Thursday, February 23, 2017

7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் அளிக்க குழு அமைப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

By DIN  |   Published on : 23rd February 2017 04:16 AM  |
meet
அரசு ஊழியர்களுக்கான 7 -ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை தமிழக அரசுப் பணியாளர்களுக்கு செயல்முறைபடுத்துவது குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனை
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க தனி குழுவை அமைத்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்தக் குழுவானது தனது பரிந்துரைகளை ஜூன் மாதத்துக்குள் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன், தமிழக அரசுப் பணியாளர்களுக்கும் ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பைச் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடந்தது.
இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க, அலுவலர் குழுவை உடனடியாக அமைக்க உத்தரவிட்டுள்ளேன்.
இந்தக் குழுவில் 5 பேர் உறுப்பினர்களாக இடம்பெற்றிருப்பர்.
குழுவில் யார் யார்? நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம், உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் சபீதா, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் எஸ்.ஸ்வர்ணா ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றிருப்பர். குழுவின் உறுப்பினர் செயலாளராக பி.உமாநாத் ஐ.ஏ.எஸ். செயல்படுவார்.
இந்த அலுவலர் குழு மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை ஆராயும். அவற்றை தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை வழங்கும்.
மேலும், இந்தக் குழு மத்திய அரசு பரிந்துரைத்துள்ள திருத்திய ஓய்வூதியம் -குடும்ப ஓய்வூதியம், திருத்திய ஓய்வுக்கால பயன்கள் குறித்து ஆராய்ந்து அவற்றை தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள், அலுவலர்களுக்கு விரிவுபடுத்துவது குறித்தும் உரிய பரிந்துரைகள் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதர படிகள் தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள உயர்நிலை குழு அளிக்கும் அறிக்கையையும் ஆராய்ந்து உரிய பரிந்துரைகளையும் இக்குழு வழங்கும்.
அங்கீகரிக்கப்பட்ட அலுவலர், ஏனைய சங்கங்கள் இந்த அலுவலர் குழுவுக்கு ஊதிய விகிதம், ஓய்வூதிய திருத்தம் குறித்த தங்கள் கோரிக்கையை அனுப்பி வைக்கவும், அவற்றை உரியவாறு ஆராய்ந்து பரிந்துரைக்கவும் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நான்கு மாதங்கள்: அலுவலர் குழுவானது தனது அறிக்கையை நான்கு மாத காலத்துக்குள், அதாவது ஜூன் 30-ஆம் தேதிக்குள் அரசுக்கு அளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது என்று தனது அறிவிப்பில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024