Sunday, June 18, 2017

'கார்கூந்தல்தான் எங்கள் அடையாளமா?' மொட்டை அடித்து கேள்வி எழுப்பும் ’மனிதிகள்'

ஷோபனா எம்.ஆர்



நம்மில் எத்தனை பெண்களுக்கு மொட்டை அடித்துக்கொள்ளும் தைரியம் இருக்கிறது? அப்படி ஓர் எண்ணமே பெரும்பாலான பெண்களுக்கு வினோதமாக தோன்றலாம். ஆனால், பெண்களின் ’கூந்தல்’ என்பதை மட்டும் வைத்துக்கொண்டு, இங்கு நடக்கும் அரசியலும் ஆணாதிக்கமும் ஏராளம். இந்த சமூகத்தில், நீளமான முடியுடைய பெண் அடக்கமான பெண்ணாக பார்க்கப்படுகிறாள். ஆனால், தங்களின் செளகரியத்துக்கு ஏற்றவாறு, குட்டையான முடியோ அல்லது கிராப் வைத்துக்கொள்ளும் பெண்களை ஏதோ கட்டுக்குள் அடங்காத பெண்ணாகத்தான் பார்க்கிறது இந்த சமூகம். இந்தப் பார்வையை மாற்றும் ஒரு முயற்சியாக, ’மனிதி’ அமைப்பு பெண்கள் ‘முடி வெட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி’ ஒன்றை இன்று சென்னையில் நடத்தியது. மிக எளிமையான முறையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், 20க்கும் மேற்பட்ட பெண்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.


இது குறித்து, மனிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுதா பேசுகையில், “மனிதி அமைப்பு ஆரம்பித்து கிட்டதட்ட ஒன்றரையாண்டு ஆகிறது. இதுவரை, நாங்கள் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை குறித்து, வாட்ஸ்அப் மூலமாகவும், சந்திப்புகள் மூலமாகவும் விவாதித்திருக்கிறோம். இந்த சமூகத்தில் பெண்களுக்கு எதிராக எத்தனையோ சம்பவங்கள் நடக்கின்றன. அதற்கெல்லாம் ஏதோ ஓர் அடிப்படை இருக்கிறது. இந்த அடிப்படைகளை உடைத்தால்தான், இந்த சமூக சிக்கல்களிலிருந்து பெண்களை வெளியில் கொண்டு வர முடியும். அதற்கான ஒரு முன்னெடுப்பாகவே, இந்த முடி வெட்டும் நிகழ்ச்சியை நாங்கள் நடத்தினோம். இதைப்பற்றி நாங்கள் முகநூலில் பதிவிட்டோம். அதற்கு இதனால் என்ன புரட்சி நடந்துவிடப்போகிறது என்று சிலர் கேட்கிறார்கள். நாங்களும் இங்கு புரட்சி நடத்தவில்லை. பெண்கள் முடி வெட்டிக்கொள்வதற்குக்கூட எத்தனை பேரிடம் அனுமதி வாங்க வேண்டியிருக்கிறது? அப்போது அவர்களுக்கான சுதந்திரம் இங்கு எங்கே இருக்கிறது? இதற்கெல்லாம் விடை தேடும் முயற்சிதான் இந்த நிகழ்வு” என்று கூறுகிறார் சுதா.

மேலும், இந்த நிகழ்ச்சியில் மூலம் சேகரிக்கப்படும் முடியை, வரும் 26ஆம் தேதி, சென்னை அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் தானம் செய்யவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த சமந்தா என்பவர் கூறுகையில் , “என் அப்பா புற்றுநோயால இறந்தாரு. அவரோட இறப்புக்குப் பிறகு, எங்க அம்மாவுக்கு சடங்கு என்ற பேர்ல செஞ்ச கொடுமைகளை நான் கண்ணால பார்த்திருக்கிறேன். இந்த இரண்டு சம்பவங்களையும்தான், என்னை ‘மனிதி’யோட இணைச்சது. இங்க முடி வெட்டிக்கொள்ள வரும்போதுகூட, என் கணவருக்கும், மாமியாருக்கும் எங்க போறேன், எதுக்கு போறேன்னு பதில் சொல்லிட்டுத்தான் வரவேண்டியிருக்கு. இருந்தாலும், இந்த நிகழ்ச்சியில பங்கேற்பது மூலமா எனக்குள்ள பெரிய தன்னம்பிக்கை பிறக்குது’, என்று கூறுகிறார்.

மேலும், இந்த அமைப்பின் மற்றோரு ஒருங்கிணைப்பாளரான சாரதா பேசுகையில், ”நான் தபால் துறையில வேலை பார்க்குறேன். சின்ன வயசுல இருந்தே, பெண் என்பவள் நீளமான முடி வைச்சிக்கணும், பாவாடை சட்டைதான் போடணும், அதற்கடுத்து தாவணி போடணும், அப்புறம் சேலை உடுத்தணும் - இப்படியே என்னை வளர்த்தாங்க. மனிதி அமைப்பை பற்றி கேள்விப்பட்டு, அதுல இணைந்தேன். அப்போதான் பெரியார் குறித்தும், இந்த சமூக கட்டமைப்பு பெண்களை எப்படி காலங்காலமாக அடிமைப்படுத்தி வைச்சுக்கிறதுனு கொஞ்ச கொஞ்சமா புரிஞ்சிக்க ஆரம்பிச்சேன். இதோ..இங்க மொட்டை அடிச்சிட்டு, என் சுதந்திரத்தை நான் வெளிப்படுத்துறேன்”, என்று கூறி முடிக்கிறார்.

பெண்களின் உரிமைக்காக போராடும் இந்த ‘மனிதிகளின்’ நற்செயல்கள் தொரட்டும்!

No comments:

Post a Comment

news today 02.01.2025