சட்டப்படியான பணிகளைக்கூட செய்ய முடியாத நிலையில் அரசு இயந்திரம்: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை
விதிமீறல் கட்டிடத்துக்கு சீல் வைக்க முடியாமல் சட்டப்படியான பணிகளைக் கூட மேற்கொள்ள முடியாத நிலையில் அரசு இயந்திரம் உள்ளது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) உறுப்பினர் செயலரான ஏ.கார்த்திக் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கூறியிருப்பதாவது:
சென்னை கொண்டித்தோப்பு சர்க்கரைத் தெருவில் வசிக்கும் கதீஜா உம்மாள் தன்னுடைய வீட்டை சட்டத்துக்கு புறம்பாக விதிமுறைகளை மீறி கட்டி யிருந்தார். இதையடுத்து அந்த வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அவரது வீட்டுக்கு வைத்த சீலை அகற்ற வேண்டும் என்றும். மனுதாரர் தனது விதிமீறலை சரி செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு சரிசெய்யவில்லை என்றால் மீண்டும் அந்த வீட்டுக்கு சீல் வைக்கலாம் என்றும் கடந்த 2014-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதன்படி சீல் அகற்றப்பட்டது.
இதன் பின்னர், சிஎம்டிஏ அதிகாரிகள் அந்த கட்டிடத்தை மீண்டும் ஆய்வு செய்தபோது விதிமீறல் பகுதி சரி செய்யப்படவில்லை. இதை யடுத்து போலீஸ் உதவியுடன் கடந்த 2015 ஜூலை 14-ல் அந்த கட்டிடத்துக்கு சீல் வைக்கச் சென்ற போது, கதீஜா உம்மாளும் அவரது தரப்பினரும் அதிகாரிகளை சீல் வைக்க விடாமல் தடுத்து அனுப்பிவிட்டனர்.
எனவே உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவிடாமல் தடுத்த சுபத்கான், கதீஜா உம்மாள் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண் டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அதன் பிறகு நீதிபதிகள், ‘‘விதிமீறல் கட்டிடத்துக்கு சீல் வைக்க முடியாமல் சிஎம்டிஏ அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருப்பது வேதனைக்குரியது. உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சரியாக புரிந்துகொண்டு அதிகாரிகள் அந்த வீட்டுக்கு சீல் வைக்க முயன்றும் அவர்களால் முடியவில்லை.
இதை பார்க்கும்போது சட்டப் படியான பணிகளைக்கூட அதிகாரி கள் மேற்கொள்ள முடியாத நிலையில் அரசு இயந்திரம் உள்ளது என்பது தெளிவாகிறது. போலீஸ் பாதுகாப்புடன் சென்று சிஎம்டிஏ அதிகாரிகள் அந்த வீட்டுக்கு சீல் வைக்க வேண்டும். இது அதிகாரிகளின் வேலை. இதற்காக நீதிமன்றத்தை நாடக் கூடாது. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment