இந்த நாளில் இப்படியெல்லாம் இருந்து பாருங்களேன்! #MorningMotivation
உங்களை உற்சாகப்படுத்துகின்ற நிகழ்வுகள் என்னென்ன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த வகையில், உங்களுடைய நாட்களை நீங்கள் நகர்த்திச்சென்றால், எப்பவுமே சந்தோஷம்தானே? சரி, எப்படி எல்லாம் ஒவ்வொரு நாளையும் சிறப்பானதாக அமைத்துக்கொள்ளலாம் எனக் கொஞ்சம் பார்ப்போமா…
உங்களுடைய லட்சியங்களை ஒவ்வொன்றாக எழுதிவைத்துக்கொண்டே வாருங்கள். ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் அதை எடுத்துப் பார்க்க, உங்களது மூளை அதை நினைவில் வைத்துக்கொள்ளுமாம். சிம்பிளா சொல்லணும்னா, சத்தியராஜ் ஒரு படத்தில் காலையில கண் விழிச்சதும் காதலியின் புகைப்படத்தை எடுத்துப் பார்ப்பாரே... அதே அதே!!
அடுத்ததாக, இன்றைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள். ஏனென்றால், இந்தக் காலைப்பொழுது இருக்கிறதே... இது ஒரு கடினத் தன்மையுடைய நேரம். இரவில் கண்ட கனவு,நேற்றைய நிகழ்வு என நம் மனதை அலைபாயவிடும். எனவே, அன்றைய நாளில் முக்கியமாகச் செய்யப்படவேண்டியவற்றை மட்டும் மனதில் பதியவைத்துக்கொள்வது அவசியம்.
உடற்பயிற்சியுடன் நாளை ஆரம்பிக்கலாம். ‘நம்முடைய மகிழ்ச்சியான தருணங்களை இழக்கச்செய்கின்ற கெமிக்கல் ரியாக்ஷனை ஃபீல் குட்-ஆகச் செய்கின்ற பயாலாஜிக்கல் ரியாக்ஷனாக மாற்றுவதே உடற்பயிற்சிகள்தான்" என்று சொல்கின்றன, அறிவியல் ஆய்வுகள். அது மட்டுமல்ல, இது உடலின் நன்னிலையிலான ஆரோக்கியத்தையும் அமைப்பையும் டபுள் டமாக்கா ஆஃபராகத் தருகிறதாம்.
உங்களுடைய செயல்களை எல்லாம் ஒழுங்குபடுத்திக்கொள்ளப் பழகிக்கொள்ளுங்கள். சோஷியல் மீடியாக்கள் எல்லாம் பல தகவல்களைத் தந்துகொண்டுதான் இருக்கும். இருப்பினும் அதையெல்லாம் கொஞ்ச நேரத்திற்கு ஆஃப் செய்துவிட்டு, முதலில் அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பது நல்லது.
கொஞ்சம் இடைவெளிகள் தரலாம், தப்பில்லை. ஒவ்வொரு பணியின்போதும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை வாக்கிங், ஒரு கப் டீ (அ) காபி போன்றவற்றுக்காக நேரத்தைச் செலவிடுங்கள். வேலையில் இன்னும் கிரியேட்டிவிட்டி கூடி, நீங்கள் ராக் ஸ்டார் ஆகலாம்! ஆனா ஒண்ணு பாஸ்! ஒரு மணிநேரம் வேலைசெய்துவிட்டு, 10 நிமிடம் பிரேக் போகலாம். ஆனால், இருபது நிமிட வேலைக்கு 10 நிமிட இடைவெளி விடக்கூடாது. அது தவறு. புரிஞ்சுதோ?
உங்களுடைய மனதின் கவலைகளையும் நினைவுகளையும் உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் அடிக்கடி பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களுக்குள்ளேயே வைத்துக்கொண்டிருந்தால், அழுக்கு சேர்ந்து, 'திமிரு' பட வடிவேலின் மண்டைபோல வீங்கிவிடும். பகிர்ந்து கொண்டால், உணர்வுகள் புதுப்பிக்கப்பட்டு ஆற்றலை உருவாக்கும். ஷேரிங் நல்லது!
உடல் நலனில் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள் ஃப்ரண்ட்ஸ்! உடல் ஆரோக்கியத்தைச் சீராக அமைத்துக்கொண்டால்தான், இன்று நாம் நன்றாக இருக்கிறோம் என்கிற நிறைவுணர்வு ஏற்படும். உங்களுக்கு எது பொருந்துமோ அதை அணியுங்கள். இயற்கையாகவே அது உங்களுக்கு நல்ல மன ஓட்டத்தைக் கொடுக்கும்.
ஒவ்வொரு நாளும், உங்களை நீங்கள் புதுப்பித்துக்கொண்டே இருங்கள். எல்லோரும் எல்லாமும் கற்றிருக்கவில்லை. நாம் ஒன்றில் வெற்றிகொண்டால், அதோடு அதை நிறுத்திக்கொள்ளக் கூடாது. அதன் அடுத்த பாதையை நோக்கி நகர்ந்து செல்ல வேண்டும். அடுத்த நிலைக்கான மைல்கற்கள் உண்டு என்பதை நினைவில்கொள்ள வேண்டும். துணிக் கடைகளில் பொம்மைகளுக்கு ஓர் ஆடை நன்றாக இருக்கிறதென்றால், அதை அப்படியேவா விட்டுவிடுகிறார்கள். நாளுக்கு நாள் உடைமாற்றி அழகு பார்க்கிறார்கள் அல்லவா... அது போலத்தான்.
ஒரு செயலில் ஈடுபட்டிருக்கிறீர்கள் என்றால், முழுக்க முழுக்க அந்த நாள் முழுதும் அதிலேயே இருக்க வேண்டும் என்பதில்லை. கொஞ்சம் சிரிப்பு,கொஞ்சம் கலகலப்பு எல்லாமே இருக்கலாம்.
ஒவ்வொரு நாளிலும் 24மணி நேரமுண்டு. அதில் ஒரு மணி நேரத்தைப் புதிய செய்தி ஒன்றை அறிந்துகொள்ள முயற்சி செய்யலாமே? இது, உங்களது சுய தரத்தை மதிப்பீடுசெய்யும் நம்பிக்கையைக் கொடுக்கும்.
வாழ்க்கையில இன்பதுன்பம் இருக்கத்தான் செய்யும். ஆனா அதுக்காக, சோர்ந்துட்டோம்னா சுவாரஸ்யமே இல்லாம இருக்கும். புதிய களங்கள் எப்போதுமே நமக்காகக் காத்திருக்கிறது. நாம்தான் அதில் பயணிக்க முனைப்புக் காட்டவேண்டும். அதேபோல எல்லா நெடிய பயணங்களும் ஒரு அடியில்தானே துவங்கும். முதல் அடியை எடுத்துவைக்க நீங்கள் தயாரா?
No comments:
Post a Comment