Tuesday, February 21, 2017

சசிகலாவுக்கு திகார் சிறைதான் சரியான சாய்ஸ்!’ - கர்நாடக அரசை நெருக்கும் அமைப்புகள் #VikatanExclusive


கர்நாடகச் சிறையில் இருந்து சென்னை, புழல் சிறைக்கு சசிகலாவை மாற்றும் வேலைகள் வேகமெடுத்துள்ளன. 'பாதுகாப்பு கருதி இப்படியொரு முடிவை எடுக்க நேர்ந்தால், அவருக்கு திகார் சிறை மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்' என ஊழல் எதிர்ப்பு அமைப்புகள், கர்நாடக உள்துறைக்கு மனு அனுப்பியுள்ளன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலாவுக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனையை விதித்தது உச்சநீதிமன்றம். இதையடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட பிறகே, முதல்வர் பதவியை எட்டிப் பிடித்தார் எடப்பாடி பழனிசாமி. இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை சகாக்கள், சசிகலாவைச் சந்தித்து ஆசி பெற உள்ளனர். சட்டசபை வெற்றியின் மூலம் அவரது சபதம் வெற்றி பெற்றதாகவும் பேசிவருகின்றனர்.

"பெங்களூரு சிறைக்குச் செல்லும்போது, ஜெயலலிதா சமாதியில் சபதம் எடுத்துவிட்டுத்தான் சிறைக்குக் கிளம்பினார் சசிகலா. 'ஆட்சியைக் காப்பாற்றினால்தான் கட்சி நீடிக்கும்' என்பதால், எம்.எல்.ஏ.க்களை ஒரே இடத்தில் அடைத்துவைத்தனர். அவர்கள் நினைத்தபடியே ஆட்சியைத் தக்கவைத்துவிட்டனர். அடுத்து செய்யவேண்டிய பணிகள் குறித்து, சிறையில் நேற்று அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார் சசிகலா. அவருடன் டாக்டர்.வெங்கடேஷ், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் உள்ளிட்டவர்களும் வந்திருந்தனர். ஒரு வாரத்துக்குப் பிறகான சந்திப்பு என்பதால், அழுகையை அடக்க முடியாமல் பேசிக்கொண்டிருந்தார் சசிகலா" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், "சசிகலாவுடன் சுதாகரன், இளவரசி உள்ளிட்டோர் கடந்த 15-ம் தேதி முதல் சிறையில் உள்ளனர். சிறையில் அவருக்குப் போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை. இதையடுத்து, சிறைத்துறை அதிகாரிகளிடம் சில வசதிகளைக் கேட்டு மனு அளித்தார் சசிகலா.


தற்போது கட்டில், மின்விசிறி, செய்தித்தாள்களை வழங்க உத்தரவிட்டுள்ளது சிறைத்துறை. நேற்று தினகரனுடன் நடந்த சந்திப்பில், பெங்களூரில் இருந்து புழல் சிறைக்கு மாற்றம் செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து விவாதித்தார். இதற்காக, 'கர்நாடக உள்துறை அமைச்சகத்திற்கு எந்த வகையில் வேண்டுகோள் வைப்பது?' என்பதுதான் சந்திப்பின் சாராம்சமாக இருந்தது. சொத்துக்குவிப்பு வழக்கில், மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வுசெய்வது குறித்தும் விளக்கினார் தினகரன். தலைமைச் செயலக நடவடிக்கைகள், பன்னீர்செல்வம் அணியின் தோல்வி, சட்டசபைக் காட்சிகள், எதிர்க்கட்சிகளின் செயல்பாடு குறித்தெல்லாம் நீண்ட நேரம் விளக்கிக்கொண்டிருந்தார் தினகரன். அனைத்தையும் கேட்டுக்கொண்டவர், 'புழல் சிறைக்கு மாற்றுவதற்கான வேலைகளைத் தீவிரப்படுத்துங்கள்' என்பதையே வலியுறுத்தினார் சசிகலா" என்றார்.

"புழல் சிறைக்கு மாற்றம் செய்வதற்காக, கர்நாடக உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்தவர்களை சசிகலா தரப்பில் உள்ளவர்கள் சந்தித்துப் பேசிவருகின்றனர். 'சின்னம்மாவை சென்னைக்கு மாற்றிவிட்டால் போதும்' என்ற மனநிலையில் அவர்கள் உள்ளனர். இதை எதிர்த்து கர்நாடகத் தமிழர்கள் மத்தியில் சசிகலா எதிர்ப்பு அணியினர் வேலைபார்த்து வருகின்றனர். அவர்கள் மூலமாக, ஊழல் எதிர்ப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள், உள்துறையின் கவனத்திற்குப் புகார் மனுக்களை அனுப்பிவருகின்றனர். அதில், 'ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு உள்துறை அமைச்சகம் எந்தச் சலுகையும் அளிக்கக் கூடாது. குன்ஹா அளித்த தீர்ப்பு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பரப்பன அக்ரஹாரா சிறை பாதுகாப்பாக இல்லை என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைத்தால், அதை ஏற்றுக்கொண்டு, பாதுகாப்பு அதிகம் நிறைந்த திகார் சிறைக்கு அவரை மாற்றுங்கள். சென்னை சிறைக்கு மாற்றினால், ஊழல் குற்றவாளிக்கு கூடுதல் சலுகையை அளித்ததுபோல ஆகிவிடும். இதற்கு, கர்நாடக அரசு துணை போக வேண்டாம்' எனத் தெரிவித்துள்ளனர்.

புழல் சிறைக்கு மாற்றும் வேலைகள் நடந்தால், தொடர் போராட்டங்களை நடத்தவும் கர்நாடகத் தமிழர்கள் மத்தியில் பிரசாரம் நடந்து வருகிறது. ஆட்சி அதிகாரம் கைக்கு வந்துவிட்டதால், தேர்தல் ஆணையத்தைச் சரிக்கட்டும் வேலைகளையும் டெல்லியில் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் செய்துவருகின்றனர். இதையறிந்து, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை முடுக்கிவிடும் வேலையில் பன்னீர்செல்வம் அணியினர் செய்துவருகின்றனர். 'பொதுச் செயலாளரை முறையாகத் தேர்வுசெய்யுங்கள்' என ஆணையம் அழுத்தம் கொடுக்கும் வரையில் அவர்கள் ஓயப்போவதில்லை. ஆட்சி அதிகாரத்திலும் அவர்கள் வெகுநாட்கள் நீடிக்கப்போவதில்லை" எனக் கொந்தளிக்கின்றனர் பன்னீர்செல்வம் அணியின் முக்கிய நிர்வாகி ஒருவர்.

'பரப்பன அக்ரஹாரா டு புழல்' என்ற ஒற்றை இலக்கை குறிவைத்துக் காய் நகர்த்திவருகிறார்,அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா. கர்நாடகத் தமிழர்களின் எதிர்ப்பு வெல்லுமா என்பதற்கு சில வாரங்களில் விடை தெரிந்துவிடும்.

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...