விவசாயிகளுக்கு ரூ.2,247 கோடி நிவாரண உதவித்தொகை! முதல்வர் பழனிசாமி அறிவிப்புவிவசாயிகளுக்கு 2,247 கோடி ரூபாய் பயிர் இழப்பு வறட்சி நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் அக்டோபர் 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம்தேதி வரை வடகிழக்கு பருவமழை காலமாகும். இந்த பருவமழை காலத்தில் சராசரியாக 440 மி.மீ. மழை கிடைக்கப்பெறும். ஆனால், நடப்பு ஆண்டில் 168.03 மி.மீ, மழையே கிடைக்கப்பெற்றுள்ளது. கடந்த 140 ஆண்டுகளில் இது போன்ற குறைந்த மழையளவை தமிழ்நாடு சந்தித்தில்லை. இதனால் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியை சமாளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.
மாநிலம் முழுவதும் நேரடி பயிர் ஆய்வு செய்ய நெறிமுறைகள் வகுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஆய்வை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அமைச்சர்கள் மற்றும் மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளைக் கொண்ட குழுக்கள் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டு, அக்குழுவினர் மாநிலம் முழுவதும் கள ஆய்வினை மேற்கொண்டு, வறட்சி குறித்த அறிக்கை மற்றும் பரிந்துரைகளை அரசுக்கு சமர்ப்பித்தனர்.
வறட்சி குறித்த கள ஆய்வின் முடிவில், மொத்தம் உள்ள 16,682 வருவாய் கிராமங்களில், 13,305 கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன என கண்டறியப்பட்டது. இவற்றுள், 1,564 கிராமங்களில் பயிர்நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 87 விழுக்காடு வரை நிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்ட அளவிலான குழுக்கள் அளித்த அறிக்கைகளின் பேரில் வறட்சி மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அரசு ஆணைகள் வெளியிடப்பட்டு அவற்றின் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள்:
* அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டது.
* அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் செலுத்த வேண்டிய 1426-ம் பசலி ஆண்டுக்குரிய நிலவரி முழுவதும் தள்ளுபடி செய்ய ஆணையிடப்பட்டு, தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* கூட்டுறவு வங்கிகள் மற்றும் வணிக வங்கிகள் ஆகியவற்றில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை மத்திய காலக் கடனாக மாற்றியமைப்பதற்கு தேவையான அன்னவாரி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
* 33 சதவீதத்திற்கும் மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரண உதவித் தொகை வழங்க வருவாய் மற்றும் வேளாண் துறைகள் இணைந்து கணக்கெடுப்பு மேற்கொள்ள ஆணையிடப்பட்டு, கணக்கெடுக்கும் பணி முடிவு பெற்றுள்ளது.
* வறட்சி காரணமாக ஏற்படும் கால்நடை தீவனப் பற்றாக்குறையைத் தீர்க்கும் வகையில், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை வாயிலாக, பசுந்தீவனம், அடர்தீவனம் மற்றும் உலர் தீவனம் வழங்க 6.91 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.
* வறட்சி காரணமாக வன உயிரினங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, வனத் துறை மூலம் அவற்றுக்குத் தேவையான தீவனம் மற்றும் குடிநீர் ஆதாரத்தைப் பெருக்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் பணிகள் மேற்கொள்ள ஆணையிடப்பட்டு, தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* வறட்சி காரணமாக வேலை வாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளர்களுக்கு, போதிய வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், 100 நாட்கள் பணி வரம்பு என்பது 150 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
* வறட்சி காரணமாக கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் நீர் ஆதாரங்கள் மற்றும் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் பணிகள் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த ஆணையிடப்பட்டு, பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
* வறட்சி காரணமாக நகர்ப்புறங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் நீர் ஆதாரங்கள் மற்றும் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் பணிகள் 160 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த ஆணையிடப்பட்டு, பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
* பொதுப்பணித் துறை மூலமாக நிலத்தடி நீர்த்தேக்கும் அமைப்பு, நிலத்தடி நீர் செரிவூட்டும் அமைப்பு போன்ற நீராதாரங்களை மேம்படுத்த 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள ஆணையிடப்பட்டு, பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
* கடந்த இரண்டு மாதங்களில் 17 விவசாயிகள் பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டிருந்தாலும், இறந்தவர்களின் வறிய நிலையை கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்க ஆணையிடப்பட்டு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
* புதிய பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அதிக பயன் கிடைக்கும் என்பதால், நடப்பு ஆண்டில் பயிர்க் காப்பீட்டிற்கு அரசின் பங்களிப்பு தொகையான 410 கோடி ரூபாய் வேளாண்மைத் துறை மூலம் செலுத்தும்பொருட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் 14.99 லட்சம் விவசாயிகள் இதுவரை பதிவு செய்துள்ளனர். 30.102 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன.
* பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகள், காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பயிர் இழப்புக்கான இழப்பீட்டுத் தொகையை பெற ஏதுவாக, பயிர் அறுவடை பரிசோதனைகள் மேற்கொள்ள ஆணையிடப்பட்டது. இதுவரை 44,489 பயிர் அறுவடை பரிசோதனைகள் பல்வேறு பயிர்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இச்சோதனைகளில் பெறப்பட்ட மகசூல் விவரங்களின் அடிப்படையில் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களால் விரைவில் வழங்கப்படும்.
* தமிழகம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால், மத்திய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 39,565 கோடி ரூபாய் நிதியுதவி மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலைமையினை பார்வையிட 9 உறுப்பினர்கள் கொண்ட குழு 23.1.2017 முதல் 25.1.2017 வரை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
* விவசாயிகளுக்கு உரிய நிவாரண உதவித் தொகை வழங்கிட, வருவாய் மற்றும் வேளாண் துறைகள் இணைந்து செய்த கணக்கெடுப்புப் பணிகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளன. இந்த கணக்கெடுப்பின்படி 32,30,191 விவசாயிகளுக்குச் சொந்தமான 50,34,237 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளதால் பயிர் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரண உதவித்தொகையாக 2,247 கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டியுள்ளது. இதன் மூலம், வேளாண் பயிர் சாகுபடி செய்த 28,99,877 விவசாயிகளுக்குச் சொந்தமான 46,27,142 ஏக்கர் பரப்பளவில் ஏற்பட்ட சேதத்திற்கு 2,049 கோடி ரூபாயும், தோட்டப்பயிர் சாகுபடி செய்த 3,27,398 விவசாயிகளுக்குச் சொந்தமான 4,04,326 ஏக்கர் பரப்பளவில் ஏற்பட்ட சேதத்திற்கு 197 கோடி ரூபாயும், பட்டுப்பூச்சி வளர்ப்புக்காக மல்பெரி சாகுபடி செய்த 2,916 விவசாயிகளுக்குச் சொந்தமான 3,658 ஏக்கர் பரப்பளவில் ஏற்பட்ட சேதத்திற்கு 1 கோடி ரூபாயும், ஆக மொத்தம் 2,247 கோடி ரூபாய் வேளாண் இடுபொருள் நிவாரண உதவித்தொகையாக வழங்கப்படவேண்டும்.
* மேற்கண்ட சூழ்நிலையில் விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரண உதவித்தொகை வழங்குவது சம்பந்தமாக இன்று (21.2.2017) எனது தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், 32,30,191 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரண உதவித்தொகை 2,247 கோடி ரூபாய், விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டுள்ளேன். இதன்படி, மாநில பேரிடர் நிவாரண நெறிமுறைகளின்படி பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கும் மற்றும் இதர பாசன பயிர்களுக்கும், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5,465ம், மானாவாரி பயிர்களுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு ரூ.3,000ம், நீண்டக்கால பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.7,287ம் மற்றும் பட்டுப்புழு வளர்ப்புக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2,428 லிருந்து ரூ.3,000 வரை இடுபொருள் நிவாரண உதவித் தொகையாக வழங்கப்படும்.
* இதைத் தவிர, மாநில அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் பயனாக பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துள்ள 14.99 இலட்சம் விவசாயிகள், பதிவு செய்துள்ள பயிருக்கு ஏற்றவாறும், மாவட்டத்திற்கு ஏற்றவாறும், பயிர் இழப்புக்கு ஏற்றவாறும், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4,800 முதல் ரூ.69,000 வரை காப்பீட்டுத் ஈட்டுத் தொகையாக பெற இயலும். பயிர் அறுவடை பரிசோதனை முடிய முடிய, இந்த காப்பீட்டுத் தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் விடுவிக்க அறிவுறுத்தியுள்ளேன்.
* பொது மக்களுக்கு குடிநீர் வழங்குவது மற்றும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் விவசாய தொழிலாளர்களுக்குப் போதிய வேலை வாய்ப்பு ஏற்படுத்துவது போன்றவற்றை உறுதி செய்யும் வகையில், கிராம அளவில் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு ஆணையிட்டுள்ளேன்.
* தமிழக அரசு வறட்சி குறித்த நிலைமையினை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து, தேவைப்படும் அனைத்து துயர் துடைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.