டுபாக்கூர் கையெழுத்தால் தாசில்தாரை அதிர வைத்த வியாபாரி!
பால் வியாபாரி கொடுத்த வாரிசு சான்றிதழைப் பார்த்த கிண்டி தாசில்தார் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். கிண்டி தாசில்தாரின் கையெழுத்தால் அந்த சான்றிதழ் பூர்த்தி செய்யப்பட்டிருக்க, இது தாசில்தார் அலுவகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையைச் சேர்ந்தவர் சந்திரகாந்த் என்ற சந்திரன். இவர், வாரிசு சான்றிதழ் கேட்டு கிண்டி தாசில்தார் அலுவலகத்துக்குச் சென்றார். அங்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்த சுப்பிரமணி, ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்த அம்பேத் என்ற ஆனந்தன் ஆகிய புரோக்கர்கள் சந்திரனை அணுகினர். வாரிசு சான்றிதழ் வேண்டும் என்றால் ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டனர். அதற்கு சந்திரனும் சம்மதித்தார். இதையடுத்து சில நாட்களுக்குப் பிறகு வாரிசு சான்றிதழை சந்திரனிடம் கொடுத்தனர்.
அந்த சான்றிதழுடன் கிண்டி தாசில்தார் ஆனந்த மகாராஜாவிடம் விண்ணப்பித்தார் சந்திரன். அப்போது சான்றிதழில் உள்ள கையெழுத்தில் சந்தேகம் அடைந்த தாசில்தார், சந்திரனிடம் விசாரித்தார். பிறகு அந்த சான்றிதழுடன் எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் அரிக்குமார், இன்ஸ்பெக்டர் சொர்ணகளஞ்சியம் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஆனந்தன், சுப்பிரமணியன் ஆகிய இருவரும் போலி வாரிசு சான்றிதழைத் தயாரித்தது தெரியவந்தது. உடனடியாக இருவர் வீடுகளிலும் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது போலிச் சான்றிதழ் தயாரிக்க பயன்படுத்திய 32 ரப்பர் ஸ்டாம்புகள் மற்றும் போலி சாதிச் சான்றிதழ்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து புரோக்கர்கள் ஆனந்தன், சுப்பிரமணி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவர் போலிச் சான்றிதழ் தயாரித்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து சந்திரனிடம் விசாரணை நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில் சந்திரன், பத்தாம் வகுப்பு படித்துள்ளார் என்றும், பால்வியாபாரம் செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "போலிச் சான்றிதழ் புரோக்கர்கள் அம்பேத், சுப்பிரமணி ஆகியோர் கடந்த 8 ஆண்டுகளாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சான்றிதழுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்துள்ளனர். சந்திரனிடம் கொடுக்கப்பட்ட சான்றிதழ் அவருக்கு போலி என்று தெரியவில்லை. இதனால்தான் அவர் அந்த சான்றிதழைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட தாசில்தாரிடமே விண்ணப்பித்துள்ளார். தாசில்தாரின் கவனத்துக்கு அந்த சான்றிதழ் வரவில்லை என்றால் புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுத்து இருக்க முடியாது. இவர்கள் யாருக்கெல்லாம் சான்றிதழ் கொடுத்துள்ளார்கள் என்றும் விசாரணை நடந்து வருகிறது" என்றனர்.
No comments:
Post a Comment