Sunday, June 18, 2017

நீட்: தமிழக உரிமையை நிலைநாட்ட என்ன செய்ய வேண்டும்?

ஜி.ஆர்.இரவீந்திரநாத்


நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு ‘நீட்’ நுழைவுத் தேர்வு மூலம்தான் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்ற நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. அடுத்த ஆண்டு முதல் ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, சித்தா, இயற்கை மருத்துவம் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கும் ‘நீட்’ தேர்வு கட்டாயம். பொறியியல் படிக்கவும், வெளி நாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிப்பதற்கும் ‘நீட்’ தேர்வு தேவை என்ற முடிவையும் மத்திய அரசு எடுத்துள்ளது. இந்த நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்காகவே தனி அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சில், பல் மருத்துவக் கவுன்சில் சட்டங்களில் திருத்தங்களைச் செய்தது மத்திய அரசு. மே 7-ல் இந்தியா முழுவதும் 10 மொழிகளில் ‘நீட்’ தேர்வை சி.பி.எஸ்.இ. நடத்தியது. நாடு முழுவதும் 11.3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். ஆனால், நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு என்று கூறிவிட்டு, வெவ்வேறு மாநில மொழிகளில் வெவ்வேறு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. குஜராத்தி மொழியில் வினாத்தாள் எளிமையாக இருந்ததாகவும், வங்க மொழி வினாத்தாள் கடினமாக இருந்ததாகவும் மேற்கு வங்கக் கல்வி அமைச்சர் புகார் கூறினார். மறு தேர்வு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். குஜராத் கல்வி அமைச்சரோ, குஜராத்தி மொழி வினாத்தாள் கடினமாக இருந்ததாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஜவடேகரிடமே புகார் செய்தார். தமிழகத்திலும் ஆங்கில மொழி வினா கடினமாக இருந்ததாகப் புகார் எழுந்தது. வாரங்கலிலோ ஒருபடி மேலே போய், தெலுங்கு மொழி வினாத்தாளை வழங்குவதற்குப் பதில் இந்தி மொழி வினாத்தாள் வழங்கிவிட்டார்கள். அதனால், அங்கு மட்டும் மறு தேர்வு நடத்தப்பட்டது.

இவ்வளவு குழப்பங்களுக்கு நடுவே, சோதனை என்ற பெயரில் மாணவ - மாணவிகளின் உள்ளாடைகளைக் களைந்த சம்பவங்களும் நடந்தன. வெவ்வேறு வினாத்தாள்கள் வழங்கப்பட்டதால், தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மாணவர்கள் வழக்குத் தொடர்ந்தனர். நீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத, மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) உண்மையை ஒப்புக்கொண்டது. வெவ்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்தால் வினாத்தாள் கசிந்துவிடும் என்பதால்தான் வெவ்வேறு வினாத்தாள் வழங்கியதாக சப்பைக்கட்டு கட்டியது. இறுதியில், ‘நீட்’ தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதித்தது உயர் நீதிமன்றம். ஆனால், உச்ச நீதிமன்றமோ ஒரே வாரத்தில் அந்தத் தடையைத் தகர்த்துவிட்டது.

தரத்தின் தரம்
அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை எனக் கூறி, இந்திய மருத்துவ கவுன்சிலால் அனுமதி ரத்துசெய்யப்பட்ட 86 மருத்துவக் கல்லூரிகளில் 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவ ‘நீட்’ தேர்வில் தேர்ச்சிபெறுவதற்கான மதிப்பெண் 7.5% குறைக்கப்பட்டிருக்கிறது. மேற்கு வங்க அரசோ, போலி மருத்துவர்களுக்கு ஆறு மாத காலப் பயிற்சி கொடுத்து, அங்கீகாரச் சான்றிதழை வழங்குகிறது. ஆந்திர அரசும் இதை ஏற்கெனவே அனுமதித்துவிட்டது. ஜார்கண்ட் மாநிலமோ, இளநிலை அறிவியல் பட்டம் வைத்திருந்தாலே அரசு மருத்துவமனைகளில் பணி வழங்குகிறது. இதை எல்லாம் சரி செய்யாமல், ஒரு நுழைவுத்தேர்வு மூலமாக மட்டுமே மருத்துவர்களின் தரத்தை மேம்படுத்திவிடுவோம் என்பது நகைப்புக்குரியது.

தமிழகத்தின் போராட்டம்
தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில், தமிழக மாணவர்கள் படிக்கும் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக வீழ்ச்சியடைந்து வருகிறது. காரணம், இளநிலை மருத்துவ இடங்களில் 15%-யும், முதுநிலை மருத்துவ இடங்களில் 50%-யும், நாம் அகில இந்தியத் தொகுப்புக்கு (All India Quota) வழங்கிவருகிறோம். ஆனால், நாம் வழங்கும் இடங்களின் அளவுக்கு, அகில இந்தியத் தொகுப்பில் இடங்களைப் பெறுவதில்லை.
கூடவே, நமது உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் அனைத்திலும் வட நாட்டினர் கணிசமான இடத்தைப் பிடித்துவிடுகிறார்கள். ஏனைய மாநிலங்களைப் போல் தமிழகத்தின் டி.எம்., எம்.சிஹெச் இடங்களை, அகில இந்திய அளவில் பகிரங்கப் போட்டிக்கு விட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டதன் விளைவு இது. எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற நிறுவனங்களில் இளநிலை மருத்துவக் கல்வி பயின்றவர்களுக்கு முதுநிலை மருத்துவக் கல்வியில் நிறுவன ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதை உச்ச நீதிமன்றமும் ஆதரிக்கிறது. ஆனால், தமிழக அரசின் உயர்சிறப்பு மருத்துவ இடங்களில் தமிழகத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் பறிக்கிறது.

அரசு செய்ய வேண்டியவை
தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள, இளநிலை, முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே கிடைக்கும் வகையில், ஆந்திரத்தைப் போல் தமிழக அரசும் சட்டம் கொண்டுவர வேண்டும். நிகர் நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களின் இளநிலை, முதுநிலை, உயர்சிறப்பு மருத்துவ இடங்களுக்கு, மத்திய அரசே, ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளின் இடங்களுக்கு மாநில அரசுகளே ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ள வேண்டும். இந்திய மருத்துவக் கழகச் சட்டத்தில் இதற்காகத் திருத்தம் கொண்டுவரலாம்.

ஆண்டு வருமானம் 12 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்விக் கட்டணத்தை, தொடர்புடைய அரசுகளே ஏற்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே ஏழை மாணவர்கள்கூட தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் சூழலை ஏற்படுத்த முடியும். இளநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு ஒரு மசோதாவும், முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு ஒரு மசோதாவும் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. இதற்கு இன்னமும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கவில்லை. ஒப்புதல் கிடைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்குரிய அழுத்தத்தை தமிழக அரசும் கொடுக்க வேண்டும்.

சமூக நீதியை நிலைநாட்ட..
இவை எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், நமது மாணவர்களைப் போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்றுவிக்க வேண்டிய கடமையும் அரசுக்கு இருக்கிறது. ஏனெனில், ‘நீட்’ நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு பெற்றாலும், நமது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஏறத்தாழ 3,500 இடங்களுக்கு மட்டுமே பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்த முடியும்.
ஆனால், நமது மாணவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீடு இடங்கள், நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழக இடங்கள், அகில இந்திய தொகுப்பு இடங்கள், ராணுவ மருத்துவக் கல்லூரி இடங்களில் சேர வேண்டுமெனில், ‘நீட்’ தேர்வு மூலம்தான் சேர முடியும். ‘நீட்’ தேர்வில் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சிபெற்றால், நமது மாணவர்கள் 28,000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்களில் இந்தியா முழுவதும் சேர முடியும். ஆயிரக்கணக்கான பல் மருத்துவ இடங்களிலும் சேர முடியும். நுழைவுத் தேர்வுக்கு நன்றாகப் பயிற்சி வழங்கப்பட்டால், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 672 இடங்களிலும், ஜிப்மரில் உள்ள 200 இடங்களிலும் சேர முடியும். மேலும், மருத்துவப் படிப்புகள் தவிர, மத்திய அரசின் ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள 2 லட்சம் இடங்களில் சேர முடியும். தற்போது இந்த இடங்களில் தமிழக மாணவர்கள் 1%-க்கும் குறைவாகவே சேர்கின்றனர். கடந்த 1995 முதல் 2012 வரை தமிழக மாணவர்கள் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் ஆறு இடங்களில் மட்டுமே சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில், தமிழகப் பள்ளிக் கல்வித் துறையில் நிகழ்த்தப்பட்டுள்ள மாற்றங்கள் போதாது. நுழைவுத் தேர்வுக்கான தரமான பயிற்சி, பள்ளிகளிலேயே இலவசமாக வழங்கப்பட வேண்டும். ஏழை, எளிய, பின்தங்கிய மாணவர்கள் அதிகமாகப் படிக்கிற அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். ஆசிரியர் காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். இத்தகைய ஒருங்கிணைந்த நடவடிக்கைகளே நமது மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பை அதிகரிக்கும். சமூக நீதியையும் நிலைநாட்டும்!
- டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்,
பொதுச் செயலாளர், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம்.
தொடர்புக்கு: daseindia@gmail.com

No comments:

Post a Comment

news today 02.01.2025