வண்டலூர் உயிரியல் பூங்காவில் கூண்டை உடைத்து ஆஸ்திரேலிய
நாட்டு அரிய வகை கிளியை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள பறவைகள் இருப்பிடங்களில் பல்வேறு வகையான பறவைகள் உள்ளன. இதில் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த அரிய வகையான ‘‘மொலுகான்’’ கொண்டைக்கிளி ஒரு ஜோடியை தனியாக கூண்டில் அடைத்து வைத்து உள்ளனர்.
கடந்த 10–ந் தேதி வழக்கம் போல் ஊழியர்கள், பறவைகளுக்கு உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தனியாக கூண்டில் வைக்கப்பட்டு இருந்த ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த ‘‘மொலுகான்’’ கொண்டைக்கிளி ஜோடியில் ஒரு கிளி மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி பூங்கா அதிகாரிகளிடம் தெரிவித்தனர். கடந்த 16 நாட்களாக பூங்காவில் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் மாயமான கிளியை காணவில்லை.
கூண்டை உடைத்து திருட்டு இதற்கிடையில் நேற்று முன்தினம் ஊரப்பாக்கம் ரேவதிபுரம் அருகே ஒரு வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கி இருந்த ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த கனகராஜ் (வயது 24), ஓட்டேரியை சேர்ந்த நரேஷ் (25), மதிவாணன் (27) ஆகிய 3 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரித்தனர்.
அவர்கள் தங்கி இருந்த வீட்டில் சோதனை செய்தபோது தனியாக இருட்டு அறையில் வெளிநாட்டை சேர்ந்த ஒரு கிளியை அடைத்து வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பிடிபட்ட 3 பேரிடமும் அந்த கிளி எப்படி கிடைத்தது? என போலீசார் துருவி துருவி விசாரித்தனர்.
அப்போது அவர்கள், கடந்த 9–ந் தேதி இரவு வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குள் அமைந்துள்ள ஓட்டேரி ஏரி வழியாக நுழைந்து பறவைகள் கூண்டை உடைத்து ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ஆண் ‘மொலுகான்’ கொண்டைக்கிளியை திருடியதை ஒப்புக்கொண்டனர்.
3 பேர் கைது இதுபற்றி வண்டலூர் பூங்கா அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், ஆஸ்திரேலிய நாட்டு கிளி மாயமானதை ஒப்புக்கொண்டனர். அதன்பிறகுதான் வண்டலூர் உயிரியல் பூங்கா வனசரக அலுவலர் பிரசாத், ஓட்டேரி போலீசில் இதுபற்றி புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், வண்டலூர் பூங்காவில் கொண்டைக்கிளியை திருடியதாக கனகராஜ், நரேஷ், மதிவாணன் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கொண்டைக்கிளியை பூங்கா அதிகாரிகளிடம் வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முகிலன் ஒப்படைத்தார்.
முதலுதவி சிகிச்சை திருடப்பட்ட ஆஸ்திரேலிய கொண்டைக்கிளிக்கு ஏற்கனவே இறக்கைகள் வெட்டப்பட்டு உள்ளதால் அதனால் இயல்பாக பறக்க முடியாது. திருடிச்சென்றவர்கள் கடந்த 16 நாட்களுக்கு மேலாக சரியான முறையில் கொண்டைக்கிளிக்கு தேவையான உணவு வழங்கவில்லை. இதனால் மிகவும் சோர்வாக காணப்பட்ட கொண்டைக்கிளிக்கு உடனடியாக பூங்காவில் உள்ள மருத்துவமனையில் மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் கொண்டைக்கிளியை வைத்து உள்ளனர். இதனுடன் ஜோடியாக இருந்த பெண் கிளி, திருடர்களை பார்த்த பயத்தில் சரியான முறையில் சாப்பிடவில்லை. அதற்கு தேவையான உதவிகளையும் மருத்துவர்கள் செய்து உள்ளனர்.
இந்த வகை கிளிகள், ஒரு ஜோடி சுமார் ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சம் வரை விலை போகும். இது சுமார் 80 ஆண்டுகள் உயிர் வாழும் தன்மைகொண்டது. இது மிகவும் அரிய வகையை சேர்ந்ததாகும்.
கிளி திருட்டு தொடர்பாக பூங்காவில் பறவைகள் பராமரிப்பு பணியில் இருந்த ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பூங்கா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.