Sunday, June 18, 2017


சென்னை அருகே ரூ.71 கோடி போதைப் பொருள் பறிமுதல்: மலேசியர் உள்பட 10 பேர் கைது

By DIN | Published on : 18th June 2017 04:41 AM

சென்னை அருகே செங்குன்றத்தில் ரூ.71 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை மத்திய வருவாய்ப் புலனாய்வுத்துறையினர் பறிமுதல் செய்து மலேசியர் உள்பட 10 பேரை கைது செய்தனர்.

சென்னை அருகே செங்குன்றத்தில் உள்ள சோப்பு பவுடர் தயாரிக்கும் நிறுவனத்தில் போதைப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு, வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவதாக மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதையடுத்து அந்த ஆலையில் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திடீர் சோதனை செய்தனர். அங்கு பல கோடி மதிப்புள்ள மெதம்பேட்டமைன், பெசுடோபெட்டரைன், ஹெராயின் ஆகியவை தயாரித்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக, பெயரளவுக்கு அங்கு சோப்பு பவுடர் தயாரித்து வந்ததும் வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.71 கோடி மதிப்புள்ள 11 கிலோ மெதம்பேட்டமைன், 56 கிலோ பெசுடோபெட்டரைன், 90 கிலோ ஹெராயின் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அங்கிருந்த ஒரு மலேசியர் உள்பட 10 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள்:

சர்வதேசக் கும்பலுடன் தொடர்பு: கைது செய்யப்பட்டவர்கள், போதைப் பொருள்கள் தயாரிப்பதற்காக இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து மூலப் பொருள்களை சென்னைக்குக் கடத்தி வந்துள்ளனர். சென்னையில் ஒரு கிட்டங்கியில் அந்த மூலப் பொருள்களை பதுக்கி வைத்துக் கொண்டு, தேவைக்கு ஏற்றாற்போல செங்குன்றம் ஆலைக்கு அவ்வப்போது கொண்டு வந்துள்ளனர்.

தேவையான இயந்திரங்களை நிர்மாணித்து அவற்றின் மூலம் போதைப் பொருள் தயாரித்து உள்ளனர். வெளிநாட்டுக்கு போதைப்பொருள் கடத்தும் நபர் மூலம், இங்கு தயாரிக்கப்பட்ட போதைப் பொருள்களை துறைமுகம், விமானம் வழியாக மலேசியா, தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்குக் கடத்தி வந்துள்ளனர்.

இங்குள்ள போதைப் பொருள் தயாரிக்கும் கும்பலுக்கும், சர்வதேச போதைப் பொருள் கடத்தும் கும்பலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கும்பலுக்கு தலைவராகச் செயல்பட்ட நபரை வருவாய்ப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்தக் கும்பலுடன் தொடர்பில் இருந்த வெளிநாட்டு நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

போதைப் பொருள் தயாரித்த அந்த ஆலைக்கும்,மூலப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த கிட்டங்கிக்கும் சீல் வைக்கப்பட்டது. சென்னையில் அண்மைக்காலமாக நடைபெற்ற சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களில்,இப்போது கைப்பற்றப்பட்டதே அதிக மதிப்பிலானது என்பது குறிப்பிடத்தக்கது.

































No comments:

Post a Comment

news today 02.01.2025