோல இருக்கும். என்னது ஒன்பது மணியாடுச்சா" என மைண்ட் வாய்ஸில் அல்ல... சத்தமாகவே சொல்லிக்கொண்டு, அவசர அவசரமாக டிபனைச் சாப்பிட்டுவிட்டு, வீட்டை விட்டுகிளம்பி பஸ் ஸ்டாப்புக்கு கிட்டத்தட்ட ஓடிவோம். நெருக்கியடித்து பஸ்ஸில் ஏறி, டிக்கெட் எடுக்கும்போதுதான் 'வீட்டை ஒழுங்காக பூட்டினோமா' என்கிற சந்தேகம் வரும். பிறகு, சந்தேகங்கள் ஒவ்வொன்றாக அதிகரித்துவிடும். அது மெல்ல பதட்டத்தை அதிகரிக்கச் செய்து, அடுத்த பஸ் ஸ்டாப்பில் இறங்கி, வீட்டை நோக்கி செல்ல ஆரம்பித்துவிடுவோம். இது அடிக்கடி நடந்தால் அலுவகலமோ வெளியிலோ செல்லும்போதெல்லாம் டென்ஷன் தான். அதனால் வீட்டிலிருந்து புறப்படும் முன் சிலவற்றை மறக்காமல் செய்யப் பழகலாமே பெண்களே! (அது சரி வீடு என்றதுமே பெண்களுக்குத்தான் டிப்ஸ் சொல்வீர்களா என்று கோபப்பட வேண்டாம்.)



கேஸில் கவனம்:

சிலிண்டரிலிருந்து கேஸ் அடுப்புக்குச் செல்லும் ரெகுலேட்டரை ஆஃப் பண்ண வேண்டும். வழக்கமாக எல்லோரும் சொல்வதுதான். ஆனால் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால், சேதமும் அதிகமாகும் அல்லவா. அதனால் சமையல் வேலைகள் முடிந்ததும் மறக்காமல் ரெகுலேட்டரை ஆஃப் செய்துவிடுங்கள். ஒருவேளை அப்படியே செய்தாலும் வீட்டிலிருந்து புறப்படும் முன் அவசியம் அதை செக் பண்ணத் தவறாதீர்கள்.

சொட்டுச் சொட்டாக:

பாத்ரூம், கழிவறை, சமையலறை உள்ளிட்ட இடங்களில் இருக்கும் தண்ணீர் டேப்களை நீர் சொட்டாமல் மூடப் பட்டிருக்கிறதா எனப் பாருங்கள். ஏனெனில் ஒவ்வொரு சொட்டாக சொட்டினால் நீங்கள் திரும்ப வருவதற்குள் வாளிக் கணக்கில் நீர் விரயமாயிருக்கும். நீரைச் சேமிப்பது நமது கடமையும் அல்லவா.



மூடி முக்கியம்:

சமையல் செய்யும்போது சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பாத்திரங்களை அவசரத்தில் மூடாமல் மறந்திருப்பீர்கள். அதனால் சமையல் முடிந்த பிறகோ, வீட்டிலிருந்து புறப்படும் முன்போ மறக்காமல் செக் பண்ணாவிட்டால், எறும்பு, பூச்சிகள் புகுந்து பொருட்கள் கெட்டுவிடும்.

வாசம் வீசட்டும் ப்ரிட்ஜ்: பலரின் வீட்டில் குடும்ப உறுப்பினர் போல ஆகி விட்டது ப்ரிட்ஜ். ஆனால், அது கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது என்பதற்காக சில பொருட்களை, பல நாட்களாக அதிலே வைத்திருப்பீர்கள். அதிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியிருக்கும். அதை குப்பையில் எறிய வேண்டும் என நினைத்து மறந்திருப்பீர்கள். ஆனால் வெளியே சென்று வர பல மணிநேரமாகும் எனில் அதை ப்ரிட்ஜைத் திறந்து ஒருமுறை செக் பண்ணிவிடுவதே நல்லது.

சாவி:

பீரோவைத் திறந்திருப்போம் ஏதோ நினைவில் சாவியை பீரோவிலேயே வைத்திருப்பீர்கள். பிறகு மற்ற வேலைகளில் மூழ்கியிருப்பீர்கள். அது இயல்புதான். ஆனால், வெளியே புறப்படும்போது, அப்படி இருப்பது நல்லதல்ல. அதனால் மறக்காமல் அதைப் பத்திரப்படுத்துங்கள்.

துணிகள் பத்திரம்:

புறப்படும் முன் வீட்டுக்குள் ஏதேனும் மறந்துவிட்டோமா என்று சுற்றிப் பார்ப்பதுடன் வெளியே வந்துவிடுவீர்கள். ஆனால் வீட்டின் வேறு பகுதியில் துணியைக் காயப்போட்டிருந்தால், அதுவும் வெளியிருந்து யாரேனும் எடுக்கும் வசதியில் இருந்தால் அவசியம் அதை எடுத்துவிடுங்கள். அது, உங்களுக்கோ வீட்டினருக்கோ மிக விருப்பமான உடைகளாக கூடவே இருக்கக்கூடும்.



ஸிவிட்ச்:

அயர்ன் பண்ணும்போதோ, மிக்ஸியில், கிரைண்டரில் அரைக்கும்போதோ, மின்சாரம் போயிருக்கும் ஏதோ நினைவில் ஸ்விட்சை ஆஃப் பண்ண மறந்திருப்பீர்கள். வீட்டிலிருந்து புறப்படும் வரை மின்சாரம் வந்திருக்காது. அதனால் அப்படியே விட்டுவிட்டுப் போய்விடுவீர்கள். அதனால் புறப்படும் முன் ஸ்விட்ச் போர்டு அனைத்தையும் செக் பண்ண மறக்காதீர்கள். இது போன்ற மின் சாதனப் பொருட்களில் நீர் பட்டு அல்லது நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தாமல் திரும்பவும் பயன்படுத்தும்போது என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

பூட்டு:

கடைசியாக, வாசல்கதவைப் பூட்டும்போது, பதட்டத்தில் சரியாக பூட்டாமல் விடுவோர் அதிகம். அதனால், அந்த பத்து நொடிகளை மிகவும் நிதானமாக இருப்பது பெரும் நிம்மதியைக் கொடுக்கும். அதோடு சாவியை உங்களின் ஹேண்ட் பேக்கில் பத்திரப்படுத்தவும் மறக்காதீர்கள்.
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

- வி.எஸ்.சரவணன்.

No comments:

Post a Comment

Girl who left home after a fight 7 years ago found

Girl who left home after a fight 7 years ago found  Abhay@timesofindia.com 11.01.2025 New Delhi : In 2018, a 17-year-old girl fought with he...