எழுவர் விடுதலை: நடப்பது ஜெயலலிதா ஆட்சி இல்லையா?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு மாநில அரசின் போக்கில் முன்பிருந்த வேகமில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. ஜெயலலிதாவிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு அவரளித்த உறுதிமொழிகளும் விதிவிலக்கல்ல.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரை, விடுதலை செய்வதற்கான தீர்மானம் 2014, பிப்ரவரி 19-ல் தமிழக சட்ட மன்றத்தில் ஏகமனதாக நிறைவேறியது. அவ்வழக்கு, மத்திய புலனாய்வுத் துறையால் விசாரிக்கப்பட்டது. எனவே, சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேறிய அன்றே அதுபற்றி மத்திய அரசின் கருத்தை அறிய தமிழக அரசு கடிதம் அனுப்பியது. மத்திய அரசு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. மாறாக, ஏழு பேரின் விடுதலைக்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. வழக்கு, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. 2015 டிசம்பர் 2-ல் வழக்கு மீண்டும் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கே திருப்பியனுப்பப்பட்டது. வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. தமிழக அரசு மீண்டும் ஒரு தடவை 2016 மார்ச் 2-ல் மத்திய அரசுக்கு இது தொடர்பாகக் கடிதம் எழுதியிருக்கிறது. ஆனால், மத்திய அரசின் மனப்போக்கில் எந்த மாற்றமும் இல்லை.
சீர்திருத்தமே தண்டனையின் நோக்கம்
ராஜீவ் கொலை வழக்கில் விசாரணைகள் முடிந்து தீர்ப்பளித்தாகிவிட்டது. தண்டனையும் அளிக்கப்பட்டுவிட்டது. தீர்ப்பு வெளிவந்த பிறகு, காவல் துறை அதிகாரி ஒருவர், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பேரறிவாளளின் வாக்குமூலத்தை முறையாகப் பதிவு செய்யவில்லை என்றார். அவரது ஒப்புதல், விசாரணையின் நிலையை எடுத்துரைத்தபோதிலும், அது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. முக்கியமாக, கொலை வழக்கின் முழுமையான பின்னணி வெளிக்கொண்டுவரப்படவில்லை.
இந்தியாவின் தலைமை நீதிமன்றமான உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்ட பிறகு, வழக்கு விசாரணைகள் பற்றிய மீளாய்வுகள் இயலாத ஒன்று. ஆனால், அளிக்கப்பட்ட தண்டனையின் அளவைக் குறைப்பது மாநில அரசின் நிர்வாக அதிகாரத்திற்கு உட்பட்டது. அதற்கு நீதித் துறை தடையாக நிற்க முடியாது. தண்டனை அளிக்கப்பட்டவரின் நன்னடத்தை, இனி அவர் குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டார் என்ற நம்பிக்கை ஆகியவையே தண்டனைக் குறைப்புக்கான அளவுகோல்கள். தண்டனைக் குறைப்பு தொடர்பான மாநில அரசின் நிர்வாக அதிகாரத்தை மத்திய அரசு கட்டுப்படுத்த முனைகிறது என்பதே இவ்வழக்கில் உள்ள சிக்கல். மத்திய-மாநில அதிகாரப் பிரிவினைப் போட்டியில் சிறைவாசிகளின் மீள்வாழ்வு சிதைக்கப்பட்டுவிடக் கூடாது.
இன்ன பிற வழக்குகளில் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை பெற்றவர்கள் விடுவிக்கப்படுவதில் மத்திய அரசுக்கு ஆட்சேபனைகள் இல்லை. இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்ற காரணத்தினால் தண்டனைக் குறைப்பை மத்திய அரசு விரும்பாதிருக்கலாம்.
மக்களைக் காப்பது மட்டுமே தனது பணியென்னும் காவல் அரசல்ல இந்திய அரசு. மக்கள் நலன் பேணும் அரசு. அரசியலமைப்பை அவ்வாறே நாம் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். இத்தகைய அரசமைப்பில் தண்டனைக் கோட்பாடுகள் பழிவாங்கும் நோக்கிலோ, அச்சுறுத்தும் நோக்கிலோ அமைந்துவிடக்கூடாது. சீர்திருத்துவது மட்டுமே தண்டனையின் நோக்கமாக இருக்கவேண்டும்.
நீடித்த மரணம்
ராஜீவ் வழக்கில் சிறைவாசம் அனுபவித்தவர்கள் அவ்வழக்கின் முதன்மைக் குற்றவாளிகள் இல்லை. அவர்களுக்கு வேறெந்தக் குற்றப் பின்னணியும் இல்லை. தண்டனைக் குறைப்புக்குக் காத்திருப்பவர்களில் பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரும் 23 ஆண்டு காலம் மரண தண்டனைக்கான காத்திருப்பிலேயே தனிமைச் சிறை வாசம் அனுபவித்தவர்கள். ‘தண்டனை விதிக்கப்பட்டதிலிருந்து மரண தண்டனை வரையிலான நீண்ட காலக் காத்திருப்பின்போது தண்டிக்கப்பட்ட கைதி கடுமையான மனவேதனையாலும் கொடுமையான உளவியல் நெருக்கடியாலும் பாதிக்கப்படுகிறான். அது நீடித்த மரணமாயிருக்கிறது’ என்றார் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.என்.பகவதி.
இந்த நீடித்த மரணத்தை அனுபவித்தவர்களில் ஒருவரான பேரறிவாளன் சிறையிலிருந்தே இதழியலில் சான்றிழ்ப் படிப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார். சிறைவாழ்க்கை குறித்த அவரது புத்தகம், அவரை ஒரு திறம்பட்ட எழுத்தாளராகவே அடையாளம் காட்டுகிறது. அதே நேரத்தில் தனிமைச் சிறைவாசம் அவரை நோயாளியாகவும் மாற்றியிருக்கிறது.
உயர் ரத்த அழுத்தத்தைத் தொடர்ந்து அவரது கண் பார்வை பாதிக்கப்பட்டிருக்கிறது. தந்தையின் உடல்நலம் மோசமாகியிருப்பதைக் காரணம் காட்டியும் அவரது பரோல் விடுப்புக்கான மனுகூட ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தண்டனை முடியும் முன்னர் சஞ்சய் தத் எந்த அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார் என்று பேரறிவாளன் எழுப்பிய கேள்விக்கு ஆழ்ந்த மௌனத்தைத் தவிர வேறெந்த பதிலும் இல்லை.
26 ஆண்டுகள் நிறைவு
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் சிறை வாழ்க்கை தற்போது 26 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. ஏழு பேரின் ஆயுள் தண்டனையையும் ரத்துசெய்து அவர்களை விடுதலை செய்ய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்முயற்சிகளை எடுத்தார். உச்ச நீதிமன்றத்தில் அதுகுறித்த வழக்கு நடந்தபோது தனிக்கவனம் எடுத்துக்கொண்டார். ‘அழாதீர்கள்.. உங்கள் மகன்தான் உங்களோடு சேரப்போகிறாரே’ என்று அற்புதம் அம்மாளின் கரங்களைப் பற்றி ஜெயலலிதா அளித்த உறுதிமொழி இன்னும் நிறைவேறாமலேயே காலம் நீள்கிறது. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கை விரைவுப்படுத்த மாநில அரசின் தரப்பிலிருந்து எந்த முயற்சியும் இல்லை.
நடந்துகொண்டிருப்பது ஜெயலலிதாவின் ஆட்சிதான் எனும்போது, அவரளித்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தற்போதைய முதல்வர் பழனிசாமிக்கும் உண்டு; இரண்டாகப் பிளந்து நிற்கும் அதிமுகவின் இரு பிரிவுகளுக்கும் உண்டு!
- செல்வ. புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in