Tuesday, February 21, 2017


350 கி.மீ வேகத்தில் கடலுக்கு அடியில் சீறும் இந்தியாவின் முதல் புல்லட் ரயில்..!




இந்திய ரயில்களின் வேகம் மட்டும் டெக்னாலஜியால் அதிகமாகிக்கொண்டே போனாலும், அவை சொன்ன நேரத்துக்கு வராமல் தாமதமாக வருவது வழக்கம் தான். இப்போது டெக்னாலஜியின் அடுத்த பாய்ச்சலால் சீறப்போகிறது இந்தியன் ரயில்வே. இந்தியாவின் முதல் புல்லட் ரயில் பாதை அமைப்பதற்கான முதற்கட்ட வேலைகள் ஆரம்பமாகிவிட்டன. இதையும் மற்ற ரயில் பாதைகளை போல அமைப்பார்கள் இதுல என்ன இருக்குனு யோசிக்கிறீங்களா? இருக்கு பாஸ்..

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் கடலுக்கு அடியில் ஓடப்போகிறது என்பதுதான் சிறப்பு. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்து கடலுக்கு அடியில் இந்த ட்ரெயினில் பயணம் செய்தால் ஒரு ‘வாவ்’ அனுபவமாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம். டபுள் டெக் ட்ரெயினுக்கே க்யூல நின்னு போனவங்க பாஸ் நாம.

மும்பையில் இருந்து அகமதாபாத் இடையே 508 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்படும் இந்த புல்லட் ரயில் பாதையில் 7 கி.மீ தூரம் ஆழ்கடலின் அடியில் அமையப்போகிறது. தானே மற்றும் விரார் நகரங்களுக்கு இடையே 21 கி.மீ தூரத்திற்கு சுரங்கப்பாதை அமைய இருக்கிறது. இந்த இரு நகரங்களுக்கு இடையே உள்ள பகுதிகளில் பயிர்கள் பயிரிடப்படும் பாசனப்பரப்பு அதிகமாக இருப்பதால் அது பாதிப்படையாமல் இந்த திட்டத்தை செயல்படுத்த சுரங்கப்பாதையை வடிவமைத்துள்ளார்கள். இதுதான் இந்த புராஜக்ட்டில் பாரட்டப்பட வேண்டிய அம்சம்.

இந்த ரயில் அதிகபட்சமாக 350 கி.மீ வேகத்தில் செல்லும் என்பதால் இரு நகரங்களுக்கு இடையேயான தொலைவை 3 மணி நேரங்களில் எளிதாக கடக்கலாம். மேலும் இரண்டும் மெட்ரோ நகரங்கள் என்பதால் புல்லட் ரயில் போக்குவரத்து மேலும் பல வசதிகளை மேம்படுத்த உதவும். புல்லட் ரயிலால் பயண நேரம் வெகுவாக குறையும்.

இந்த திட்டத்தின் முதற்கட்டமாக கடலின் அடியில் 70 அடி ஆழத்தில் உள்ள மண் படுகைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகள் தொடங்கி விட்டன. 97,636 கோடி ரூபாய் செலவாகும் இந்த திட்டத்திற்கு ஜப்பான் 81 சதவிகிதம் நிதி உதவி அளிப்பதோடு மட்டுமில்லாமல் ரயில் பாதை கட்டுமானம் மற்றும் இயக்கத்திலும் உதவி செய்யும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. நடைபெற்று வரும் பரிசோதனைகள் முடிவடைந்ததும் ரயில் பாதை கட்டுமானத்தை வரும் 2018 ம் ஆண்டில் தொடங்கி 2023 ம் ஆண்டு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புல்லட் ரயில் தொழில்நுட்பத்தில் உலகளாவிய அளவில் முன்னிலையில் இருப்பது ஜப்பான் நாடுதான் அங்கு 1964 ஆண்டிலேயே அதிவேக ரயில்கள் ஓடத் துவங்கி விட்டன.மேலும் கடலுக்கு அடியில் ரயில் பாதையை அமைப்பது என்பது நமக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். அவர்களுக்கு அது பழக்கமான ஒன்றுதான். 1988 ஆம் ஆண்டே ஜப்பானின் ஹொன்சு மற்றும் ஹொக்கிடோ தீவுகளுக்கு இடையே 54 கி.மீ தூரத்திற்கு ஆழ்கடலின் அடியில் செல்லும் இரு வழி ரயில் பாதையை வடிவமைத்து அதில் புல்லட் ரயில் ஓட்டியவர்கள் ஜப்பானியர்கள். எனவே இந்தியாவின் புல்லட் ரயில் சகாப்தத்தையும் சிறப்பாக தொடங்கி வைப்பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.



அதுக்கு முன்பாக நம்ம பிரதமர் மோடிகிட்ட ஒரு கேள்வி. போன நவம்பர் மாசம் திடீர்னு ஒரு நாள் நைட்டு 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதுனு சொல்லிட்டு எங்கள பணம் எடுக்க ஊர் ஊரா சுத்த விட்டு நீங்க ஜப்பானுக்கு போய் புல்லட் ட்ரெயில ஓட்டுற மாதிரி போஸ் குடுத்தீங்களே.. அது இந்த ரயில இந்தியாவுக்கு கொண்டு வர்றதுக்குக்குதானா?

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...