திசை மாறுகிறது "தீபா" புயல்?
By திருமலை சோமு | Published on : 22nd February 2017 08:58 PM |
தமிழக அரசியலில் கடந்த டிசம்பர் மாதம் அடிக்க தொடங்கிய புயல் ஒரு புரட்டு புரட்டி அடித்து இப்போதுதான் சற்று ஓய்ந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணச் செய்தியில் தொடங்கி பல்வேறு காட்சிகள் தினமும் நம்மை விறுவிறுப்பாக கண்காணிக்க செய்தது. அடுத்து என்ன, அடுத்து என்ன என்று நாள்தோறும் நாடே உற்று நோக்கிக் கொண்டிருந்த வேளையில் தான் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தமிழக அரசியலை புரட்டிப் போடப் போகும் இன்னொரு புயலாக கிளம்புவார் என்று பேசப்பட்டது.
ஜெயலலிதாவின் அபிமானிகள், ஆதரவாளர்கள் எல்லோம் அவரை இன்னொரு ஜெயலலிதாவாகவே பார்க்கத் தொடங்கினர். தினம் தோறும் அவர் வீட்டு முன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்து குவிந்ததோடு அவரை அரசியலுக்கு வருமாறும் அதிமுகவின் தலைமையை ஏற்க வேண்டும் என்றும் ஆரவார குரல் எழுப்பினர். அதுமட்டும் இன்றி மாநிலம் முழுவதும் வரவேற்பு பதாகைகளும், தொண்டர்களின் ஆரவாரமும் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது.
இந்நிலையில்தான் எதிர்பாராமல் வந்த ஜல்லிக்கட்டு தன்னெழுச்சிப் போராட்டம் தீபா புயலை முடக்கிப் போட்டது. என்றாலும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின் மீண்டும் மையம் கொள்ளத் தொடங்கிய தீபா புயல் மெல்ல தீவிரம் அடையும் நேரத்தில் அரசியலில் புதிய சூறாவளியாக புறப்பட்டதுதான் பன்னீர் செல்வத்தின் அதிரடி முடிவுகள்.
அதிமுகவில் சசிகலாவின் தலைமையை ஏற்க முடியாமல் திடீர் என ஞானோதயம் தோன்ற ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வந்து தியானம் செய்த அவர் அம்மாவின் ஆன்மா உந்தியதால் வெகுண்டு எழுந்ததாகவும் மனசாட்சியோடு ஒரு யுத்தம் நடத்தியப் பின் இறுதியில் இங்கு வந்து பேசுகிறேன் என்றும் செய்தியாளர்களுக்கு பேட்டிக் கொடுத்து தமிழகத்தின் கடைக்கோடி மனிதனையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
இந்த அதிர்வலையில் செய்வது அறியாமல் சசிகலா அணியை விட அதிகம் திணறியது, தீபாவின் அரசியல் கனவுதான் என்று சொல்ல வேண்டும். வெவ்வேறு திசையில் புறப்பட்ட இரண்டு புயல் சின்னங்கள் ஒரே இடத்தில் மையம் கொள்வது போல தீபா, ஓ. பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்படுவது என்று முடிவெடுத்தார்.
இதில் அவரின் ஆதரவாளர்கள் பலருக்கும் அதிருப்திதான் என்றாலும் வேறு வழியிலாமல் அப்போதைய சூழலுக்கு அதை செய்ய வேண்டியதாகியது. அந்த முடிவுக்குப் பின் சசிகலாவின் சிறைவாசம், கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் சிறைவைப்பு, போன்ற சம்பவங்கள் எல்லாம் தங்களுக்கு சாதகமாக மாறும் என்றே அவர்கள் எண்ணினர். ஆனால் சசிகலா அணியை அவர்களால் வீழ்த்தக் கூடிய அளவுக்கு வலிமையையும் ஆதரவும் அவர்கள் தரப்பில் இல்லை என்பதால் சட்டப் பேரவை பெரும்பான்மை நிகழ்வில் சசிகலா அணியே வென்றது.
No comments:
Post a Comment