Wednesday, February 22, 2017

வீணாகும் உணவு!

By ஆசிரியர்  |   Published on : 22nd February 2017 01:28 AM  |  
உலகெங்கிலும் உணவுப் பொருள்களின் உற்பத்தியை அதிகரிப்பது குறித்தும், உணவுப் பொருள்களை முறையாக விநியோகிப்பது குறித்தும் எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் மிகப்பெரிய அளவில் உணவுப்பொருள்கள் வீணாகின்றன, வீணாக்கப்படுகின்றன என்கிற வேதனையான உண்மையையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையின் தேவையைவிட இரட்டிப்பு மடங்கு உணவுப் பொருள்கள் உற்பத்திச் செய்யப்படுகின்றன. அப்படியிருந்தும் கோடிக்கணக்கான பேர் நாள்தோறும் உணவுக்கு வழியில்லாமல் பட்டினி கிடக்கும் அவலம் காணப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் (எப்.ஏ.ஓ.) ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையின்படி ஆண்டுதோறும் 1.3 பில்லியன் டன் (130 கோடி டன்) உணவுப் பொருள்கள் வீணாக்கப்படுகின்றன. இதன் மதிப்பு சுமார் 750 பில்லியன் டாலர் (சுமார் ரூ.50 லட்சத்து 22 ஆயிரம் கோடி). அதாவது மனிதனின் தேவைக்காக உற்பத்தி செய்யப்படும் மொத்த உணவுப் பொருள்களில் மூன்றில் ஒரு பங்குக்கு அதிகமான உணவுப் பொருள்கள் வீணாகின்றன அல்லது வீணாக்கப்படுகின்றன.
உணவுப் பொருள்களை சேதமில்லாமல் பாதுகாப்பது, வீணடிக்காமல் இருப்பது என்பது உலகில் உள்ள எல்லா நாடுகளுமே எதிர்கொள்ளும் சவால்தான். ஆனால், வளர்ச்சியடையும் நாடுகளில்தான் இந்தப் பிரச்னை மிக அதிகமாக காணப்படுகிறது. அதற்குக் காரணம் உற்பத்தி செய்த பொருள்களை முறையாக சேமித்து வைக்கவோ, இழப்பில்லாமல் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லவோ போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருப்பதுதான்.
உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருள் வீணாக்கப்படுவது என்பது பயிராகும் இடத்திலிருந்தே தொடங்கி விடுகிறது. அங்கிருந்து சந்தைக்கு கொண்டு போகும்போதும், பதப்படுத்தல் அல்லது சேமிப்புக் கிடங்குகளில் பத்திரப்படுத்துதல், மொத்த விற்பனை, சில்லறை விற்பனைக்கு கொண்டு சேர்த்தல் என்று ஒவ்வொரு செயல்பாட்டிலும் உற்பத்திச் செய்யப்பட்ட பொருளின் ஒரு பகுதி வீணாவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. பழங்கள், காய்கறிகளைப் பொருத்தவரை ஆரம்பக்கட்டத்திலேயே கூட வீணாகி விடும் அளவு அதிகம்.
ஏனைய நாடுகள் எல்லாவற்றையும்விட இந்தியாவில் இந்தப் பிரச்னை மிகவும் மோசமாக இருக்கிறது. ஒரு புள்ளிவிவரத்தின்படி ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பில் உள்ள உணவுப் பொருள் அறுவடைக்கு முன்பும் அறுவடைக்குப் பிறகும் வீணாகிறது. இதில் உணவு தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் ஆகியவை அடக்கம். நமது விவசாயிகள் உற்பத்தி, இழப்பு அல்லது வீணாதலை இன்னும் குறைக்க முற்படவில்லை.
உணவுப் பொருள்களைப் பொருத்தவரை மிக அதிகமான இழப்பு அல்லது வீணாகிப் போதல் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு உற்பத்திச் செய்யப்பட்ட பொருளை கொண்டு செல்லும்போதும், சேமித்து வைக்கும்போதும்தான் ஏற்படுகிறது. உற்பத்திச் செய்யப்பட்ட உணவுப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கான கட்டமைப்பு வசதி விரிவுபடுத்தவும், மேம்படுத்தப்படவும் செய்யப்பட்டால் மட்டுமே இந்த இழப்பைக் கணிசமாகக் குறைக்க முடியும்.
அழுகிப் போகக்கூடிய பழங்கள், காய்கறிகளின் இழப்பை பெரியஅளவில் குறைக்க வேண்டுமானால், குளிர்பதன சேமிப்புக் கிடங்குகள் பரவலாக நிறுவப்பட வேண்டும். இந்தியாவில் நாம் குளிர்பதன சேமிப்பு, சரக்கு கையாளுதல் ஆகியவற்றில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறோம். உணவுப் பதனிடுதல் துறையில் மிக அதிகமான முதலீடு தேவைப்படுகிறது. புதிய தொழில்நுட்பங்கள், தடையில்லா மின்சாரம் ஆகியவை உறுதிப்படுத்தப்படாமல் குளிர்பதனசேமிப்புக் கிடங்குகளை பரவலாக அதிகரிப்பது இயலாது. இதில் அந்நிய முதலீட்டுக்கு வழிகோலப்பட்டிருப்பது என்றாலும்கூட, போதுமான அளவு முதலீடும் வரவில்லை, முயற்சிகளும் முன்னெடுத்துச் செல்லப்படுவதில்லை.
மேலைநாடுகளில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களை விற்பனைக்கு எடுத்துச் செல்லும்போது புதிய தொழில்நுட்பங்களை கையாண்டு அவை உறைகளிலும், பிளாஸ்டிக் டப்பாக்களிலும் அடைக்கப்படுகின்றன. உணவுப் பொருள் கெட்டுப் போகாமல் இருப்பதற்கான வழிமுறைகளையும் கையாள்கிறார்கள். உற்பத்தி செய்யப்படும் இடத்திலிருந்து விற்பனைக்கு வருவது வரை எங்கெல்லாம் இழப்புகளை குறைத்து பொருள் வீணாகாமல் பாதுகாப்பதில் அவர்களைப் போல நாம் கவனம் செலுத்துவதில்லை.
இந்தியாவில் ஆறு பேர்களில் ஒருவர் பட்டினியாக இருக்கிறார் அல்லது ஊட்டச்சத்து குறைந்தவராக இருக்கிறார் என்கிறது புள்ளிவிவரம். உலக பட்டினி குறியீடு, 118 நாடுகளில் இந்தியாவை 97-ஆவது இடத்தில் காட்டுகிறது. இந்த நிலையில் நாம் உற்பத்திச் செய்யப்பட்ட உணவுப் பொருள்களை வீணாகாமல் கையாளாமலோ, சமைத்த உணவுப் பொருள்களை வீணாக்கவோ செய்தால் அது மனித இனத்திற்கே செய்கின்ற துரோகம். உணவுப் பொருள் வீணாவதை கணிசமாக குறைக்க முடியுமேயானால் மட்டுமே உணவுப் பாதுகாப்புத் திட்டம் வெற்றியடைந்து அனைவருக்கும் உணவு என்கிற நிலை ஏற்படும்.
உணவுப் பொருளை வீணாக்குவது என்பது உணவு உற்பத்திக்கு தேவையான தண்ணீரையும் மின்சாரத்தையும் வீணாக்கு
வதையும் உள்ளடக்கியிருக்கிறது. அதனால் உணவுப் பொருள் வீணாவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வும் பரப்புரையும் உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகளைப் போலவே இன்றியமையாதவை.

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...